Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்குமா சீனா?

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்குமா சீனா?

2 மார்கழி 2013 திங்கள் 12:25 | பார்வைகள் : 9107


இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக, அண்மையில் சீனா வெளியிட்ட கருத்து பெரும் சர்சசைக்குரியதொன்றாகப் பார்க்கப்பட்டது.

னேன்றால் இலங்கை தொடர்பாக சீனா இதுவரை அத்தகைய கருத்தை முன்னெப்போதும் வெளியிட்ட ஒரு நாடல்ல.

போரின் போதும் சரி அதற்குப் பின்னரும் சரி, மனிதஉரிமை மீறல்கள் நிகழ்ந்ததா இல்லையா என்றெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத நாடு அது. அவ்வாறு மனிதஉரிமை மீறல்கள் நிகழ்ந்திருந்தாலும் கூட அது இலங்கையே தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை என்றே சீனா கூறி வந்தது. பல சந்தர்ப்பங்களில், மனிதஉரிமை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியா அழுத்தம் கொடுத்த போது சீனா உண்மையான நட்புறவையே கொண்டுள்ளது என்று இலங்கையின் அரசியல் தலைவர்கள் கூட்டிக் காட்டியிருந்தனர்.

ஏன் எதற்கு என்று கேட்காமல் பணத்தைக் கொடுக்கிறது, உள்நாட்டு விவகாரங்களில் எப்போதுமே தலையிட்டதில்லை. சர்வதேச அளவில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது, உற்ற தோழனாக நின்று கைகொடுக்கும் நாடு என்று சீனாவைப் பற்றி ஜனாதிபதியும், அமைச்சர்களும் வெகுவாகப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஒருவகையில் இது இந்தியாவின் தலையீடுகளை விசனத்துடன் வெளிப்படுத்துவதற்கான கருத்தாகவும் அமைந்திருந்தது.

அதேவேளை உலகின் மற்றெல்லா நாடுகளும், மனித உரிமைகளைப் பற்றியும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை் குறித்தும் விமர்சனங்களை எழுப்பிக் கொண்டிருக்க சீனா மட்டும் எதைப்பற்றியுமே கேள்வி எழுப்பாமலும், அதேவேளை, தேவையான நிதியுதவிகளையும் செய்து கொண்டிருந்தது. இது அரசாங்கத்துக்கு மிகவும் பிடித்தமான அணுகுமுறையாகப்பட்டது.

அதனால் தான் போருக்குப் பிந்திய கடந்த நான்கரை ஆண்டுகளில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இன்னும் அதிகமாக நெருக்கமடைந்தன. ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் 2012ல் கொண்டு வரப்பட்ட போது, பேரவையின் ஒரு உறுப்பு நாடாக இருந்த சீனா அதனைத் தோற்கடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இரண்டாவது முறையாக கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சீனா பேரவையில் உறுப்புரிமை கொண்டிராத போதும் வெளியில் இருந்து இலங்கைக்கு பக்கபலமாகச் செயற்பட்டது.

இப்போது மீண்டும் ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் சீனா அங்கத்துவத்தை பெற்றுள்ளது. வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் சீனா, ரஷ்யா, கியூபா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன. இந்தநிலையில் தான், இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான சீனாவின் கருத்து வெளிப்பட்டது.

கொமன்வெல்த மாநாடு நடைபெற்ற சூழலில் மனிதஉரிமைகள் விவகாரத்தால், இலங்கை கடுமையான அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கயின் கங், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இலங்கை முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அதற்கு உலக நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதுவும் சீனா ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் வெளியான இந்தக் கருத்து பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

இது இலங்கைக்கு எதிராக சீனாவும், நிலைப்பாட்டை எடுத்துள்ளது போன்று ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. அதாவது இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாடு மாற்றம் பெற்றுள்ளதான கருத்து உள்ளூர் ஊடகங்களில் மட்டும் வெளியாகவில்லை.

பிரிஐ போன்ற செய்தி நிறுவனங்களை நம்பியுள்ள இந்திய ஊடகங்களும் கூட இதே கருத்தைத்தான் வெளிப்படுத்தின. இலங்கை அரசாங்கத்துக்கும் கூட சீனாவின் இந்தக் கருத்து சற்று அதிர்ச்சியைக் கொடுத்ததாகவே தகவல்கள் உள்ளன.

