தீவிரமடைந்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்!
2 கார்த்திகை 2017 வியாழன் 04:56 | பார்வைகள் : 10066
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடியாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுவிக்குமாறு வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக நீதி நடவடிக்கைகளை முன்னெடுக்காது அவர்களை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றங்களை நிரூபிக்கத்தக்க சாட்சியங்களைக் கொண்டுள்ளவர்கள் மாத்திரம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவார்களா அல்லது இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 158 தமிழ்க் கைதிகளும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவார்களா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
வடக்கில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டமானது அரசியல் உந்துசக்தியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்குப் பின்னால் அரசியல் சக்தி ஒன்று உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
கைதிகளை பல ஆண்டுகளாக எந்தவொரு நீதி சார் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதானது உண்மையில் பாரியதொரு அரசியல் பிரச்சினையாக உருமாறும். ஏனெனில் சிறைக்கைதிகளை தடுத்து வைப்பதில் இனப் பாகுபாடும் காண்பிக்கப்படுகிறது.
பியகமவில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அமைச்சர் விஜயவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும், போதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
முழு அடைப்புப் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வடக்கில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையூறு விளைவிக்க முயல்வதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார். கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது என்பது உண்மையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது போன்று அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் போர்க்காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் எவ்வித உண்மையும் இல்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக ஏற்கனவே குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏனையோருக்கு எதிராக இதுவரை எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை. நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படாது இந்தக் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
‘நீதி விசாரணைகளில் காலதாமதங்கள் ஏற்பட்டால் அதனைச் சீர்திருத்த வேண்டும். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நீதி நடவடிக்கைகளின் ஊடாகவே விசாரணை செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தவோ அல்லது விடுவிக்கப்படவோ முடியும்’ என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயவர்த்தனவின் கருத்தை அமைச்சர் ராஜித சேனரட்ன ஏற்றுக்கொள்ளவில்லை. ‘குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபித்து தண்டனை வழங்கவோ அல்லது அவர்களை விடுவிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்’ என அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுமிடத்து இது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும்’ என சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்தார். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாது பல ஆண்டுகளாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரவையின் உயர்மட்ட அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ராஜித சேனரட்ன வலியுறுத்தியுள்ளார்.
‘இந்தப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவான தீர்மானம் ஒன்றை இயற்ற வேண்டியுள்ளது. தொடர்ந்தும் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருக்க முடியாது’ எனவும் அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரட்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
தெற்கில் 1971 மற்றும் 1988 கிளர்ச்சிகளின் போது கைது செய்யப்பட்ட ஜே.வி.பி கட்சியின் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் எனவும் இதேபோன்றே தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அண்மையில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் நெகிழ்வான அணுகுமுறை ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் இவர் கோரியிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வெளிவிவகார அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் வாக்குறுதி வழங்கிய போதிலும், இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
‘கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பயன் கிடைக்கவில்லை.
இச்சட்டம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விமர்சனம் செய்த போதிலும் கூட அரசாங்கம் தொடர்ந்தும் இச்சட்டத்தின் கீழ் எவ்வாறு அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருக்க முடியும்? பயங்கரவாதத் தடைச் சட்டமானது சட்டத்திற்கு எதிரானது. இதன் கீழ் எடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என சம்பந்தன் தெரிவித்தார்.
‘வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு அரசியல் கைதிகள் சிலரின் வழக்குகளை மாற்றுவதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சாட்சியம் வழங்குபவர்களுக்கு பாதுகாப்புத் தேவை என்பதால் இவ்வாறான வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படக் கூடாது. எவ்வித தாமதமுமின்றி இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம்’ என ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
‘இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக கலந்துரையாடுவோம். தமிழ் மக்கள் எனக்காக வாக்களித்துள்ளனர் என்பதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்’ என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியது போல் தெரிகிறது.
‘தங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நீங்கள் எவ்வாறு தங்களின் நன்றியுணர்வைச் செலுத்தப் போகிறீர்கள்? இது மிகவும் சாதாரணமானது. அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ள 158 அரசியல் கைதிகளையும் மன்னித்து அவர்களை விடுவியுங்கள். இதன் மூலம் தாங்கள் தங்களின் நன்றியுணர்வைக் காண்பிக்க முடியும்’ என சிவாஜிலிங்கம், அதிபர் சிறிசேனவிற்குப் பதிலளித்துள்ளார்.
நன்றி - புதினப்பலகை