Paristamil Navigation Paristamil advert login

மைத்திரி - ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும்!

மைத்திரி - ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும்!

24 ஐப்பசி 2017 செவ்வாய் 14:32 | பார்வைகள் : 9757


ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. 
 
இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அதனை தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளது. தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளாக தம்மை காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காத்திரமான அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை.
 
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அடக்கப்பட்ட போதும், சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்த நிறைவேற்றத் தவறியிருந்தார். அதன் விளைவாக இந்த நாட்டில் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்காக மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய இனமும் கைகோர்த்து மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தை நல்லாட்சி அரசு எனற பெயரில் உருவாக்கினர். 
 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தம் குறைவடைந்து ஐ.நா மனிதவுரிமை பேரவையில் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கும் நிலை உருவாகியிருந்தது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் முகமாகவே அரசாங்கம் கண்துடைப்பாக சில கருமங்களை ஆற்றியிருக்கின்றது. அதன்மூலம் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் மீண்டும் கால நீடிப்பைப் பெற்றிருக்கின்றது. தமிழ் மக்களது ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று அவர்களது ஆதரவுடன் இத்தகைய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. சர்வதேச சமூகமும் அரசாங்கத்தினது நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னையும் இணைத்து கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் எண்ணுகின்ற நிலையானது உருவாகியிருக்கிறது.
 
தமிழ் மக்களது அபிலாசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அரசாங்கத்தினது செயற்பாடுகள் அமையவில்லை. இதன் விளைவாகவே தமிழ் தேசிய இனம் வீதிகளில் கொட்டகைகளை அமைத்து மழை, வெயில், இரவு, பகல் என பாராது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எட்டு மாதத்தை எட்டியுள்ளது. நில மீட்புக்கான போராட்டமும் 7 மாதத்தை தொட்டு நிற்கின்றது. தொடர் போராட்டங்களாலும், அந்த போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காமையாலும் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கம் மீதும் நம்பிக்கையிழந்து விட்டார்கள். அரசாங்கத்திற்கு போதிய அழுத்தத்தை வழங்காது இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராகவும் மக்கள் போராடும் நிலை உருவாகியிருக்கிறது.
 
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசாங்கம் உண்மையாகவும், நேர்மையாகவும் அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்று கருதி செயற்படுவதாக தெரியவில்லை. இராணுவ சுற்றிவளைப்புக்களின் போதும், சந்தேகத்தின் அடிப்படையிலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டின்அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 132 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் கூட செய்யப்படாத நிலையில் கடந்த 10, 15, 20 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் அவர்களது வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. சந்தேகத்தின் பேரில் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று யாழ் மேல் நீதிமன்றம் அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியிருந்தது. ஆனாலும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணியதாக கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாகவுள்ளோர் கைது செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசியல் கைதிகள் விடயத்தில் நீதித்துறையின் செயற்பாடு என்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றது.
 
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் அரசியல் கைதிகளின் வழக்குகள் கூட வடக்கு பகுதி நீதிமன்றங்களில் இருந்து தென்பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 
 
வவுனியா மேல் நீதிமன்றதில் இடம்பெற்று வந்த வழக்கினை சட்-டமா அதிபர் திணைக்களம் அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடம் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டத்தில் அம்¬மூன்று அரசியல் கைதிகளும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தியும், தம்மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் பல்வேறு வழிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த அடிப்படையில் இம் மூன்று அரசியல் கைதிகளும் கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மேற்கொள்ளப்படும் 11 ஆவது உணவு தவிர்ப்பு போராட்டமே இதுவாகும். தற்போது இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. தம்மீதான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் என்பதே. சந்தேக நபர்கள் அவ்வாறு கோருவதற்கான இடமும் உள்ளது. திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான பாதுகாப்பு தரப்பினர் தமது வழக்கை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியிருந்தனர். அதனடிப்படையில் அந்த வழக்கு மாற்றப்பட்டு அவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இத்தகைய ஒரு அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து கரிசனை காட்டப்படவில்லை. இவ்வாறு வழக்கு விசாரணைகளை மாற்றுவதால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் சட்டத்தரணிகளை பெற்றுப் கொள்வதிலும் அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளின் போது கலந்து கொள்வதற்கும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். மொழி சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். அதனால் இந்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து மாற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
 
திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கை திருனோணமலையில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றி அதனுடன் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அங்கு மாற்றி அவர்களுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசாங்கம் முயல்கிறது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர். அதாவது இராணுவத்திற்கு ஒரு நீதியும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்கள் பிரதிநிதிகனள் சிலர். சட்டமா அதிபர் திணைக்களம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இதுவரை காலமும் நடைபெற்றிருந்தாலும் தற்போது அங்கு சென்று சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அநுராதபுர மேல் நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருக்கின்-றார்கள். குறிப்பாக வவுனியாவிற்கு செல்வதற்கு தமது பாதுகாப்பு காரணங்களை காட்டியே சாட்சியாளர்கள் நிராகரித்துள்ளனர். 
 
