Paristamil Navigation Paristamil advert login

இந்தியப் பிரதமரை ஜனாதிபதி நியூயோர்க்கில் சந்திப்பாரா?

இந்தியப் பிரதமரை ஜனாதிபதி நியூயோர்க்கில் சந்திப்பாரா?

16 புரட்டாசி 2014 செவ்வாய் 17:15 | பார்வைகள் : 9244


 வவுனியாவில் அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த மத்திய குழுக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.

 
புதுடில்லிப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமக்கு ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். நீங்கள் சர்வதேசத்துடன் நெருங்கிப் பழகுங்கள், அதன்மூலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முடியும் என்று, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எமக்கு ஆலோசனை வழங்கினார் என்று குறிப்பிட்டிருந்தார் இரா.சம்பந்தன்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்படியொரு கருத்தைக் கூறியது ஆச்சரியமான விடயம்தான். ஏனென்றால் இன்னொரு நாட்டின் அரசியல் கட்சியுடனான சந்திப்பில், அந்த நாட்டின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்டுள்ளது என்றால், அது முக்கியமானதாகவும், சற்று விவகாரமானதுமான விடயம்தான்.
 
இந்தியப் பிரதமர் கூறாத ஒரு கருத்தை இரா. சம்பந்தன் பகிரங்கமாக வெளியிட்டிருக்கமாட்டார். எனவே இது உண்மையான கருத்தா என்று ஆராய வேண்டியதில்லை.
 
இந்தியப் பிரதமரைச் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆரம்பத்தில் 30 நிமிடங்களே ஒதுக்கப்பட்ட போதும், அந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நீண்டிருந்தது.
 
அதுவே, இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியிருந்தது. அதைவிட, சந்திப்பில் பேசப்பட்ட எல்லா விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது என்றும், அதனை நாமும் வெளிப்படுத்த மாட்டோம், இந்தியாவும் வெளிப்படுத்தாது என்“றும் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
 
எனவே வெளிப்படையாக கூற முடியாத பகிரங்கப்படுத்தப்பட முடியாத விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. சர்வதேச சமூகத்துடன் நெருங்கிச் செயற்படுவதன் மூலம் மகிந்த ரராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முடியும் என்ற ஆலோசனை எத்தகைய கட்டத்தில் வெளியிடப்பட்டது என்று தெரியவில்லை.
 
அதாவது தனியே இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியப் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டாரா அல்லது பொதுவான அரசியல் நிலை குறித்து விபரிக்கும் போது அவ்வாறு தெரிவித்தாரா என்றும் பார்க்க வேண்டும்.
 
இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் குறித்துப் பேசும் போது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் ஆலோசனை கூறியிருந்தால், அது இலங்கை அரசாங்கத்தை இறுக்கமான போக்கிலிருந்து படியிறங்கச் செய்வதற்கான முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம்.
 
பொதுவான அரசியல் சூழல் பற்றிப் பேசும் போது அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பதவியிறக்குவதற்கான முயற்சியென்று எடுத்துக் கொள்ளலாம்.
 
எது எவ்வாறாயினும் கடும்போக்கில் இருந்து இறங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான ஒரு சமிக்ஞையாகவே இதனை எடுத்துக் கொள்ளலாம்.
 
இந்தியாவைப் பொறுத்தவரையில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்திய போதிலும், அதற்கு இலங்கை அரசாங்கத்திமிருந்து முறையான பதிலேதும் வரவில்லை. அதுமட்டுமன்றி, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு விடயங்களிலும், இந்தியாவின் கருத்தை இலங்கை அரசாங்கம் மதிக்கவில்லை.
 
இது இந்தியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறையின்றி விரிவுபடுத்தப்பட்டதையும் இந்தியா வரவேற்கவில்லை. இத்தகைய பின்னணியில், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து இந்தியாவுக்கு அதிருப்தி எழுந்துள்ளதாகவே தெரிகிறது.
 
நரேந்திர மோடி அரசாங்கம், பதவியேற்று மூன்றரை மாதங்களாகிவிட்ட நிலையில், இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளை இன்னமும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இலங்கைக்கே மேற்கொள்வார் என்று முதலில் நம்பப்பட்டது.
 
