பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை மீறி தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுமா?
8 ஆடி 2017 சனி 18:17 | பார்வைகள் : 8977
சிறிலங்காவின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்கு, சுயாட்சி வழங்கும், அரசியல் சீர்திருத்தத்துக்கு பௌத்த மதகுருமார்கள் எதிப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்தம் தோய்ந்த யுத்தம் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் 1972 தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் 100,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது போன்று நாட்டில் மீண்டும் பிறிதொரு பிரிவினைவாத யுத்தம் இடம்பெறுவதற்குத் தான் இடமளியேன் எனவும், இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் கூடிய நிர்வாக அலகின் கீழ் வாழ்வதற்கான உறுதிப்பாடுகள் புதிய அரசியல் சீர்திருத்தத்தில் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கு சுயாட்சியை ஒத்த நிர்வாகத்தை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை பௌத்த மதகுருக்கள் எதிர்ப்பதாகவும், இது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்றும், மூத்த பௌத்த குருவான ஆனமடுவ தம்மதாசி கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும், இதிலிருந்து நாடாளுமன்றம் பின்வாங்காதுஎன்றும், இதன் மீது மக்களின் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
‘பௌத்த பிக்குகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால் 2015ல் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரமே தற்போது அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெறுகிறது’ எனவும் ராஜித சேனரட்ன தெரிவித்தார்.
maithri-mahasanga (1)
‘மக்களின் விருப்பிற்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம். பௌத்த மதகுருமார்கள் நாம் மக்களின் விருப்பிற்கு எதிராகச் செயற்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்’ எனவும் பேச்சாளர் ராஜித சேனரட்ன தெரிவித்தார்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் பௌத்தர்களாவர். இவர்கள் எப்போதும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குச் சார்பான அரசியல் சீர்திருத்தத்தை எதிர்த்தே வருகின்றனர்.
தற்போதைய அரசியல் சீர்திருத்தத்தை பௌத்த குருமார்கள் எதிர்ப்பதாகவும் இது தொடர்பில் மூத்த பௌத்த குருமார்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் மூத்த பௌத்த குருவான ஆனாமடுவ தம்மதாசி தெரிவித்தார்.
தற்போது பௌத்த மதகுருமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையானது சிறிசேனவிற்கு பாரியதொரு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கக்கூடிய சுயாட்சித் தீர்வை கடும்போக்கு சிங்கள மக்களும் எதிர்க்கின்றனர்.
கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களில் தாம் பாரபட்சப்படுத்துவதை எதிர்த்தே 1972ல் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த யுத்தமானது 2009ல் முடிவிற்கு வந்தது.
இந்த யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பல்வேறு மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கு நீதியை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தே சிறிசேன தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் நாட்டின் அதிபராகினார்.
நன்றி - புதினப்பலகை