மீளக்குடிறுயேம் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்
16 ஆடி 2017 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 9481
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறி 27 ஆண்டுகள் கடந்துள்ளன.
கடந்த 3ஆம் நாள், சிறிலங்கா அரசாங்கத்தால் மயிலிட்டியின் கரையோரத்தைச் சேர்ந்த 54 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த இடத்தைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கை ஒளியைப் பெற்றுள்ளனர்.
மயிலிட்டியிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தையும் சிறிலங்கா அரசாங்கம் தற்போது விடுவித்துள்ளதானது மயிலிட்டியைச் சேர்ந்த மீனவ சமூகத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி 54 ஏக்கர் நிலங்களை உத்தியோகபூர்வமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனிடம் கையளித்தார்.
1980களில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமானது நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகக் காணப்பட்டதுடன் இது மீன்பிடித் தொழிலிற்கு பக்கபலமாகவும் இருந்தது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக மயிலிட்டித் துறைமுகம் உட்பட காங்கேசன் துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
1990ல் தனது சொந்த இடமான மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த 70 வயதுடைய மீனவரான பிள்ளையான் தவம், 17 ஆண்டுகளாக கோணப்புலம் மீள்குடியேற்றக் கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடித் துறைக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை இராணுவத்தினர் தன்னிடம் கையளிப்பார்கள் என இவர் நம்புகிறார்.
‘நாங்கள் இங்கு மீன்பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், நாங்கள் எமது நிலத்தில் குடியேற்றப்பட வேண்டும். சொந்த நிலங்களில் குடியேறும் மக்களுக்கு தற்போது எவ்வித வசதிகளும் வழங்கப்படவில்லை’ என தவம் தெரிவித்தார்.
மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கான அடிப்படை வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என சிவில் சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.
துறைமுகத்திற்கு அருகிலுள்ள கரையோரப் பகுதியைச் சேர்ந்த 54 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகத்தின் ஏனைய பகுதி தற்போதும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் பிரதித் தலைவர் பொன்னுச்சாமி ரஞ்சன் தெரிவித்தார்.
‘எமக்குச் சொந்தமான நிலம் முழுவதையும் எம்மிடம் கையளிக்குமாறு நாங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதன்மூலம் பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புடன் வாழும் மக்களின் எண்ணம் நிறைவேறும்’ என ரஞ்சன் தெரிவித்தார்.
எங்களுடைய பிள்ளைகள் பலருக்கு மயிலிட்டியில் வீடு உள்ளதே தெரியாது என ரஞ்சன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் 5400 ஏக்கர் நிலப்பரப்பானது தற்போதும் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவற்றைக் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சொந்த இடங்களில் மீள்குடியேறும் மக்களின் அவசியமான தேவைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தக் கூடியதும் வடமாகாணத்தின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியதுமான மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீளவும் நிர்மாணிப்பது தொடர்பாக மீன்பிடி அமைச்சு பல்வேறு வெளிநாட்டு உதவி வழங்கும் அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார்.
நன்றி - புதினப்பலகை