Paristamil Navigation Paristamil advert login

சமஸ்டி பற்றிய தென்னிலங்கையின் புரிதல்!

சமஸ்டி பற்றிய தென்னிலங்கையின் புரிதல்!

25 புரட்டாசி 2017 திங்கள் 14:10 | பார்வைகள் : 9751


இலங்கைத் தீவில் கடந்த ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் தேர்தல் காலத்தின் போது வாக்குறுதியளித்திருந்தனர். 
 
இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகி இருக்கின்றர்து. அதுவும் நீண்ட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து, அவர்களது நியாய பூர்வமான கோரிக்கைளை புதிய அரசியலமைப்பு கொண்டிருக்காது என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. தென்னிலங்கையின் அரசியல்வாதிகளும், பௌத்த மகாசங்கத்தினரும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தென்னிலங்கை தானாக தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்காது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்தும் ஜனநாயக ரீதியாக போராட வேண்டிய சூழலே தொடர்கின்றது.
 
இந்த நாட்டின் தமிழ் தேசிய இனம் தமது நிலத்தை மீட்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், தமது அன்றாட வாழ்வியலுக்காகவும் போராடும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் ஒரு அணியாகத் திரண்டு உரத்து குரல் எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. 2009 முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தமது ஜனநாயக குரலாக தமது இறைமை மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னிறுத்தியதுடன், வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் அதிகார பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தேர்தல் மேடைகளில் முன்னுறுத்தியே மக்கள் ஆணையைப் பெற்றிருந்தது. 
 
ஆனாலும் தென்னிலங்கையின் ஆட்சி மாற்றத்திற்காக கடுமையாக உழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்று மக்களது அபிலாசைகளை விடுத்து இணக்க அரசியல் என்னும் பெயரில் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தின் பங்காளிகளாகவே மாறிவிட்டனர். மாறிவந்த சர்வதேச அழுத்ததை தமிழர் தரப்புக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு இராஜதந்திரத்துடன் நகர்வதை விடுத்து, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து பிணை எடுக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமையின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயற்பாடு அமைந்திருந்தது. தற்போது வெறும் வார்த்தை ஞாலங்களால் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டும் வருகின்றது.
 
மறுபுறம், தமிழ் மக்கள் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் ஜனநாய ரீதியான போராட்டங்கள் இன்று 200 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வீதியோரங்களே அந்த மக்களின் தங்குமிடங்களாக மாறியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்களை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த மக்கள் போராட்டங்களை முடிந்து வைப்பதற்கோ அல்லது அந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலோ அல்லது அந்த போராட்டங்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கும் வகையிலோ செயற்படவில்லை. அதன் விளைவே தமிழ் மக்கள் இன்று தமது தலைமைகளின் மேல் அதிருப்தி அடைந்துள்ளமை. மாற்றுத் தலைமை பற்றிய தேடலுக்கான காரணமும் அதுவே.
 
இந்தப் பின்னனியில் தமிழ் மக்கள் நலன்சார்ந்த வகையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நடந்து கொண்டமை அவருக்கான ஒரு ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் நிலையில் வடக்கு முதல்வர் தன்னை சந்திக்க வரும் சர்வதேச இராஜதந்திரிகளிடமும், தென்னிலங்கையிடமும் தமழழ் மக்களது நியாயபூவர்வமான அபிலாசைகளை முன்வைத்து வருகின்றார். தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை தான் என்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றினையும் வட மாகாண சபையில் நிறைவேற்றியிருந்தார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை என்கின்ற அமைப்பு உதயமாகிய போது அதன் இணைத்தலைவராக வடக்கு முதல்வர் சி.வியும் நியமிக்கப்பட்டிருந்தார். புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் பிரமுகர்கள் என பல தரப்பையும் உள்ளடக்கியதாக அந்த மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. அவர்களது நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராகவும் சி.வியே இருந்து வருகின்றார். புதிய அரசியலமைப்புக்கான வேலைகள் நடைபெற்று வரும் இந்தச் சூழலில் தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவே தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள். 2009 முள்ளியவாய்கால் அவலத்தின் பின்னும் தமிழ் மக்கள் உரிமைக்காக ஏங்கும் ஒரு சமூகமாகவே இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் வடக்கிலும், கிழக்கிலும் என இரண்டு எழுக தமிழ் பேரணி வடக்கு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு தடைகளையும தாண்டி மக்கள் அலையெனத் திரண்டு தமது அபிலாசைகளையும், உரிமைக் குரலையும் ஒங்கி ஒலித்திருந்தனர்.
 
