Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு மத்தல – சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வு

இந்தியாவுக்கு மத்தல – சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வு

1 புரட்டாசி 2017 வெள்ளி 05:34 | பார்வைகள் : 9357


நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் , கொழும்பிலிருந்து தெற்காக 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள அம்பாந்தோட்டையில் சீனாவின் 190 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்பட்டது.  இந்த விமான நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான மொத்தச் செலவீனத்தின் 90 சதவீதக் கடனை சீனா வழங்கியது.
 
தற்போது மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையமானது நட்டத்தில் இயங்குகிறது. இதனால் சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பெற்ற கடனை சிறிலங்காவால் திருப்பிச் செலுத்த முடியாதுள்ளது. இந்நிலையில் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமானநிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பதெனவும் இதன்மூலம் சீனாவின் கடனை மீளச் செலுத்த முடியும் எனவும் சிறிலங்கா தற்போது தீர்மானித்துள்ளது.
 
சீனா தனது இலக்கான ஒரு பாதை ஒரு அணைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஆசியாவின் சிறிய நாடுகளில் இவ்வாறான சில கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் சிறிலங்கா தற்போது எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகளை இச்சிறிய நாடுகளும் எதிர்நோக்கும் என எதிர்பார்க்க முடியும்.
 
சீனா தன்னை ஒரு பூகோள பங்காளியாகக் காண்பிப்பதன் மூலம் தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக சிறிய நாடுகளில் உள்ள முக்கிய சொத்துக்களைத் தனது கொலனித்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கான சுரண்டல்களில் ஈடுபட்டு வருகிறது.
 
சீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டமானது பல நாடுகளின் ஊடாக கடல் மற்றும் தரைவழிப் பாதைகளை ஒன்றிணைக்கும் பாரியதொரு வலைப்பின்னலாக உள்ளது. இத்திட்டமானது 4.4 பில்லியன் மக்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக 1 ரில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளதாக சீனா கூறுகிறது. இது தனியொரு திட்டமல்ல. சில தொடருந்துப் பாதைகள், வீதிகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய கட்டுமானங்களை உள்ளடக்கிய ஆறு பாரிய பாதைத் திட்டங்களும் சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது.
 
இப்பொருளாதாரப் பாதைகள் நாடுகளில் கட்டுமாணங்களை மட்டும் உருவாக்காது பூகோள வர்த்தகத்திற்கும் வழிசமைக்கின்றது. ஆசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகளும் பூட்டான் தவிர்ந்த இந்தியாவின் அயல்நாடுகளும் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகின்றன.
 
இத்திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகள் அடிக்கட்டமைப்பு மற்றும் வர்த்தக சார் நலன்களைப் பெற்றுக் கொள்ளும். சிறிய நாடுகளால் மேற்கொள்ள முடியாத மிக முக்கிய கட்டுமாணத் திட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலகுவான மற்றும் விரைவான வழியாக சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் காணப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் பாரிய மறைமுகமான செலவினை இச்சிறிய நாடுகள் மீது சுமத்துகின்றது.
 
சீனாவின் இத்திட்டத்தின் கீழ் சீனாவால் உயர் வட்டி வீதத்திலேயே கடன் வழங்கப்படுகிறது. இதனால் இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிய நாடுகள் இடர்களை எதிர்நோக்குகின்றன. இதன் மூலம் சீனா இத்திட்டங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுடன் அவற்றில் சமபங்கைப் பெறுவதற்கும் வழிவகுக்கின்றது.
 
இதன்மூலம் சீனாவானது சில நாடுகளில் நிரந்தரமான பிரசன்னத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுகின்றது. சிறிலங்காவில் தற்போதும் இடம்பெறும் நிகழ்வுகள் சீனாவிடமிருந்து கடனைப் பெறும் ஏனைய சிறிய நாடுகளுக்கு சிறந்ததொரு எச்சரிக்கையாகக் காணப்படுகிறது. சீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமானநிலையம் தேவைப்படுகிறது.
 
சிறிலங்காவால் அம்பாந்தோட்டைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாததால் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகமானது 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இத்துறைமுகமானது எந்தவொரு இராணுவத் தேவைகளுக்காகவும் பயன்படுத்த முடியாது என சீனாவிடம் சிறிலங்கா தெளிவாகக் கூறியுள்ளது.
 
1971 தொடக்கம் 2012 இற்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவால் சிறிலங்காவிற்கு 5 பில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதியானது கட்டுமான அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேசிய கடன்தொகையானது 64.9 பில்லியன் டொலராகும். இதில் 8 பில்லியன் டொலர்கள் சீனாவிற்குச் சொந்தமானதாகும். இது சீனாவின் கடன் வட்டியும் அதிகமாகும்.
 
அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்திற்காக சிறிலங்காவால் சீனாவிடமிருந்து 301 மில்லியன் டொலர் 6.3 சதவீத வட்டியில் பெறப்பட்டது. இதேவேளையில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் மென் கடன்களுக்கான வட்டி வீதமாக 0.25 தொடக்கம் 3 சதவீதம் அறவிடப்படுகிறது.
 
இந்தியாவால் தனது அயல்நாடுகளுக்கு வழங்கப்படும் கடனின் வட்டி வீதம் 1 சதவீதமாகும். சில நேரம் இந்த வீதம் குறைவாகவும் அறவிடப்படுகிறது. சிறிலங்கா தற்போது கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அதாவது சிறிலங்கா தற்போது  ‘கடன் பொறிக்குள்’ சிக்கியுள்ளதாக கல்விமான்கள் சிலர் கூறுகின்றனர். சிறிலங்காவால் தற்போது சீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதுள்ளது. பொருளாதார வளர்ச்சி மெதுவாக இடம்பெறுவதே இதற்கான காரணமாகும்.
 
சிறிலங்கா தன் மீதான கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக தனது சொத்தை நீண்ட காலக் குத்தகைக்கு விடுவதற்குத் தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் இத்தீர்மானமானது சிறிலங்காவிற்குச் சொந்தமான சொத்தை சீனா தனது உடமையாக்குவதற்கு வழிவகுக்கலாம்.
 
மத்தல விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பான சிறிலங்காவின் தீர்மானமானது தனக்கு எதிரான சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு நகர்வாகக் காணப்படுகிறது.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்