அவர் நேபாளம், பூட்டான், பிரேஸில், ஜப்பான் என்று சுற்றி வந்து விட்ட போதிலும், அயல்நாடான இலங்கையை இன்னமும் திரும்பிப் பார்க்கவில்லை.
 
அதுபோலவே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவியேற்ற பின்னர் பல நாடுகளுக்குச் சென்று விட்டார். கடந்த வாரம் கூட அவர் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். சார்க் நாடுகளில் அவர் இன்னமும் பயணத்தை மேற்கொள்ளாத நாடுகள் என்றால் இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான் இந்த மூன்றும் தான் எஞ்சியிருக்கின்றன. இதில் பாகிஸ்தானுக்கான பயணம் என்பது இலகுவாகத் திட்டமிடப்படத்தக்கதொன்று அல்ல. மாலைதீவு, இலங்கை இந்த இரண்டு நாடுகளுக்கும் தான் சுஷ்மா சுவராஜ் இன்னமும் பயணிக்கவில்லை.
 
எதற்காக இலங்கைக்கு வர சுஷ்மா சுவராஜ் தயங்குகிறார் என்பது முக்கியமான கேள்வி. வரும் டிசம்பர் மாதமே அவர் கொழும்பு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன.
 
மிக அருகிலுள்ள நாடாக இருந்தாலும் இலங்கையை இந்தியா சற்று எட்ட வைத்துக் கொள்ளவே முனைகிறது என்பதை அண்மைய அரசியல் நடப்புகளிலிருந்து உணர முடிகிறது.
 
அதுபோலவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட கொழும்புக்கான பயணத்தை எதிர்பார்க்க முடியாது போலுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதுவரை ஒருமுறையே சந்தித்துப் பேசியுள்ளார்.
 
அதுவும் பதவியேற்பு விழாவுக்கு மறுநாள், நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அது வெறும் 20 நிமிடங்கள் வரையே அது நீடித்திருந்தது.
 
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு ஒன்றரை மணி நேரத்தைச் செலவிட்டிருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதனுடன் ஒப்பிடும் போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றே கருதலாம்.
 
இம்மாதம் 24ம் திகதி ஆரம்பமாகும் ஐநா பொதுச்சபையின் பொது விவாதத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நியூயோர்க் செல்கின்றனர். இதன்போது இந்தியப் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதி மகிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதனை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஆனால் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு இன்னமும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
 
நேரம் ஒதுக்கப்படுமா சந்திப்பு நடக்குமா என்பது சந்தேகமே. முதலாவது சந்திப்பை இந்தியப் பிரதமர் விரும்புகிறாரா என்பது முக்கியமானது. இரண்டாவது நரேந்திர மோடி நியூயோர்க்கில் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கிறார். எனவே அயல்நாட்டுத் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியூயோர்க்கில் சந்திக்க நேரம் ஒதுக்குவதற்கு இந்தியத் தரப்பு தயங்கலாம்.
 
கடந்தாண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க காத்திருந்து விட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏமாற்றத்துடன் திரும்பியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
 
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணல், மீனவர்களின் பிரச்சினையைத் தீர்த்தல் இந்த விடயங்களில் இலங்கை அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளை இந்தியா எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
 
இதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில் உயர்மட்டச் சந்திப்புகளை இந்தியா கூடிய விரைவில் தவிர்த்துக்கொள்ளப் பார்க்கிறது.
 
ஆனால் அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ள மகிந்த ராஜபக்ச தரப்பு நிச்சயம் முயற்சிக்கும்.
 
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் மற்றும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அது இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்குமென்றும் கூறப்பட்டது.
 
தம்முடன் இணைந்து செயலாற்றும் ஒருவர் அயல்நாட்டில் தலைமைப் பதவிக்கு வருவதையே இந்தியா மட்டுமல்ல, எந்தநாடுமே விரும்பும். மகிந்த ராஜபக்ச அவ்வாறானதொரு தலைவராக இருந்திருந்தால் இந்தியா அவரது அரசாங்கத்துடன் இன்னும் நெருக்கமாகியிருக்க வேண்டும்.
 
இத்தகைய பின்னணியுடன் பார்க்கும் போது, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு கூறிய ஆலோசனையை குறைத்து மதிப்பிட முடியாதுள்ளது.
 
- ஹரிகரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்