வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு காரணம் என்ன…?
12 ஆவணி 2017 சனி 13:58 | பார்வைகள் : 9095
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்து சென்ற போதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு முழுமையாக நீங்கவில்லை.
இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுத ரீதியாக போராடிய போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக் கூறி சர்வதேச நாடுகளுடன் இணைந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த அரசாங்கமும் சரி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களின் பேராதரவுடன் நிறுவப்பட்ட மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமும் சரி தமிழ் மக்கள் விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதையே வெளிப்டுத்தி வருகின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஜெனீவா கூட்டத் தொடர்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களிலும், தேர்தல் அறிவிப்புக்கள் வந்த நேரங்களிலும் வடக்கில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்படுத்திருந்ததை மீட்டு பார்க்க வேண்டியும் உள்ளது. கிறீஸ் பூதம், புலிகள் மீள் உருவாக்கம், தற்கொலை அங்கி விவகாரம், ஆவா குழு என அவை இன்று வரை நீண்டே செல்கின்றது.
தற்போது உள்ளூராட்சி சபை தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதா என தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, தமது கட்சி பலம் தொடர்பிலும் பரிசீலித்து வருகின்றன. எந்த தேர்தலை முதலில் வைத்தால் தமது கட்சிக்கு சாதகநிலை ஏற்படும் என்பது குறித்து அவர்கள் யோசித்து வருகின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் இந்த நாடு தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ள நிலையில் அதற்கான தீவிர செயற்பாடுகளில் பிரதான கட்சிகள் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனை வலுச் சேர்க்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் 47 இற்கு திடீர் வரிக்குறைப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பின்னனியில் வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகளும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சம்பவங்களின் பின்னனியில் பலமானதொரு சக்தி இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. வடமராட்சியில் மணற் அள்ளுபவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம், யாழ் நல்லூரில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம், கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது இடம்பெற்ற வாள்வெட்டு, துன்னாலை மற்றும் கொடிகாமப்பகுதிகளில் பொலிசாருக்கு எதிராக இடம்பெற்ற அசம்பாவிதங்கள், மட்டக்களப்பில் மணல் அள்ளுபவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் என்பன வடக்கு, கிழக்கில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. அச்சத்துடனேயே மக்கள் வீதிகளில் நடமாட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் முன்னாள் போராளி என பொலிஸ் தரப்பு கூறுவதுடன் அவரது இலக்கு நீதிபதியல்ல எனவும் கூறியிருக்கின்றனர். ஆனால் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் முன்னாள் போராளிகள் இல்லை என கூறப்படுகிறது. மறுபுறம் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களின் பின்னனியில் ஆவா குழு செயற்படுவதாக பொலிசார் கூறுகின்றனர்.
பொலிசார் மீதான வாள்வெட்டு சம்பவத்தையடுத்து அவசர அவசரமாக யாழ் சென்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பொலிசாரின் விடுறைகளை ரத்துச் செய்து யாழின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் முன்னாள் போராளி எனவும், அவர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், ஆவா குழு என்பது யார்…?, இதன் பின்னனி என்ன..?, உண்மையில் அவ்வாறு ஒரு குழு இயங்குகின்றதா..?, அதன் நோக்கம் என்ன…?, பொலிசார் இலக்கு வைக்கப்படடதன் காரணம் என்ன…?, ஆவா குழுவின் தலைவர் உட்பட பலரை பொலிஸார் முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையிலும் அந்தக் குழு செயற்படுகின்றதா…? என பல வினாக்கள் இயல்பாகவே எழுகிறது.
வடக்கு, கிழக்கில் வாழுகின்ற அனைத்து தமிழ் பேசும் மக்களும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளிலேயே இன்னமும் இருப்பதால் ஒரு அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இன்று வரையில் மக்களால் மேற்கொள்ளப்பட்டதாக எத்தகைய வன்முறைச் சம்பவங்களும் இந்த பிரதேசங்களில் இராணுவத்திற்கோ அல்லது பொலிசாருக்கோ எதிராக பதியப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஆவா குழு என்று அழைக்கப்படுபவர்கள் அல்லது அவர்களைப் போன்றே வாள், கத்தி, பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி பொதுமக்களை அச்சுறுத்தும் கும்பலே நிகழ்த்தியிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் மா அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே.
பொலிசாரின் தகவல்களின் படி ஆவா குழு என்பது யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டும் இருந்தனர். ஆனால் யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசார் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆவா குழுவே ஈடுபட்டதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது. இது தொடர்பில் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்னாள் போராளி என பொலிஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 20- 24 வயதிற்கு உட்பட்டவர்கள். யுத்தம் முடிவடைந்த போது அவர்கள் 12 – 15 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவே இருந்துள்ளார்கள். இந்த நிலையில், யாழில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வசித்த அவர்களுக்கு யார் இராணுவ பயிற்சி வழங்கியது..?, அந்த வயதுகளில் பாடசாலையில் படித்து கொண்டு இருந்த அவர்கள் எப்படி முன்னாள் போராளிகளாக இருக்க முடியும்..? என்ற கேள்வியும் எழுகிறது. ஆவா குழு மஹிந்த ஆட்சிக்காலத்தில் அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டது எனவும், அந்த குழுவை உருவாக்கிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவிகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பாக தாங்கள் அறிந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையில் பெரிய பெரிய மாபியாக்களையும், பாதாள உலக கோஸ்டிகளையும் பிடிக்கும் பொலிசார் வடக்கின் வாள்வெட்டு குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயம். இதன் பின்னனியில் பலமானதொரு சக்தி இருக்கின்றதா என்ற கேள்வியையே அது எழுப்புகின்றது. புதிய அரசியலமைப்பு வரவுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தவும், வடக்கை குழப்ப நிலையில் வைத்திருக்கவும் அந்த சக்திகள் முற்படுகின்றதா என்ற கேள்வியை குறித்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.
