படை அதிகாரிகளை விரட்டும் போர்க்குற்ற ஆதாரங்கள்!
4 கார்த்திகை 2013 திங்கள் 18:01 | பார்வைகள் : 9825
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீண்டும் ஒரு சர்வதேச கருத்தரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸும் அவருடன் போரில் பங்கெடுத்த முக்கிய இராணுவ அதிகாரிகளும் இத்தகைய நிலைக்கு உள்ளாவது இதுதான் முதல் தடவையல்ல.
மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் இத்தகைய பல சம்பவங்களை இலங்கை இராணுவம் எதிர்கொண்டுள்ளது. இப்போது மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்கு அனுமதி மறுத்திருப்பது எந்தவொரு தனிப்பட்ட நாடுமல்ல, சர்வதேச செஞ்சிலுவைக் குழுதான் அனுமதியை மறுத்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைக் குழு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆபத்தான நிலைமைகளில் சுகாதாரக் கவனிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கை அடுத்த மாதம் நடத்தவுள்ளது.
இந்தக் கருத்தரங்கிற்கு இலங்கை இராணுவத்தின் பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சர்வதேச செஞ்சிலுவைக் குழு கோரியிருந்தது. அதற்கமைய இலங்கை இராணுவத் தலைமையகத்தினால் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் அதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழு நிராகரித்துவிட்டது.
இந்த நிராகரிப்புக்கான காரணத்தை சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிடவில்லை. எனினும் பொறுப்புக்கூறல் விவகாரமே அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கான காரணமாக கருதப்படுகிறது. ஏனென்றால் இதே காரணத்திற்காக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸும், வேறு சில இராணுவ அதிகாரிகளும் சர்வதேச அளவில் ஏற்கனவே இதுபொன்ற சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
அதிலும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸும், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் தான் அதிகளவிலான நெருக்கடிக்கு உள்ளானவர்கள்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐநாவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதால் ஓரளவுக்குத் தப்பித்துக் கொண்டுள்ளார். ஆனால் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்குத்தான் எங்கு சென்றாலும் பிரச்சினையாக உள்ளது.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கட்டளை வழங்கும் முக்கிய இடத்தில் இருந்தவர்.
2007ல் மடுப் பகுதியில் இறுதிக்கட்டப் போர் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே அதில் பங்கேற்ற 57வது டிவிஷன் விடுதலைப் புலிகளின் ஒரு எதிர்த்தாக்குதலால் நிலைகுலைந்து போனது.
அதன் பின்னர் 57வது டிவிஷன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மானவடுவை நீக்கிவிட்டு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை அந்தப் பதவிக்கு நியமித்திருந்தார் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
அன்று முதல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில் 57வது டிவிஷனின் தளபதியாக பதவி வகித்திருந்தார் இவர்.
இந்தப் போரின் போது முக்கிய தாக்குதல்களுக்கு இவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் போரின் முக்கிய பங்கெடுத்த இவரையும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவையும் கௌரவப்படுத்தும் வகையில் இராஜதந்திரப் பதவிகளை வழங்கியது அரசாங்கம்.
2009 செப்ரம்பரில் ஜேர்மனிக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்ட இவரிடம் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளையும் கவனிக்கும் பொறுப்பு இருந்தது.
இந்தநிலையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்கு எதிராக சுவிஸில் போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதற்கிடையில் அவர் கொழும்பு திரும்பிவிட்டார். ஆனாலும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தமது நாட்டு எல்லைக்குள் பிரவேசித்தால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார் சுவிற்சலாந்தின் சட்டமா அதிபர்.
இதுதான் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சர்வதேச அளவில் சந்தித்த முதல் நெருக்கடி. இதற்குப் பின்னர் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் குன்னூரில் உள்ள வெலிங்டன் பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றிற்குச் சென்றிருந்தார் இவர். அவருக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்ததன் விளைவாக வெலிங்டனில் இருந்து அவசரமாக டேராடூன் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து கடந்த செப்படம்பர் மாதம் நியூசிலாந்தின் ஓக்லாந்து நகரில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தினால் இராணுவ முகாமைக் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கிற்கு மேஜர் ஜெனரல்கள் ஜெகத் டயஸ், சுதந்த ரணசிங்க, பொனிபஸ் பெரேரா என மூன்று பேரை அனுப்ப இராணுவத் தலைமையகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால் மேஜர் ஜெனரல்கள் ஜெகத் டயஸும், சுதந்த ரணசிங்கவும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் சிக்கியுள்ளவர்கள் என்று காரணம் காட்டி கருத்தரங்கில் பங்கேற்க மறுத்துவிட்டது அமெரிக்கா.
இதனால் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மட்டும் அதில் பங்கேற்றார்.
இதில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இரண்டு தடவைகள் அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
காரணம் 53வது டிவிஷனின் தளபதியாக இருந்தவர் என்பதினால் தான்.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க 53வது டிவிஷனின் தளபதியாக பதவி வகித்தது போர் முடிவுக்கு வந்த பின்னர்தான்.
ஆனாலும் அந்தப் படைப் பிரிவுடன் தொடர்புடைய அதிகாரிகளை அமெரிக்கா போருக்கு முந்திய பிந்திய என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.
போரின்போது 53வது டிவிஷன் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வலுவாக நம்புகிறது.
53வது டிவிஷனால் கொல்லப்பட்டதாக 2009ல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்த விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரத்தைக் கடந்த வாரம் சனல் 4 வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஆதாரங்கள் தான் 53வது டிவிஷன் உள்ளிட்ட படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கியவர்களை அமெரிக்கா நிராகரிக்க காரணமாகும்.
இது இலங்கை அரசாங்கத்துக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிராகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகள் பொறுப்புக்கூறல் விவகாரங்களினால் சர்வதேச அளவில் ஓரம்கட்டப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை தென்னாபிரிக்கா பிரதித் தூதுவராக ஏற்க மறுத்துவிட்டது. ஏற்கனவே அவரை மேலதிய இராணுவப் பயிற்சிக்காக அனுமதிக்க மறுத்துவிட்டதுடன் பிரபலமான அமெரிக்க போர்க் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதித்தது. ஆனாலும் ஐநா பிரதித் தூதுவராக இருப்பதால் ஓரளவுக்கு இவர் தப்பிக் கொண்டுள்ளார்.
மேலும் சிலருக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்க மறுத்துவிட்டது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும், மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவும் பிரிட்டனுக்குள் நுழைந்தால் போர்க்குற்ற விசாரணைகளை சந்திக்க நேரிடும். அங்கு இவர்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறாக போரில் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இராணுவ அதிகாரிகளை மனித உரிமை மீறல்கள் ஓட ஓட விரட்டுகின்றன. வரும் காலங்களில் மேலும் பல இராணுவ அதிகாரிகள் இத்தகைய நிலையை எதிர்கொள்ளலாம்.
இந்தநிலையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதி மறுத்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சும் அரசாங்கமும் கடுமையாகவே எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இடையிலான உறவுகளில் தேக்கநிலை காணப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையை விட்டு வெளியேற்றும் முடிவை அரசாங்கம் எடுத்தால் கூட ஆச்சரியமில்லை. ஆனால் அதை அரசாங்கம் உடனடியாக கொமன்வெல்த் மாநாடு முடியும் வரை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லையென்று தெரிகிறது.
சுபத்ரா