Paristamil Navigation Paristamil advert login

புட்டும் தேங்காய்ப்பூவும் போலத்தானா தமிழ் - முஸ்லிம் உறவு?

புட்டும் தேங்காய்ப்பூவும் போலத்தானா தமிழ் - முஸ்லிம் உறவு?

3 ஆவணி 2017 வியாழன் 15:10 | பார்வைகள் : 8848


இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்துக்கு குந்தகம் செய்யும் வகையில் தமிழரசு கட்சி மேற்கொண்டுவரும் அரசியல் சாணக்கியம் அற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்ததே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ஆட்சி அமைப்பாகும்.
 
11 ஆசனங்களைக் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம்பேசலுடன் ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் பிரதான சிங்கள கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவுடன் கிடைத்திருந்தும் அதனை புறம்தள்ளி 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு முதல் அமைச்சர் உட்பட பல்வேறு அதிகாரங்களை வழங்கி கிழக்கு மாகாணத்தை ஆளும் வாய்ப்பை தமிழரசுக்கட்சி வழங்கியது. 
 
இதன்காரணமாக எத்தகைய ஆபத்துக்கள் இன்று ஏற்பட்டுள்ளன என்பதை சுருக்கமாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இனவாதம் கதைப்பதோ அலல்து அவர்களின் மனதை புண்படுத்துவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக இரு இனங்களும் தமது இனத்துவ அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தக்க்கூடிய யதார்த்தபூர்வமான அரசியல் தீர்வு எது என்பதை வலியுறுத்துவதே இதன்  நோக்கம்.
 
ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தையும் ஆள்வதன் மூலம் அனுபவித்த சுவையே இன்று தென்கிழக்கு அலகுக் கோரிக்கை கைவிடப்பட்டு முழுமையான கிழக்கு மாகாணமாக மாறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதுவே இன்று சுமந்திரன் கூறும் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லை என்ற கூற்றாகும் .
 
ஜனாதிபதி தேர்தலில் அரசியல் தீர்வு விடயத்தில் குறைந்தபட்சம் எழுத்து மூலமாக தமிழ்மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் எந்தவித உத்தரவாதத்தையும் பெறாமல் ஆதரித்ததுபோல் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் எந்த விதமான உத்தரவாதத்தையும் பெறாமல் முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண ஆட்சி தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஒருபுறம் மத்தியில் சிங்கள-தமிழ் முரண்பாட்டை பயன்படுத்தி பல்வேறு முக்கிய அமைச்சுக்களை தன வசம் வைத்துள்ள முஸ்லிம் காட்சிகள் அவற்றின் மூலம் வட-கிழக்கில் நில அபகரிப்பையும் , பக்கசார்பாக வேலைவாய்ப்புக்களை வழங்கியும், தமக்கு சாதகமானவர்களை உயர்பதவிகளுக்கு நியமித்தும் வருகின்றன. மறுபுறம் அரபு தேசங்களின் உதவியுடன் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் வாங்கப்படுவதுடன் அரச அதிகாரிகளுக்கு பெருமளவு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டு அதன்மூலமும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
 
இன்று கிழக்கு மாகாணத்தை முழுவதுமாக கபளீகரம் செய்வதுடன் அதன்நீட்சியாக முல்லைத்தீவையும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் முல்லை காடுகள் அழிக்கப்பட்டு வெளியிடங்களிலிருந்து முஸ்லிம் மக்களை கொண்டுவந்து மிகப்பெரிய குடியேற்றத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காகவே மீழ்குடியேற்ற ஜனாதிபதி செயலனி ஸ்தாபிக்கப்பட்டு அதைச் செயற்படுத்தும் பொறுப்பு அமைச்சர் ரிசாத் பதியுதினிடம் வழங்கப்பட்டுள்ளது. போகும்போக்கை பார்த்தல் யாழ்ப்பாணம் தான் தமிழர் தாயகமாக எஞ்சும் போல் உள்ளது.
 
ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது இலங்கை முஸ்லிம்கள் என்பது தனியான ஒரு இனம். அவர்கள் இலங்கைத்தீவில் ஒரு சிறுபான்மை இனமாக இருந்தாலும் உலகளவில் அவர்கள் இரண்டாவது பெரிய குழுமமாகும். அவர்களின் இன அடையாளமாக பார்க்கப்படுவது மொழியல்ல மாறாக அவர்களின் இஸ்லாம் மதமே. அவர்கள் எப்பொழுதேனும் ஒடுக்குமுறைகளை அல்லது பிரச்சனைகளை சந்திக்கும் போது அவர்களது குரலாக முழு உலகமுமே குரல்கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இதுவே மிகப் பலம்பொருந்திய இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனியர்களை இன்றளவும் காப்பாற்றிவருகிறது. இலங்கையை பொறுத்தவரையில் தமிழ்-சிங்கள முரண்பாட்டை தமது மதம் சார்ந்த இன நலனுக்காகவே முஸ்லிம் தலைவர்கள் அன்று தொட்டு இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர்.
 
வட்டுக்கோட்டை தீர்மாத்தை நிறைவேற்றிய தமிழர் விடுதலை கூட்டனியூடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த முஸ்லிம்களின் மறைந்த தலைவர் அஸ்ரப் காலத்தில்தான் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் ஊர்காவல் படைகளின் கொலைவெறியாட்டம் கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதனுடாக தமிழ்-முஸ்லிம் மோதல் உருவாக்கப்பட்டது . இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தினுடாக ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கு சிங்கள இனவாத்துடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். 
 