ஏனென்றால் மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் மனிதஉரிமைகள் விவகாரத்தில் இலங்கை மீது மன்னெப்போதும் இல்லாதளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், சீனாவும் இப்படியொரு கருத்தை மன்வைத்ததையிட்டு இலங்கையால் நிச்சயம் நிம்மதியாக இருந்திருக்க முடியாது. இன்று இலங்கையின் பொருளாதார, வெளிவிவகார நகர்வுகள் அனைத்துமே சீனாவை மையப்படுத்தியதாகவும் அதனை ஆதாரமாகக் கொண்டதாகவுமே இருக்கிறது.

இதனால் சீனாவின் இந்தக் கருத்து இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து தொடர்பாக விளக்கமளித்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது முக்கியமான இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

ஏனென்றால் இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான கருத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் முறையிட்டதாகவும், தகவல்கள் உள்ளன. இதையடுத்து அப்படி எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது சீனத் தூதரகம். அதில் சீன வெளிவிவகார அமைச்சின் கருத்தை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய நல்லிணக்கத்தை நோக்கி, மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதில் முன்னேற்றத்தை எட்ட இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்றும், இலங்கையின் உறுதிப்பாட்டுக்கான உகந்த சூழலை உருவாக்குவதற்கான புறச்சூழலை உருவாக்க உதவவேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் சீனா கோருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீஜிங்கில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட கருத்தை இந்த அறிக்கை நிராகரிக்கவில்லை.

அதாவது மனிதஉரிமைகளை வைத்து இலங்கைக்கு வெளியக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை சீனா எதிர்க்கின்ற போதிலும், மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும் என்ற கருத்தை அந்த நாடு வலியுறத்தத் தொடங்கியுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரையில் மனிதஉரிமைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத நாடு என்பது உலகறிந்த உண்மை. இரும்புப்பிடிக்குள்ள நாட்டை ஆளும் சீனத் தலைவர்கள் அங்கு மனித உரிமைககைள் பற்றிய விவாதங்கள் எழுலதை எப்போதுமே விரும்புவதில்லை. தியனென்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய நாடுதான் சீனா.

ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பலியெடுத்த அந்த நிகழ்வு சீனாவுக்கு இன்றும் ஒரு கறுப்பு அடையாளத்தையே கொடுக்கிறது. இப்போது சீனா அந்தளவுக்கு இறுக்கமான நிலையை கொண்டிருக்காது போனாலும், கொஞ்சமாவது மனிதஉரிமைகள் குறித்து சிந்திக்கவும், பேசவும் தொடங்கியுள்ளது.

ஏனென்றால் ஐநா மனிதஉரிமைகள் பேரவை ஒரு வலுமிக்க அமைப்பாக மாறத் தொடங்கியுள்ள நிலையிலும் அது ஐநா பாதுகாப்புச் சபையைப் போன்றல்லாது வீட்டோ அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லாத நிலையிலும் உலகளவில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள சீனாவுக்கு இந்த மாற்றம் தேவைப்படுகிறது.

எனவே சீனா மனிதஉரிமைகள் தொடர்பான தனது கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் சற்று மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அமெரிக்காவை விடவும் மேலான சக்தியாக மேலெழ விரும்பும் சீனாவுக்கு மனிதஉரிமைகள் ஒரு தடையாக மாறிவிடக் கூடாது என்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.

எனவே மனிதஉரிமைகள் தொடர்பாக சீனாவும் தனக்குள்ள கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளது. அத்தகைய பொறுப்புணர்வின் வெளிப்பாடாகவே இலங்கை தொடர்பான சீனாவின் கருத்து வெளிப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனை இலங்கை தொடர்பான சீன நிலைப்பாட்டின் பெரிய மாற்றமாகவோ இலங்கைக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் கருத்தாகவோ கருத முடியாது. அதேவேளை, இது இலங்கைக்கு முற்றிலும் சாதகமான சூழலும் அல்ல. வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான கொள்கையை சீனா சூசகமாக வெளிப்படுத்தும் என்று சிலர் நம்புகின்றனர். அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

- ஹரிகரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்