சிறிலங்காவை பின்நோக்கி நகர்த்தும் மஹிந்த ராஜபக்ஷ!
11 ஐப்பசி 2014 சனி 12:27 | பார்வைகள் : 9963
21 ம் நூற்றாண்டில் உலகம் நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாகரீகமடைந்த நாடுகள் தூர நோக்கோடு சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து இரத்த களரியை தவிர்த்து, நாகரீகமாக பரந்த மனப்பான்மையுடன் செயல்படுகின்றன.
ஏன் இந்தியாவில் கூட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி நிலைமை மேலும் மோசமடையாமல் இந்திய அரசு செய்திருக்கிறது.
இலங்கை மட்டும் இந்த நவீன காலத்தில் இனங்களுக்கிடையில் குரோதம் வளர தூண்டுவதுடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் போட்டா போட்டியை ஊக்குவிக்கும் முகமாக சீனா- இந்தியாவுக்கிடையில் பகையை இடைவெளியை ஏற்படுத்தும் வகையில், இந்தியா அண்டை நாடாக இருந்தும் சீனாவுக்கு முதலிடம் வழங்கி பல ஒப்பந்தங்களை செய்து இந்தியாவுக்கு ஆத்திரமூட்டி வருகிறது.
1956 ம் ஆண்டில் இருந்த நிலைமையை விட மோசமான நிலைமையே இலங்கையில் தற்போது நிலவுகிறது. 1956 ம் ஆண்டில் தமிழர் பிரச்சினை மட்டுமே இருந்தது ஆனால் இன்று இது விரிவடைந்து, தமிழ்- சிங்கள, தமிழ்- முஸ்லிம், சிங்கள- முஸ்லிம் பிரச்சினை என விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த அரசு பௌத்த பேரினவாத மதவாதிகளை ஊக்குவித்து முஸ்லிம்களுக்கெதிராகவும், முஸ்லிம்களுக்கு சலுகைகளை அமைச்சுப் பதவிகளை வழங்கி, அவர்கள் மூலம் முஸ்லிம்களை தமிழ் பகுதிகளில் குடியேற்றி முஸ்லிம் - தமிழ் விரோதம் வளர தூண்டுகிறது.
போர் முடிந்த சூட்டோடு இலகுவாக இதயசுத்தியுடன் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அதன்மூலம் எல்லா இனங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நிலையை மோசமாக்கி இனி தீர்வே கிடைக்குமா? என்று நினைக்கும் அளவுக்கு ராஜபக்ஷ அரசு நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு இனப்பிரச்சினையை தீர்க்க மூன்று மாத அவகாசம் வழங்கி அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இனி தமிழர் தரப்பு 1956 ம் ஆண்டுகளில் செயல்பட்டது போல, அகிம்சை போராட்டம் தொடங்க, முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்களை போல இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறோம் என தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால் நிலமை மோசமடையுமே தவிர குறையப் போவதில்லை.
நாளடைவில் தமிழர் ஆயுத போராட்டத்தையும் முஸ்லிம்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினால் நாட்டின் நிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.
மீண்டும் அப்படி ஒருயுகம் தோன்றினால் போராட்டங்கள், ஹர்த்தால்கள், கடையடைப்புகள் என நீண்டு கொண்டே போய் கடைசியில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிவகுக்க கூடும்.
ராஜபக்ச அரசு நிலைமையை மேலும் மோசமாக்கி குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்கப் பார்க்கிறது. அரசிலுள்ள படித்த அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் கூட பதவி ஆசையாலோ பண ஆசையாலோ என்னவோ நிலைமையை உணர்ந்து விழித்துக் கொள்ளாமல் கண்மூடிதனமாக அரசை ஆதரிப்பானது நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் என சுயநலத்துடன் இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும் பங்காளிகள் என்பதை உணர மறுக்கிறார்கள். தமிழர், முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்கள இளம் சந்ததியும் பாதிக்கப்பட போகிறது.
படித்த ஞானமுள்ள நாட்டுப்பற்றுள்ள அரச சார்பு உறுப்பினர்கள் திறந்த மனதோடு சிறுபான்மையினரின் பிரச்சினைகளை புரிந்து அவற்றை தீர்க்க அரசை தூண்ட வேண்டும்.
முடியாவிட்டால் மனச்சாட்சியை அடகு வைக்காமல் முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து. நாட்டை அழிவில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும். இனி இனப்பிரச்சினையை தீர்க்க முடிவெடுத்தால் கூட தீர்க்க முடியாத அளவுக்கு நிலைமையை ராஜபக்ச அரசே ஏற்படுத்தியுள்ளது.
எமது தேசம் ராஜபக்ச அரசால் 1956 ம் ஆண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை சரித்திரம் அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள் என்பது உண்மை.
ஏறாவூரான்