Paristamil Navigation Paristamil advert login

விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்

விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்

21 ஆனி 2017 புதன் 03:18 | பார்வைகள் : 9787


அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
 
வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின்  மோசடி நாடகத்தை கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அம்பலப்படுத்தியிருந்தார். அத்துடன் இவர்களைப் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியடைந்தது. 2013ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
 
விக்னேஸ்வரன் மிகவும் மதிக்கப்படுகின்ற ஆளுமை மிக்க ஒருவர் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு விளக்கியிருந்ததுடன் இதன்மூலம் வடமாகாண மக்களின் பெரும்பான்மை வாக்குகளை விக்னேஸ்வரனுக்கு வழங்குமாறு மக்களிடம் கோரியிருந்தது.
 
விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்ச நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றி ஓய்வுபெற்றிருந்தார். இவர் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மூத்த உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிகளவில் பாராட்டியிருந்தனர்.
 
எனினும் இவர் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தான் ஒரு மிதவாதத் தலைவர் என்கின்ற சித்திரிப்பிலிருந்து  கடும்போக்குத் தலைவர் என்பதைக் காண்பிப்பதற்காக கூட்டமைப்புடனான  தொடர்பைக் குறைக்கத் தொடங்கினார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்புகளுக்கு எதிராக, திரு.விக்னேஸ்வரன் கடும்போக்கு தமிழ் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவைக்கு தனது  ஆதரவை வழங்கினார். தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக சம்பந்தனை அரசாங்கம் தவறாக வழிநடத்துவதாக இவ்வாண்டு பெப்ரவரி மாதம் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
மட்டக்களப்பில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான தீர்வொன்று 2016ல் வழங்கப்படும் என சம்பந்தனிடம் அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியிருந்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் விக்னேஸ்வரனிற்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் அதிகரித்தமையால் விக்னேஸ்வரனை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கூட்டமைப்பு தீர்மானித்தது. எனினும் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற காரணத்தினால் விக்னேஸ்வரனுடனான முறுகல்நிலையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை கூட்டமைப்பு ஆராய்ந்தது.
 
இந்நிலையில் கடந்த வாரம் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து வட மாகாண சபையைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கையளித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்னேஸ்வரன் கலந்துரையாடாது தீர்மானத்தை எட்டியது தவறானது என கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
 
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்திய தமிழ் அரசுக் கட்சியானது விரைவில் விக்னேஸ்வரனைப் பதவியிலிருந்து விலக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
 
வட மாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர்களைப் பதவி விலக வேண்டும் என விக்னேஸ்வரன் தீர்மானித்தமை தவறானது என்பதால் அவர் விரைவில் பதவியிலிருந்து விலக்கப்படுவார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
 
தான் வேட்பாளராகப் போட்டியிட்ட தனது சொந்தக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக விக்னேஸ்வரன் செயற்பட்டதால் இவர் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சில வடமாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டன. இக்குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக விக்னேஸ்வரனால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இதேவேளையில் விக்னேஸ்வரனைப் பதவியிலிருந்து விலக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டப் பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டன.  தனியார் போக்குவரத்துக்கள் தமது சேவைகளை அன்றைய தினம் நிறுத்தியிருந்தன.
 
நன்றி - புதினப்பலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்