Paristamil Navigation Paristamil advert login

கோத்தபாயவின் அடுத்த இலக்கு

கோத்தபாயவின் அடுத்த இலக்கு

15 மார்கழி 2013 ஞாயிறு 16:22 | பார்வைகள் : 10015


போர் முடிவுக்கு வந்தபின்னரும், வடக்கில் இராணுவத் தலையீட்டை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும், வடக்கு மாகாண சபையினாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனாலும், வடக்கில் இராணுவத் தலையீடு என்பதற்கும் அப்பால், இராணுவத்தை நிரந்தரமாக நிலைகொள்ள வைப்பதற்கான நடவடிக்கைகளே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் இயல்பு வாழ்வில் படையினரின் தலையீடு என்பது வேறு.

நிரந்தரமாகவே, இராணுவத்தை நிலை கொள்ள வைப்பது என்பது வேறு.

போர் நடந்த காலங்களில் இருந்ததை விடவும், தற்போது, இயல்பு வாழ்வில் இராணுவத் தலையீடுகள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், அது முற்றிலுமாக நீங்கி விட்டதாகக் கருத முடியாது.

அதேவேளை, இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள் வடக்கைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான செயற்றிட்டங்கள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தன்னிடமுள்ள மிகப் பெரிய படைவளத்தைக் காரணம் காட்டியும் - அதை நிலை நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுகிறது என்பதைக் காரணம் காட்டியும், அரசாங்கம் வடக்கில் தாராளமாகவே இராணுவ வலயங்களை உருவாக்கி வருகிறது.

வடக்கிலுள்ள படையினரை அகற்றக் கோருவது போன்று எல்லா மாகாணங்களும் படையினரை அகற்றும்படி கோரினால், அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்த முடியும்? என்று சில மாதங்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அண்மைக்காலங்களில் சில யோசனைகளை முன்வைத்திருந்தார்.

ஐ.நா. அமைதிப்படையில் படையினரை அதிகளவில் இணைத்துக் கொள்வது என்பது அதில் ஒன்று.

படிப்படியாகப் படையினரின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களை சிவில் வாழ்வுக்கு கொண்டு வருதல் என்பது இரண்டாவது.

ஐ.நா. அமைதிப் படையில் அதிகளவு படையினரை இணைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதற்கு ஒரே காரணம், வருமானத்தைத் தேடிக் கொள்வதே தவிர, படைத் தலையீடுகள் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அல்ல.

அடுத்து படைக்குறைப்பு என்பதை அரசாங்கம், படையினருக்கு செய்யும் ஒரு பெரிய துரோகம் போலவே பிரசாரம் செய்கிறது.

போரில் வெற்றி பெற்றுத் தந்த படையினருக்கு செய்யப்படும் துரோகமாகக் காட்டி தனது செயலை நியாயப்படுத்த முனைகிறது அரசாங்கம்.

போருக்குப் பிந்திய அமைதிச் சூழலில் படைக்குறைப்பு என்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். ஆனால், இலங்கை மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து கொள்ள முனைகிறது.

காரணம் என்னவென்றால், வடக்கு, கிழக்கை இராணுவச் சூழலில் வைத்திருப்பதன் மூலமே, நெடுங்காலத்துக்கு இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்ற கணிப்புத்தான்.

இதற்காக அண்மைக்காலமாக, வடக்கில் இராணுவ 'கன்டோன்மென்ட்'கள் உருவாக்கப்படுவதும், புதிய சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்படுவதும் அதிகரித்துள்ளன.

இராணுவக் குடியிருப்புகளின் மூலம், நிலங்களை அபகரிக்கும், தந்திரோபாயத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய நாடு இஸ்ரேல்.

பாலஸ்தீன நிலப்பகுதிகளிலும், அதை அண்டிய பகுதிகளிலும், இஸ்ரேல் அமைத்த இராணுவக் குடியிருப்புகள், இன்றைக்கும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருந்து வருகிறது.

இதே பாணியிலான - இஸ்ரேலின் ஆலோசனையின் பேரிலான இராணுவக் குடியிருப்புகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினாலும் உருவாக்கப்பட்டன.

படையினர் மற்றும் ஊர்காவற்படையினரின் குடும்பங்களை முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்ட எல்லைகளில் குடியமர்த்தியதன் மூலம், ஜே.ஆர்.ஜயவர்தன வெலிஓயாவில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, விடுதலைப் புலிகளின் நீண்டகாலப் போர் இடமளித்திருக்கவில்லை.

