ஊடகங்களால் உருவப்பட்டுள்ள மஹிந்தவின் கோவணம்!

16 கார்த்திகை 2013 சனி 11:55 | பார்வைகள் : 12562
பிரித்தானியாவின் முன்னாள் அடிமைகள் கூடி கொண்டாடும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தி நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட மகிந்தவின் சகல துவாரங்களிலும் சர்வதேச ஊடகங்கள் ஆப்புகளை சொருகியுள்ளன.
பொதுநலவாய மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை பெறுவதுடன் நடந்த போர்க்குற்றங்களை மாநாட்டு கம்பளத்தின் கீழ் மறைத்துவிடலாம் என்ற மகிந்தவின் கணக்கு பொய்த்து போயிருக்கிறது.
இந்த மாநாட்டை புறக்கணிப்பதன் மூலமே இலங்கைக்கு அழுத்தத்தை வழங்கலாம் என்றும் இல்லை கலந்துகொள்வதன் மூலமே அழுத்தத்தை வழங்கலாம் என்றும் இந்த மாநாடு தொடர்பில் இரு வேறுபட்ட வாதங்களை காணக்கூடியதாக இருந்தது.
கனடா,மொரிசியஸ் நாடுகள் மாநாட்டை முழுமையாக புறக்கணித்தன. உலகத்திலேயே எதிலும் சேர்த்தியில்லாத 'கைப்பிள்ளை' நாடான இந்தியா வெளியுறவு துறை அமைச்சரை அனுப்பி சமாளித்து கொண்டது.
இதில் ஒரு சிறிய தீவான மொரிசியஸ் நாடு போர் குற்றத்திற்கு எதிரான கண்டனத்தை மிக பலமாக பதித்து இருக்கிறது. தனது நாட்டில் நடக்கவிருந்த பொதுநலவாய மாநாடு மாநாட்டுக்கான வாய்ப்பை பலி கொடுத்து இந்த முடிவை எடுத்த மொரிசியஸ் மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடே தனது முன்னாள் அடிமைகள் நடத்துவது என்ற நிலையில் பிரித்தானியா வேறு மாதிரி நடந்து கொண்டது. பிரித்தானியாவின் செல்ல பிள்ளையான இலங்கையில் நடக்கும் முன்னாள் அடிமைகளின் மாநாட்டை புறக்கணிப்பது ஆண்டான் பிரித்தானியாவுக்கு சாத்தியமானதல்ல. அரசனில்லாமல் அடிமைகள் ஒன்று கூடுவதால் என்ன பலன்?
ஒரு புறம் மகிந்தவையும் சிங்கள மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். மறுபுறம் போர்குற்றத்தால் எழுந்துள்ள அழுத்தத்தை சமாளிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் பிரித்தானியாவின் வழமையான நரித்தனம் வெளிப்படுகிறது.
மகிந்தவையும் சிங்கள மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் பொறுப்பை இளவரசர் 'கமிலா புகழ் சார்ல்ஸ்' எடுத்துக்கொண்டார். மகிந்தவுடன் விருந்துண்டு பிரித்தானியாவின் ஆதரவு உங்களுக்குத்தான் என்று காட்டிக்கொண்டார்.
போர்குற்றத்தால் எழுந்துள்ள அழுத்தத்தை சமாளிக்கும் பொறுப்பை பிரதமர் கமரூன் எடுத்துக்கொண்டார். யாழ்ப்ப்பாணத்திற்கு சென்றார், மக்களை சந்தித்தார், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக காட்டிக்கொண்டார்.
இந்த இடத்தில் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.கனடா, மொரிசியஸ் நாடுகள் புறக்கணித்தன, இந்திய பிரதமர் செல்லவில்லை என்பது முக்கிய விடயமாக கருதப்பட்டது. அது தொடர்பில் கவனமும் விவாதமும் கலந்துரையாடலும் எழுந்தன. எனவே புறக்கணிப்பாலும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்பட்டமை வெளிப்படையானது.
அதேபோல கமரூன் கலந்து கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை சந்தித்ததும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது என்பதும் வெளிப்படையானது. எனவே இரண்டு விதமாகவும் அழுத்தம் ஏற்பட்டே இருக்கிறது.
எல்லோரும் எதிர்பார்த்தபடி தமக்கான நிகழ்ச்சி நிரலில் சாதகமாக பயணிப்பதாக தோன்றியது. எனினும் பால் கடலை மகிந்த அதிகமாக கடைந்து விட்டதால் எதிர்பாராத ஒரு திருப்பமாக வடக்கு மக்கள் மீது சர்வதேச ஊடக வெளிச்சம் விழுந்தது. மாநாட்டு செய்திகளை சேகரிக்க வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களை கவனத்தில் கொண்டார்கள்.
கொடிய போரின் வலிகளை சுமந்த மக்கள் அரச தடைகளையும் மீறி சர்வதேசத்துடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று மேற்கின் பல ஊடகங்களும் மாநாட்டு செய்திகளை விட பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைக்கு வந்து சுயாதீனமாக மக்களை சந்தித்து தகவல்களை சேகரிக்க முடியாதபடி மகிந்த அரச அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. ஆனால் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்க மிக அதிகளவு வெளிநாட்டு ஊடகவியலார்கள் சட்ட ரீதியாக வந்து இறங்கி இருக்கிறார்கள். வடக்கிற்கு செல்கிறார்கள், தமிழர்களை சந்திக்கிறார்கள், மக்கள் சொல்வதையும் மனித உரிமை வாதிகள் சொல்வதையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.
போர்க்குற்றம் தொடர்பில் பலரும் வெளிப்படையாக பேசவும் விவாதிக்கவும் பெரும் களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியாத மக்கள் கூட தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மகிந்தவுக்கு ஆதரவாக போர்க்குற்றங்களை பேசாமல் மறைத்தவர்கள் கூட பேசாமல் இருக்க முடியாத நிலையை காணக்கூடியதாகவுள்ளது. நீதியான விசாரணை வேண்டும் என்ற வாதம் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
மாநாட்டை நடத்தி மாலை மரியாதைகளுடன் தலை நிமிர்ந்து சிங்கமாக நடக்க ஆசைப்பட்ட மகிந்த இப்போது அசிங்கப்பட்டு போயிருக்கிறார். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன….
ஊடகங்களால் மகிந்தவின் கோவணம் உருவப்பட்டிருக்கிறது.
-ஜீவேந்திரன்