வடக்கில் கடந்த சில நாட்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மக்களது வாகனங்கள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் படையினரின் சுற்றி வளைப்பு இடம்பெற்றது போன்றதான ஒரு நிலமை மீண்டும் யாழில் ஏற்பட்டிருக்கிறது. இது மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறது.
வடக்கில் முலத்திற்கு முலம் இராணுவமும், புலனாய்வாளர்களும், பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வாள்கள், கத்திகள், பொல்லுகளுடன் இரவு, பகல் என ஒரு குழு எவ்வாறு சுதந்திரமாக செயற்பட முடிகிறது. வடக்கில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளையடுத்து விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் முப்படையினரையும் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கின்றார். இராணுவமும் தயார் நிலையில் இருப்பதாக யாழ் சென்ற இராணுவத் தளபதியும் கூறியிருக்கிறார்.
தென்னிலங்கையில் பெரிய மாபியாக்களையும், பாதாள உலகக் குழுக்களையும் பொலிசாரே கைது செய்யும் நிலையில் வடக்கில் ஒரு வாள் வெட்டுக் குழுவை பிடிக்க அதிரடிப்படையையும், முப்படையையும் ஈடுபடுத்த முனைவது என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. அத்துடன் வடக்கின் பாதுகாப்புக்கு என மேலதிகமாக விசேட அதிரடிப்படை பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் யாழில் நிலை கொண்டுள்ள பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும் திறன் அற்றவர்களா என்ற என்ற கேள்வி எழுகிறது. அல்லது வடக்கில் மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவ, பொலிஸ் நெருக்குவாரங்கள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகின்றதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இதுதவிர, இந்த சம்பவங்களின் பின்னனியில் முன்னாள் போராளிகளை பழிகடாவாக்குவதற்கான திட்டங்களும் இடம்பெறுவதாகவே தெரிகிறது. அண்மைக்காலமாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் மீது குற்றம் சாட்டுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கின்றது. இராணுவத்தினரிடம் சரணடைந்தும், இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போரளிகளின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் சமூகத்தில் வாழ்வதற்காகவும், நாளாந்த வருமானத்திற்காகவும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வரும் நிலையில் அவர்கள் மீது தொடரும் அழுத்தங்கள் அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்கள் போர்காலத்தில் செய்த குற்றங்கள், தவறுகளை மன்னித்து சமூகமயமாக்குவதாக கூறும் அரசாங்கம், போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறி அவர்கள் மீது மீண்டும் சில வழக்குகளை தாக்கல் செய்து அதன் மூலம் தண்டனைகளை வழங்கவும் முற்படுகிறது. கிளிநொச்சியில் பெண் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக கூறி புனர்வாழ்வு பெற்ற கண்ணதாசன் என்ற முன்னாள் போராளியும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது.
சட்டம் தன் கடமையைச் செய்தாலும் முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் ஒரு பொதுக் கொள்கை ஒன்றை வகுத்து செயற்பட வேண்டும். புனர்வாழ்வு வழங்கி சமூக மயமாக்கியவர்களை போர்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளாக்கி மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றமை புனர்வாழ்வின் பின் வீடதலையான முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் புனர்வாழ்வின் பின் இராணுவ புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்புக்குள்ளும், விசாரணைக்குள்ளும் இருக்கும் முன்னாள் போராளிகள் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறுவது பலந்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு பகுதியில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களும், வாள்வெட்டுக்களும் தமிழ் மக்களால் விரும்பப்படுபவை அல்ல. அவை நாட்டின் அமைதி நிலைக்கும் ஆபத்தானவை. போரால் பாதிக்கப்பட்டு தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் வன்முறையை விரும்பியவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் கூட அவர்கள் மீது கடந்த கால தென்னிலங்கையின் ஆட்சியாளர்களின் செயற்பாட்டால் தற்காப்புக்காக வலிந்து திணிக்கப்பட்டதே.
இந்த நிலையில் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த பலமான சக்தி ஒன்று திரைமறைவில் செயற்படுவதாகவே எண்ண வேண்டியுள்ளது. அதை கண்டுபிடித்து அதனை சட்டத்தின் முன் நிறுத்துவதும், அமைதியை ஏற்படுத்துவதும் பொலிசாரினதும் இந்த நாட்டின் அரசாங்கத்தினதும் கடமை. அதன் மூலமே இயல்பு நிலையை உருவாக்க முடியும்.
நன்றி - சமகளம்