ஜெனிவா பொறியில் இருந்து இலங்கை அரசினால் தப்பிக்க முடியுமா?
20 தை 2014 திங்கள் 12:28 | பார்வைகள் : 9455
ஜெனிவா பொறியில் இருந்து இலங்கை அரசினால் தப்பிக்க முடியுமா?
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஆகப் பிந்திய இராஜதந்திர முறுகலை அடுத்து போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைக்க முனைவதாக குற்றம் சாட்டியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
அவர் இவ்வாறு கூறியதற்கு அண்மையில் ஸ்டீபன் ராப் மேற்கொண்ட பயணம் அதை ஒட்டியதாக அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கள் தான் முக்கியமான காரணம்.
போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் அமெரிக்கா கொண்டுள்ள இறுக்கமான நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் வெறுப்புடனேயே பார்க்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று ஸ்டீபன் ராப்பின் பயணத்தின் முடிவில் கூட அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் அமெரிக்கா அழுங்குப்பிடியாக நிற்பதை அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தனது சொந்தப் படைகளின் மீது குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ள அமெரிக்கா, இலங்கைக்கு எப்படி அழுத்தம் கொடுக்கலாம் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கேள்வி எழுப்பியிருந்தார்.
அதை அவர் ஸ்டீபன் ராப்பிடம் நேரடியாக கேட்டிருந்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக ஊடகங்களின் மூலம் கருத்துக்களை வெளியிட்டு நியாயம் கேட்பதே கோத்தபாய ராஜபக்சவினதும் அரசாங்கத்தினதும் வழக்கமாக உள்ளது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட போர்க்குற்றங்கள் தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள இறுக்கமான போக்கு நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்று அவரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரப் போகும் தீர்மானம் எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகளும் இப்போதே எழத் தொடங்கியுள்ளன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தும் என்று பலமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு வந்திருந்த போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருந்தார்.
மார்ச் மாதத்திற்குள் உள்நாட்டு விசாரணைகள் முடிக்கப்படாது போனால் சர்வதேச விசாரணையை பிரித்தானியா வலியுறுத்தும் என்று அவர் எச்சரித்திருந்தார்.
அதற்குப் பின்னர் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையிலேயே பிரித்தானியா கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
அத்தகையதொரு நோக்கத்தை அடைவதற்காக சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளுடனும் பிரித்தானிய அரசு பேச்சுகளை நடத்தி வருகிறது.
ஆனால் அமெரிக்காவோ இதுவரையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியிருக்கவில்லை.
நம்பகமான உள்ளக விசாரணை மூலம் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஆனால் அத்தகையதொரு நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் இன்று வரையில் உருவாக்கவில்லை. உருவாக்க முயற்சிக்கவும் இல்லை.
ஏனோதானோ என்று அமைக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றத்தைக் காட்டி, சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தி விடலாமென்று அரசாங்கம் நினைத்தது மிகப்பெரிய தவறு.
அதிலும் போரில் பங்கெடுத்த அதிகாரிகளையே அதில் மீறல்கள் இடம்பெறாதா என்று விசாரிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டதை உச்சக்கட்ட கேலிக்கூத்தாகவே சர்வதேச சமூகம் பார்த்தது.
அதனால் தான் இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் முதற்கட்ட அறிக்கை கவனிப்புக்கு உள்ளாகாமல் குப்பைக்குள் போனது மட்டுமன்றி இரண்டாவது கட்ட அறிக்கைக்கு என்னவாயிற்று என்று எவரும் கேள்வி எழுப்புவது கூட இல்லை.
உள்நாட்டு விசாரணையை அரசாங்கம் இந்த நான்கரை ஆண்டுகளில் நடத்தியிருந்தால், ஜெனிவா அழுத்தங்களுக்குப் பின்னரேனும் அதற்கு வழி செய்திருந்தால், அமெரிக்காவின் நெருக்குதல்கள் இந்தளவுக்கு தீவிரம் அடைந்திருக்காது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை அடுத்த கட்டம் என்னும் போது, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது மட்டுமே முக்கியமான தெரிவாக இருக்கிறது.
அந்தத் தெரிவை அமெரிக்கா எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற சந்தேகம் கடைசி வரை இருக்கப் போகிறது.
ஏற்கனவே கடந்த இரண்டு முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு கிடைத்தளவு ஆதரவு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்துக்கு இருக்காது.
இதனை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்துள்ளது.
சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்று உணர்ந்தால் அமெரிக்கா அத்தகைய தீர்மானத்தைக் கைவிட வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் குழுவை உருவாக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தால், அது விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் நியாயமற்ற வகையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது என்ற முடிவையே கொண்டு வரும் என்று முன்னாள இராஜதந்திரியான தயான் ஜெயதிலக கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் போரை நிறுத்தவும் கூட அமெரிக்கா முயன்றதாக அமைச்சர்கள் பலரும் இப்போது கூறுகின்றனர்.
அப்போது தனது உறுதியான தீர்மானத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தளர்ந்திருந்தால், பிரபாகரனையே அமெரிக்கா காப்பாற்றிக் கொண்டு சென்றிருக்கும் என்று அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.
சர்வதேச விசாரணை ஒன்று வரும் போது வெறுமனே போர்க்குற்றங்களை மட்டும் அது கவனத்தில் கொள்ளுமா? போரை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை உதாசீனப்படுத்தி விட்டு போரை நடத்தியதையும் கவனத்தில் கொள்ளுமா? என்ற கேள்வியும் உள்ளது.
அவ்வாறு போரை நிறுத்த மறுத்ததற்கும் சேர்த்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை தண்டனை கொடுக்க முற்படலாம்.
அதேவேளை சர்வதேச விசாரணைக் குழுவை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறாவிட்டால் இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதித்து பணிய வைக்கவும் அமெரிக்கா முனையலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அமெரிக்கா எத்தகைய பொருளாதாரத் தடைகளையோ அல்லது பயணத் தடைகளையோ விதித்தால் அதை எதிர்கொள்ளும் சக்தி சின்னஞ்சிறிய இலங்கைத்தீவுக்கு இருக்காது.
ஈரானைப் போன்றோ வட கொரியாவைப் போன்றோ, கியூபாவைப் போன்றோ அமெரிக்காவின் தடைகளுக்கு எதிராக நீண்டகாலம் போராடும் ஆற்றல் இலங்கைக்கு இல்லை.
அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையுமே புரட்டிப் போட்டு விடக்கூடும்.
அத்தகையதொரு நிலை நாட்டில் பல விபரீதமான விளைவுகளுக்கு காரணமாகவும் அமையலாம்.
இதுபோன்ற பயங்கர விளைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அரசாங்கம் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும்.
இப்போதைக்கு உடனடியாக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண சபையுடன் அரசியல் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறார் தயான் ஜெயதிலக.
போர் முடிந்த பின்னர் அரசாங்கம் இழுத்தடித்து வந்த இந்த இரண்டையும் உடனடியாக நிறைவேற்றுவதே மார்ச் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க உள்ள ஒரே வழியாகக் கருதப்படுகிறது.
பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு இந்த இரண்டும் இல்லாத எந்தவொரு மாற்று வழியில் சென்றாலும் அரசாங்கத்தினால் ஜெனிவா பொறியில் இருந்து தப்பிக்க முடியாது.
அதுவும் மாற்று வழிகளுக்கான கால அவகாசம் குறைந்து கொண்டே வருகின்ற நிலையில், அரசாங்கம் எந்த வழியைத் தேர்வு செய்யப் போகிறது?
- சத்ரியன்