வடக்கில் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயன்றுகொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்கு உதவியாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அதற்கு உதவும்வகையில் சில முஸ்லிம் இளைஞர்கள் சில தயார்படுத்தல்களில் ஈடுபட்டார்கள். இது விடுதலைப்புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே கிழக்கில் அப்பாவி தமிழ்-முஸ்லிம் மக்களின் இரத்த ஆறு ஓடியதைப் போன்ற ஒரு நிலை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு தற்காலிகமாக வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை அவர்கள் வெளியேற்றினார்கள்.  ஆனால் கிழக்கில் தமிழ் மக்களின் அவர்களின் நிலங்களோ, வீடுகளோ முஸ்லிம் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டதை போன்று வடக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளும் வீடுகளும் தமிழ் மக்களால் ஆக்கிரமிக்கப்படுவற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. இந்த உண்மையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
 
2000ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பங்குபற்றிய சர்வதேச ஊடகவியலாளர்களுடனான பேட்டியின் போது முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து தலைவர் பிரபாகரனால் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது . ஆனால் மறுபுறத்தில் ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்காலில் இழந்து அதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் நீதிவேண்டி நிற்கும் போது சிறிலங்கா அரசுடன் இணைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் தலைமைகளும் இறுதிப்போரில் எந்தவித மனிதவுரிமை மீறல்களும் நடைபெறவில்லையென்று கூறி அதற்காக அரபுநாடுகளின் ஆதரவை சிறிலங்காவுக்கு சார்பாக வேண்டி நின்றனர்.
 
தமிழ் -முஸ்லிம் உறவு என்பது புட்டும் தேங்காய்ப்பூவும் போல என்று கூறி எம்மை நாமே ஏமாற்றாமல் தமிழ்-முஸ்லிம் உறவென்பது இரு இனமும் தனித்து வாழவதன் ஊடாகவே கட்டியெழுப்பமுடியும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். மாறாக, தமிழ் -முஸ்லிம் மக்களின் கூட்டுவாழ்வு என்ற கானல் நீரை மையப்படுத்தி தொடர்ந்தும் நாம் பயணிப்போமானால் தமிழ் மக்களை ஒடுக்குவற்கு சிறுபான்மை முஸ்லிம் மக்களை பயன்படுத்தும் சிங்கள பேரினவாத தந்திரத்துக்கு நாம் முழுமையாக பலியாவோம்.
 
எந்த நாட்டிலும் ஒரு இனத்தின் இருப்பு என்பது அந்த இனத்தின் பூர்வீக நிலம் எவ்வாறு தக்கவைக்கப்படுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது . கீழேயுள்ள படத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் தமிழர் தமது தாயகப்பரப்பை எந்தளவிற்கு இழந்துள்ளனர் என்பது தெளிவாக காட்டப்படுகிறது. அத்துடன் முஸ்லிம் மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் எவ்வாறு வடக்கு நோக்கி நகர்த்தப்படுகிறது என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது .
 
1946ல் மொத்த சனத்தொகையில் சிங்களவர்கள்-69.41 %, இலங்கை மிழர்-11.02%, முஸ்லிம்கள்-5.61%, மலையகத்தமிழர்-11.73% என்ற அளவில் காணப்பட்டனர். ஆனால் 2012ல் சிங்களவர்கள் -74.9% ( இது 7.9% வளர்ச்சி ), இலங்கைத் தமிழர்-11.1% ( இது 7.26% வளர்ச்சி), முஸ்லிம்கள்-9.3% ( இது 65.78% வளர்ச்சி), மலையகத்தமிழர்-4.1% ( இது -65.05% வீழ்ச்சி) ஆகும். அதாவது 65.78% இன வளர்ச்சியைக் கொண்ட முஸ்லிம் மக்களை வெறும் 7.26% வளர்ச்சியைக் கொண்ட வடகிழக்குக்கு தமிழ் மக்கள் மத்தியில் குடியேற்றும் போது எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை புரிந்துகொள்வது என்பது ஒன்றும் ராக்கட் தொழில்நுப்பம் அல்ல. 
 
அதாவது சில வருடங்களிலேயே தமிழர்கள் தமது பூர்வீக வாழ்விடமாக வடக்கு கிழக்கில் இரண்டாவது சிறுபான்மை இனமாக மற்றம் அடைவார்கள். இலங்கை வாழ் இன குழுமங்கள் இடையேயான இந்த சனத்தொகை அடிப்படையிலான வளர்ச்சி வீதத்தை சிங்களபேரினவாதம் புரிந்துகொண்டபடியால் தான் வில்பத்துகுடியேற்றத்தை தடுத்து நிறுத்தி உள்ளது. வில்பத்து குடியேற்றம் தடுக்கப்பட்டமைக்கு மாற்று ஏற்பாடாகவே முல்லைத்தீவின் முள்ளியவளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு எஞ்சிய நிலமாவது மிஞ்சவேண்டும் என்றால் பிரிந்து வாழ்வதே இவ்விரு இனத்தவர்களுக்கும் சிறப்பானது என்ற அடிப்படையில் அரசியல் செய்யவேண்டும். அதாவது தென்கிழகு அலகை முஸ்லிம்களுக்கு வழங்கி கிழக்கின் எஞ்சிய பகுதியை வடக்குடன் இணைப்பதே தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கையாக அமையும்.
 
நன்றி - சமகளம்
 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்