கொழும்பிலுள்ள பாதுகாப்பு அலகை இந்தியா பலப்படுத்தியது ஏன்?
25 ஆவணி 2014 திங்கள் 20:32 | பார்வைகள் : 9293
இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்று கடந்த வாரம், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் இதனைக் கூறுவதற்கு முன்னரே இந்தியா மேற்கொண்ட ஒரு நகர்வு இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகராக - லெப். கேர்ணல் குரிந்தர் எஸ். கிளேயர் என்ற இந்திய இராணுவ அதிகாரியின் நியமனமே இந்த நகர்வாகும்.
இதுவரையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளே பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
இப்போது இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் கப்டன் பிரகாஸ் கோபாலன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு முன்னர் இப்பதவியில் இருந்தவர் கப்டன் கபூர்.
இலங்கையின் அமைவிடம் இந்தியக் கடற்படைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தான் கடற்படை அதிகாரி ஒருவர் இங்கு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு வருகிறார்.
ஆனால் இதுவரையில் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியத் தூதரகத்தில் நியமிக்கப்படாதது போலவே பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியும் இருந்ததில்லை.
திடீரென புதிதாக பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அந்தப் பதவிக்கு இந்திய இராணுவப் பலனாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கிறது இந்திய அரசாங்கம்.
இது ஒன்றும் முக்கியத்துவமற்ற விடயமல்ல.
கடந்த 15ம் திகதி இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கொழும்பில் நடைபெற்ற போது தான் இந்த விபரங்கள் ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.
காலையில் இந்தியா ஹவுஸில் நடந்த கொடியேற்ற விழாவின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய இராணுவ அதிகாரியும் கலந்துகொண்டிருந்தார். ஆனால் அப்போது அவர் முன்னுக்கு வரவில்லை.
மாலையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபியில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவுக்கு இருபுறமும் கப்டன் பிரகாஸ் கோபாலனும் லெப்.கேர்ணல் குரிந்தர் எஸ்.கிளேயரும் நின்றிருந்தனர்.
அதற்குப் பின்னர் தான் இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அலகு வலுப்படுத்தப்பட்ட விவகாரம் வெளியே தெரியவந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் பாலச்சந்திரன் அந்தச் செய்தியை வெளியிட இந்திய இலங்கை ஊடகங்களில் அது பரபரப்பான செய்தியாக மாறியது.
எனினும் லெப்.கேர்ணல் குரிந்தர் எஸ்.கிளேயர் என்பதற்குப் பதிலாக கேர்ணல் குரிந்தர் எஸ்கிளேயர் என்றே செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த இராணுவ அதிகாரியின் பதவிநிலை லெப்.கேர்ணல் என்பதே சரியானது.
அவரது தோட்பட்டையில் காணப்படும் இந்திய அரசுச் சின்னமும் ஒரு நட்சத்திரமும் லெப்.கேர்ணல் தரத்தின் அடையாளங்கள்.
அதைவிடப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள பிரகாஸ் கோபாலன் இந்தியக் கடற்படையின் கப்டன் தர அதிகாரியாவார். அது இராணுவத்தின் லெப்.கேர்ணல் பதவிக்கு நிகரானது.
பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் கடற்படைக் கப்டன் அதிகாரியை விட பதவியில் உயர்ந்த இராணுவ கேர்ணல் ஒருவரை அவருக்கு கீழ் நியமிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் திடீரென இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு வலுப்படுத்தப்பட்டதும் மரபுகளுக்கு மாறாக இராணுவ அதிகாரி ஒருவர் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது உண்மை.
சீனாவுக்கும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் நெருக்கமடைந்து வருவதன் விளைவே இந்த நியமனம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
இலங்கையில் சீனா தனது பொருளாதார நலன்களை மட்டுமன்றி பாதுகாப்பு நலன்களையும் கூட வலுப்படுத்தி வருகிறது.
இலங்கையைத் தமது பாதுகாப்பு நலன்களுக்காகப் பயன்படுத்தவில்லை என்று சீனா கூறிக்கொண்டிருந்தாலும் எந்த நாடும் மூன்றாவது நாடு ஒன்றுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசாங்கமும் கூறிக்கொண்டிருப்பினும் இருதரப்பு உறவுகள் பாதுகாப்பு நலன்களைச் சார்ந்தே முன்னகர்த்தப்படுகின்றன.
இவை குறித்து இந்தியா சந்தேகம் கொள்கிறது என்பதும் அவதானமாக இருக்கிறது என்பதும் வெளிப்படை. அண்மைக்காலமாக இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்வதில் தான் இந்தியாவுக்குத் தயக்கமாக இருக்கிறது.
ஒருவேளை, அதனை வெளிப்படையாக கூறப்போனால் தாம் பயப்படுகிறோம் என்றோ தமது பலவீனம் என்று உணரப்பட்டு விடும் என்றோ இந்தியா அஞ்சுகிறதா என்று தெரியவில்லை.
கொழுமப்ிலுள்ள சீனத் தூதரகத்தில் முதல் முறையாக பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்தியாவும் பதில் பாதுகாப்பு ஆலோசராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கொழும்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் என்றொரு பதவிக்கு யாரும் நியமிக்கப்படும் வழக்கம் இருக்கவில்லை.
இப்போது சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது உண்மையே.
எனினும் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டது, அண்மைய நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. சில ஊடகங்கள் இப்போது தான் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்தே இந்தியாவும் உடனடியாக பதில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமித்ததாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஒரு வருடமாகி விட்டது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாதுகாப்பு ஆலோசகராக சீன இராணுவ அதிகாரி மூத்த கேர்ணல் லீ. செங்லிங் கொழும்பில் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கேர்ணல் லீ.செங்லிங் நியமிக்கட்டதன் உடனடி விளைவாக இந்தியா லெப்.கேர்ணல் குரிந்தர் எஸ்.கிளேயரை நியமிக்கவில்லை.
ஆனால் இந்த நியமனத்தில் சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர் நியமனமும் ஒரு தாக்கத்தைச் செலுத்தியிருந்தது என்பதை மறுக்கமுடியாது.
அதேவேளை, அண்மைக்காலங்களில் சீனாவின் முக்கிய படைத் தளபதிகள், பாகிஸ்தான் தளபதி, அதிகாரிகளின் வருகைகள் மட்டுமன்றி, சீனக்குடாவில் சீன விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் முடிவு கூட இந்தியாவின் இந்த முடிவில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
சீனாவின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் விரிவாக்கப்பட்டதையிட்டு, இந்தியா கவலையோ, அக்கறையோ கொள்ளவில்லை என்ற கருத்தை இந்த நகர்வு மாற்றிவிட்டிருக்கிறது.
இலங்கையை சீனா எந்தளவுக்குத் தனது நலனுக்குப் பயன்படுத்த எத்தனிக்கிறதோ அந்தளவுக்கு இந்தியாவும் தனது நலனில் அக்கறை கொண்டுள்ளது.
இதைத்தான் இந்தியத் தூதரகத்தில் புதிய பிரதிப் பாதுகாப்பு ஆலோசகரின் நியமனம் உறுதிப்படுத்துகிறது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்து கவலை கொள்ளவில்லை என்று இந்தியா கூறுவதும், இலங்கையில் பாதுகாப்பு நல்களை அடைய முயற்சிக்கவில்லை என்று சீனா கூறுவதும், இந்திய நலனுக்கு விரோதமாக எதையும் செய்ய அனுமதியோம் என்று இலங்கை கூறுவதும், உண்மையான விடயங்களல்ல.
சுபத்ரா