இத்தகைய பின்னனியிலேயே தென்னிலங்கை சக்திகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை இனவாதக் கண்ணோடு பார்த்ததுடன், அவருக்கு எதிரான பிரச்சாரங்களையும் முன்னெடுத்திருந்தது. தமிழ் மக்களின் அபிலாசைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருவதானாலும், வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமையாலும், எழுக தமிழ் நிகழ்வில் மக்களை அணி திரட்டியமையாலும் வடக்கு முதல்வருக்கு எதிராக தென்னிலங்கையின் கடும் போக்காளர்களும், சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும் விசமப் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுக்காக செயற்படுபவர்களை தென்னிலங்கை பயங்கரவாதியாக அல்லது இனவாதியாக பார்ப்பது என்பது விக்கினேஸ்வரனுடன் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அது இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதலே இடம்பெற்று வருவது.
 
இருப்பினும், இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இந்த நாட்டின் அனைத்து இன மக்களும் ஒருவரது தோளில் ஒருவர் கைபோட்டுக் கொண்டு செல்லக் கூடிய நிலமை உருவாக வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த அடிப்படையில் தான் வடக்கு முதல்வர் தென்பகுதி ஊடகங்களை ஒரு தடவை சந்தித்திருந்தார். எழுக தமிழ் பேரணி தொடர்பாக பல்வேறு பிரச்சாரங்களும், முதலமைச்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் கொழும்பில் சிங்கள, ஆங்கில ஊடகங்களை சந்தித்து அவர்கள் மூலம் எழுக தமிழ் பேரணி தொடர்பிலும், தமிழ் மக்கள் பிரிவினைவாதத்தை கோரவில்லை என்பதையும், தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்ததுடன், அதனையே எழுக தமிழ் பேரணியிலும் வலியுறுத்தியதாக கூறியிருந்தார். இதன் பின்னர் அவருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் சற்று குறைவடைந்தது என்றே சொல்லலாம்.
 
தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வரவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியலமைப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும், தமிழ் மக்களது அபிலாசைகள் என்ன என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வ தீர்வு கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தென்னிலங்கையில் வடக்கு முதல்வர் தனிநாடு கேட்கிறார், பிரிவினைவாதம் பேசுகின்றார் என்ற இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த நாட்டின் பௌத்த மகாசங்கத்தினரை வடக்கு முதலமைச்சர் சந்தித்து பேசியிருக்கின்றார்.
 
இதனை ஒரு சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. அந்த சந்திப்பில் எது நடந்திருந்தாலும் அல்லது என்ன பேசியிருந்தாலும் அந்த சந்திப்பு தற்போதைய சூழலில் அவசியமானதொன்றே. குறிப்பாக பௌத்த மக்களைப் பொறுத்தவரையிலும், தென்னிலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் அவர்கள் பௌத்த மகாசங்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர். பௌத்த சங்கத்தின் இணக்கப்பாட்டை பெறாமல் புதிய அரசியலமைப்பில் அவர்களால் மாற்றங்களை கெண்டு வர முடியாது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாசங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே ஜனாதிபதி அவசரமாக சங்கத்தினரை சந்தித்து உரையாடியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
 
பௌத்த சங்கம் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோருவதுடன், சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கும் எதிர்ப்பு காட்டி வருகின்றது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கும் அந்த அமைப்பு எதிர்ப்பையே வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான சூழலில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு அதாவது உரிமைக்காக போராடும் தமிழ் தரப்பு தமது அபிலாசைகள் குறித்தும் அவற்றின் நியாயங்களையும், கருத்துக்களையும் பௌத்த மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அதனையே வடக்கு முதலமைச்சர் செய்தும் இருக்கின்றார். தமிழ் மக்களின் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்னரே செய்திருக்க வேண்டிய இந்த செயற்பாட்டை வடக்கு முதல்வர் செய்திருக்கின்றார். அந்த முயற்சி வரவேற்கத்தக்கதொன்றாகும்.
 
இந்தச் சந்திப்பில் பௌத்த சங்கத்தினர் சமஸ்டியை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அது பிரிவினைவாதம் என வடக்கு முதல்வரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது. வடக்கு முதல்வர் சி.வி தமிழ் மக்களது அபிலாசைகள் குறித்து கூறியிருக்கின்றார். அத்துடன் தனது நல்லெண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். இருப்பினும் அவர்களது மனநிலையில் பெயரியளவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றே ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசை குறித்தும் சமஸ்டி குறித்தும் பௌத்த மகாசங்கத்தினரிடம் தெளிவற்ற ஒரு நிலை இருக்கின்றது என்பது புலனாகின்றது. 
 
சமஸ்டி என்பது பிரிவினை இல்லை என்பதையும், அதனை தமிழ் மக்கள் கோருவதற்கான காரணத்தையும், உலக நாடுகளில் சமஸ்டி அடிப்படையில் ஒற்றுமையாக ஒரு நாடாக மக்கள் வாழ்வதையும் சங்கத்திற்கும், தென்னிலங்கையின் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு முதலமைச்சரின் இந்த சந்திப்பு போன்று அவர்களுடன் மேலும் பேச வேண்டி உள்ளது. அதன் மூலமே அவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுவே இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக புதிய அரசியலமைப்பு உதயமாக வழிவகுக்கும்.
 
நன்றி - சமகளம்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்