Paristamil Navigation Paristamil advert login

பொதுநலவாய மாநாடு! சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா?

பொதுநலவாய மாநாடு! சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா?

29 ஐப்பசி 2013 செவ்வாய் 08:27 | பார்வைகள் : 9564


சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது.

நவம்பர் 2013ல் சிறிலங்காவில் முதன்முதலாக பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடானது பிறிதொரு காரணத்திற்காகவும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. அதாவது 1976ல் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இடம்பெற்றமை தவிர, சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பிறகு உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய உச்சிமாநாடானது சிறிலங்காவில் நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இவ்வாறான மைற்கற்களை இடுவதற்கான தயார்ப்படுத்தல்களை சிறிலங்கா மேற்கொள்கின்ற அதேவேளையில், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தொடர்ந்தும் சவால்களைச் சந்தித்து வருகின்றது. புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள், சிறிலங்காவின் சமாதான நடவடிக்கையில் வெளிநாட்டு அனுசரணையாளர்கள் பங்கெடுத்தமை மற்றும் 1987ல் வெளிநாட்டு அமைதிப் படைகள் சிறிலங்காவில் கடமையாற்றுவதற்காக அழைக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணிகளால் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்காவில் யுத்தம் மிகத் தீவிரமுற்றிருந்தது. இவ்வாறு நீண்ட யுத்தத்தின் இறுதியில், சிறிலங்காவானது அனைத்துலக சமூகத்தால் உற்றுநோக்கப்பட்டது.

சிறிலங்காவின் போருக்குப் பின்னான இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மீளிணக்கப்பாடு மற்றும் மனித உரிமை விவகாரங்களால் பாதிக்கப்படுகின்றன. மனித உரிமையை மதித்து நடத்தல் மற்றும் உள்நாட்டில் வாழும் சமூகங்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்துதல் போன்றன சிறிலங்காவுக்கு புதிய விடயமல்ல. ஆனால் சிறிலங்காவின் வரலாறு, கலாசாரங்கள் மற்றும் சட்ட ஒழுங்குகள் போன்றன நாட்டை ஆளுபவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சிறிலங்காவானது சுயாதீனமாகவும் நம்பகமாகவும் செயற்படக் கூடிய ஆட்சி முறைமை ஒன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறான ஒன்றை சிறிலங்காவானது மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றையும் விசாரிப்பதற்கு சிறிலங்காவானது சுயாதீனமான நம்பகமான கட்டமைப்புக்களையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் போன்ற இரண்டு தேசிய ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் அரசாங்கத்தை சார்ந்ததாக இருந்தன. இந்நிலையில் இவ்வாறான தேசிய விசாரணை ஆணைக்குழுக்கள் வெளிநாட்டு உறவுகளைப் பேணும் அதேவேளையில் நம்பகமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

தற்போது சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்டு மே 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தனது நாட்டுக்கும் சேவையாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பை பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மிகத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தனது நாட்டில் உச்சி மாநாட்டை நடாத்துவதன் மூலம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அதாவது 2015ல் மொரிசியசில் பொதுநலவாயத்தின் உச்சிமாநாடு நடைபெறும் வரை, இதன் தலைமைப் பதவியை சிறிலங்கா பெற்றுக் கொள்ள முடியும். சிறிலங்கா பெற்றுக் கொள்ளும் இந்த வாய்ப்பின் மூலம் வெளிநாடுகளுடனான தனது உறவுநிலையிலும் தனது நிலைப்பாட்டிலும் மிகப் பெரிய நலனை அடைந்து கொள்ள முடியும்.