இல்லாவிட்டால், இன்று வெலிஓயா மட்டுமன்றி, முல்லைத்தீவின் தெற்குப் பகுதி, வவுனியாவின் கிழக்குப் பகுதி என்பன முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டிருக்கும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், வெலிஓயாவிலும், மன்னாரிலும் புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இவை தானாக இடம்பெறும் குடியேற்றங்களல்ல. இவற்றை இராணுவமே ஊக்குவிக்கிறது; ஒழுங்கமைக்கிறது. குறிப்பாக வன்னிப் படைத் தலைமையகம் இதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக வெலிஓயாவில் புதிதாக நாமல்கம உள்ளிட்ட பல புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்களக் குடியேற்றங்களை ஒழுங்கமைத்து, அவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வெலிஓயாவில் ஒரு தனியான இராணுவ டிவிஷனையே இராணுவம் நிலை நிறுத்தியுள்ளது.

தற்போது அங்கு 62ஆவது டிவிஷன் நிலை கொண்டுள்ளது.

நாலாம்கட்ட ஈழப்போர் காலத்தில் கூட வெலிஓயாவில் ஒரு 'பிரிகேட்' தான் நிரந்தரமாக நிலை கொண்டிருந்தது. ஆனால், இன்று அங்கு டிவிஷன் படையினர் நிறுத்தப்பட்டு அதை ஒரு இராணுவக் குடியேற்ற வலயமாக உருவாக்கி வருகிறது அரசாங்கம். அங்கு சிங்கள மக்கள் மட்டும் குடியேற்றப்படவில்லை.

இராணுவத்தினருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவர்களின் குடும்பங்கள் குடியமர்த்தப்படுகின்றன. இன்னும் சிறிது காலத்தில் வெலிஓயா மிகப் பெரியதொரு இராணுவக் குடியேற்ற வலயமாக மாறிவிடும். இதுபோன்று மன்னாரிலும், பல இடங்களில் குடியேற்றங்கள் நிகழ்கின்றன.

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படைத்தளங்களாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கூட படிப்படியாகவும், கொஞ்சம் கொஞ்சமாகவும், இத்தகைய குடியேற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் வடக்கில் இராணுவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற கருத்தரங்கு கடந்தவாரம் 62வது டிவிஷன் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டிருக்கிறது.

அதில், 2020ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் குறித்தும், வடக்கின் அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் இராணுவப் படைகளின் வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெலிஓயாவில் நிலைகொண்டுள்ள 62ஆவது டிவிஷன் படை அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கு, எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை, ஊகிக்க அதிக நேரம் தேவைப்படாது. இதற்கிடையே, தற்போது பலாலியை ஒரு 'கன்டோண்மென்ட்' என்று அரசாங்கம் அழைக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாக 'கன்டோண்மென்ட்' என்பது இராணுவக் குடியிருப்பு வளாகப் பகுதியை தான். இத்தகைய படை விரிவாக்கங்களும், குடியேற்றங்களும் வடக்கில் படைசெறிவை நிலையாகப் பேணிக் கொள்வதற்கும், இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கும் வெகுவாகக் கைகொடுக்கும்.

இத்தகைய பேராபத்தை உணர்ந்தே, படைத் தலையீடுகளை நிறுத்தி, படைகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசாங்கம் அதற்கெல்லாம் செவி சாய்க்கின்ற நிலையில் இல்லை.

குறிப்பாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகவும் உறுதியான, கடும்போக்கை கடைப்பிடிப்பவராக இருந்து வருகிறார். இதனால் தான், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி சலோக்கா பெயானியிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் படையினர் வடக்கில் இருந்து விலகிச் செல்லமாட்டார்கள் போலுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே சூழல் தொடருமானால், 100 ஆண்டுகளல்ல, அதற்கு அப்பாலும், வடக்கில் இராணுவப் பிரசன்னமும், இராணுவக் குடியேற்றங்களும் பல்கிப் பெருகுமே தவிர குறைந்து போகாது. ஏனென்றால், இது ஒன்றும் தமிழர்கள் மீளவும் ஆயுதமேந்தி விடுவார்கள் என்ற பயத்தினால் ஏற்படுத்தப்படும் முன்னேற்பாடான பாதுகாப்புக் கவசமல்ல.

வடக்கின் இனப்பரம்பலையே மாற்றியமைப்பதற்கான மூலோபாயம். வடக்கு உள்ளிட்ட எந்த மாகாணத் தையும், எந்த இனமும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதே பாது காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் சித்தாந்தம்.

இப்போதுள்ளது போன்ற இராணுவத் தலையீடுகளும், இராணுவக் குடியேற்றங்களும் தொடர்ந்து மேற் கொள்ளப்படுமேயானால், அந்த இலக்கை அவரால் மிக விரைவாகவே அடைந்துவிட முடியும்.

- சுபத்ரா

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்