ஆகவே அவர்களின் கோரிக்கையில் காணப்படும் நியாயத்தின் அடிப்படையில் தான் அவ்வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கில் ஆயுதக் கலாசாரம் இல்லை. தற்போது பாதுகாப்பு தரப்பை தவிர எவரிடமும் ஆயுதம் இல்லை. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஒழித்து நட்டை மீட்டுவிட்டோம் என வெற்றிவாத பரப்புரை செய்யும் அரசாங்கம் சாட்சியாளருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கூறுவது வேடிக்கையானதே. 
 
சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் விடப்போவது யார்…?, இந்த வழக்கில் சாட்சியாளர்களதக உள்ளவர்களில் பெரும்பாலனவர்கள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், அந்த பாதுகாப்பு தரப்பு எப்படி நாட்டை பாதுகாக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்கு உள்ளகப் பொறிமுறையில் நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என அரசாங்கம் கூறி வருகின்றது. இந்த நிலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிளுக்கு எதிரான பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாத நிலையில் உள்ள அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு தரப்போடு சம்மந்தப்பட்ட மேற்சொன்ன குற்றங்களுக்கு சாட்சியமளிக்க முன் வருபவர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது. கடந்த காலத்தில் பரணகம தலைமையிலான காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த சிலர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
 
ஆகவே தான், தமிழ் மக்கள் நீதியான விசாரணைக்காக சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் கோரி நிற்கின்றார்கள். உள்ளக விசாரணையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமோ அல்லது அதன் நீதித்துறையோ செயற்படவில்லை. சாட்சியாளருக்கான பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. வித்தியா கொலைத் தீர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்றைப் பெற்றுள்ள போதும், அது தேசிய இனப்பிரசனையுடன் சம்மந்தப்பட்ட அல்லது தமிழ் தேசிய போராட்டத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு விவகாரம் அல்ல. அது சட்டவிரோத மாபியா கும்பல் ஒன்றுக்கு எதிரான நடவடிக்கை. அதன் நீதி என்பது வேறு. தேசிய இனப்பிரச்சனையுடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான நீதி என்பது வேறு. இந்த இரண்டும் வேறு வேறு கோணங்களிலேயே அரசாங்கத்தாலும், அதன் கீழ் உள்ள நீதித்துறையாலும் அணுகப்பட்டுள்ளது.
 
தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதசேதத்தில் மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர் போராட்டங்களாக இடம்பெறவுள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைகப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளும் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றனர். வடக்கில் வெள்ளிக்கிழமை பூரண வழமை மறுப்பு போராட்டமும் இடம்பெற்றுள்ளது. தொடர் வெகுஜனப் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் ஜனாதிபதிக்கு அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமாக செயற்பட தவறியிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் போராட்டம் வீச்சுப் பெறத் தொடங்கியுள்ள நிலையில், தமது இருப்பை தக்க வைப்பதற்கும் அடுத்து வரும் தேர்தலை இலக்கு வைத்தும் கூட்டமைப்பு தலைவர் நித்திரை விட்டு எழுந்தவர் போல் தற்போது அரசியல் கைதிகள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார்.
 
நேரடியாக யுத்த்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விடுதலைப்புகளுக்கு ஆதரவு வழங்கியோர், சாப்பாடு கொடுத்தோர், வாகனம் வழங்கியோர் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விடுவிக்கப்படாது தமது வாழ்நாளையும், இளமைக் காலத்தையும் சிறையில் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை எண்ணி அவர்களது குடும்பங்கள், பிள்ளைகள் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். 
 
இந்நிலையில் அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.
தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் போன்று நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கத்தின் மனநிலையிலும் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. தமிழ் தேசிய இனத்தின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காத்திரமான முறையிலும், இராஜதந்திர ரீதியிலும் இந்த விவகாரத்தை அணுகவில்லை. சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் இலங்கைக்கு காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்கக் கூடிய வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படவேண்டும். தமது தலைமைகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ் மக்களும் அணிதிரண்டு வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டங்கள் மூலமே அரசியல் கைதிகள் விடயத்தில் இந்த அரசாங்கத்திடம் இருந்து நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்க்க முடியும். ஆகவே, ஒரு தேசம் சிந்திக்க முற்பட்டால் அதன் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.
 
நன்றி - சமகளம்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்