இதற்கும் மேலாக, பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டுடன் அங்கம் வகிக்கும் 'பொதுநலவாய வர்த்தக பேரவை'யானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகும். "பொதுநலவாயம், இந்திய மாக்கடல், பசுபிக் மற்றும் சார்க் நாடுகளின் செழுமை மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் பங்கெடுத்தல்" என்பதே 2013ல் பொதுநலவாய வர்த்தக பேரவையின் முதன்மை நோக்காகும். இதன்மூலம் சிறிலங்காவானது தனது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு புதிய பங்காளிகளையும் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகப் பெரிய வாய்ப்பைப் பெற்றுக்கொள்கிறது.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துகின்ற எந்தவொரு நாடும் பொதுநலவாய வர்த்தக பேரவையின் நலனை அதிகளவில் பெற்றுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, 2011ல் பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் அவுஸ்திரேலியாவுக்கு 10 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவி கிடைக்கப் பெற்றது. 2013ல் பேரவையால் சிறிலங்காவுக்கு 2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் முதலீட்டை மேற்கொள்வதற்கு பூகோள தனியார் துறையானது அந்நாட்டின் கோட்பாட்டின் உறுதித்தன்மை மற்றும் பரந்தளவிலான ஆட்சிக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் முக்கியமாக நோக்குகிறது. சிறிலங்காவில் தனியார் துறை முதலீடானது நாட்டின் புலம்பெயர் சமூகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இவ்விரு முக்கிய விடயங்களையும் சிறிலங்கா உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் பிறிதொரு பிரிவான 'ஒன்பதாவது பொதுநலவாய இளையோர் பேரவை' இவ்வாண்டு நவம்பர் 10-14 வரையான காலப்பகுதியில் அம்பாந்தோட்டையில் 200 இளைஞர்களை ஒன்றினைத்து செயற்படவுள்ளது. இந்தச் பேரவையானது பொதுநலவாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து உத்தியோகபூர்வமாகக் குரல் கொடுக்கின்றது. இது தனது முதலாவது பொதுக் கூட்டத்தை சிறிலங்காவில் நடாத்தவுள்ளது. மே 2014ல் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள இளைஞர்களின் அனைத்துலக கருத்தரங்கிற்கான முன்னகர்வாகவே தற்போது ஒன்பதாவது பொதுநலவாய இளையோர் பேரவை அம்பாந்தோட்டையில் கூடவுள்ளது. இது பொதுநலவாயத்தில் இளைஞர்கள் தமது கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்கான மிகவும் அருமையான வாய்ப்பாக காணப்படும்.

இந்த அடிப்படையில் சிறிலங்காவானது ஏனைய நாடுகளிலும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. சிறிலங்கா தேசிய இளைஞர் நாடாளுமன்ற கட்டமைப்பு மற்றும் இளைஞர் கழகங்களின் ஒன்றியங்கள் போன்றன இதற்கான எடுத்துக்காட்டாகும். தற்போது இவை இரண்டும் சிறிலங்கா முன்னெடுக்கும் மிகச் சிறந்த இளைஞர் செயற்பாடுகளாக உள்ளன.

சிறிலங்கா அடுத்த இரு ஆண்டுகளுக்கும் பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாடுகளுக்கிடையில் அமைதியை ஏற்படுத்தி பிரச்சினைகளையும் தவறான கருத்தாக்கங்களையும் நீக்கிக் கொள்ள முடியும். சிறிலங்காவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு 3000 வரையான ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வருகை தரவள்ள நிலையில் சிறிலங்காவானது தனது நாட்டின் பலம் மற்றும் மீளெழுச்சி போன்றவற்றைக் காண்பிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்குள் உள்ள பல்வேறு அரசியற் கட்சிகள் தேசிய நலனுக்காக ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை இந்த உச்சி மாநாடு வழங்கியுள்ளது. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளைக் களைய முற்படவேண்டும்.

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றல் ஆகியன இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. நிலக்கண்ணிவெடி அகற்றல் பணிகள் பெருமளவில் முடிவடைந்துள்ளன. இடம்பெயர்ந்து வாழ்ந்த 300,000 வரையான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கே உளசமூக நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நலன்புரிக் கிராமங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. 595 சிறார் போராளிகள் உட்பட பெரும்பாலான முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பங்களுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கடன்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றின் விளைவாக, 1987ன் பின்னர் முதன்முதலாக சிறிலங்காவின் வடக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகக் காணப்படுகின்றது. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் 67.52 சதவீத வாக்குகளை அளித்து தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளனர். சிறிலங்காவின் தெற்கு மற்றும் வடக்கின் அதிகாரம் மற்றும் உறவுநிலை போன்றவற்றில் சமநிலை பேணப்படுவதற்கான வழிவகை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டை நடாத்துவதன் மூலம் அனைத்துலக அரங்கில் தனது நிலையைப் பலப்படுத்தும் அதேவேளையில், உள்நாட்டிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும்.

- புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்