சீனா, இந்தியா, ஜப்பானின் மிகப்பெரிய விளையாட்டுக் களமாகும் சிறிலங்காவின் துறைமுகங்கள்
24 சித்திரை 2017 திங்கள் 15:47 | பார்வைகள் : 9597
சிறிலங்காவில் இடம்பெற்ற பல பத்தாண்டு கால யுத்தம், 2009ல் நிறைவு பெற்ற பின்னர் நாடு தற்போது தன்னை அபிவிருத்தி செய்து வரும் தருணத்தில் இந்திய மாக்கடல் மீதான அனைத்துலக சமூகத்தின் அக்கறை அதிகரித்துள்ளது. இலங்கைத் தீவானது பல்வேறு பாரிய சக்தி வாய்ந்த நாடுகளின் கவனத்திற்கு உட்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளதன் காரணமாக உலக நாடுகளின் கவனமானது இதன் மீது குவிந்துள்ளது. இவ்வாறான பல்வேறு வாய்ப்புக்கள் சிறிலங்காவிற்கு வந்துள்ள போதிலும், இத்தீவானது சில பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளில் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளன. இதனால் இவ்விரு நாடுகளும் சிறிலங்காவுடனான தமது உறவைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 12 அன்று, ஜப்பானியப் பிரதமர் அபே மற்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க 2015ல் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஜப்பானுக்கு இரண்டாவது தடவையாகப் பயணம் செய்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவில் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்காக 410 மில்லியன் டொலர் நிதியைக் கடனாக வழங்குவதாக ஜப்பான் உடன்பட்டது. அத்துடன் திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 9.2 மில்லியன் டொலரை மானியமாக வழங்குவதாகவும் உறுதி வழங்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது சிறிலங்காவில் அபிவிருத்திகளை மேற்கொள்வதை ஒருங்கிணைப்பதற்காக சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிப்பதாகவும் ஜப்பான் தெரிவித்தது. இது மட்டுமல்லாது, சிறிலங்கா எயார்லைன்ஸ் சேவைக்கும் ஜப்பான் எயார் லைன்ஸ் சேவைக்கும் இடையில் தகவல் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையானது ஜப்பான் மற்றும் தென்னாசியாவிற்கு இடையிலான ஆறு புதிய வான் வழிகளை அனுசரணை செய்வதற்கும் கொழும்பு மற்றும் ரோக்கியோவிற்கு இடையில் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதற்கும் உதவும்.
‘இந்திய மாக்கடலானது சுதந்திரமாகவும் அனைத்து நாடுகளும் பயன்படுத்தத் தக்கவிதமாக அமையாவிட்டால், இப்பிராந்தியத்தில் உண்மையான செழுமை ஏற்படமாட்டாது. இதனால் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய துறைமுகங்களை விருத்தி செய்வதுடன் சிறிலங்காவை நிலையான வளர்ச்சியைக் கொண்டதொரு மையமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும்’ ரணில் விக்கிரமசிங்கவுடனான அண்மைய சந்திப்பின் போது, ஜப்பானியப் பிரதமர் அபே தெரிவித்திருந்தார்.
சுதந்திரமான கடற் போக்குவரத்து மற்றும் ஐ.நா கடல் சாசனத்தின் அதிகாரத்துவம் போன்ற தொடர்பில் சிறிலங்காவால் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டைத் தொடர்ந்தே ஜப்பான் இவ்வாறு தெரிவித்தது. ஜப்பானின் இந்த நிலைப்பாடானது சிறிலங்கா மீதான ஜப்பானின் கவனம் எத்தகையது என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், சிறிலங்காவிலிருந்து சீனாவை வெளியேற்ற வேண்டும் என்பதற்கான ஜப்பானின் கருத்தாகவும் நோக்க முடியும்.
இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் பிரசன்னத்தையும் குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து ஜப்பான் வரையான சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைக் கருத்திற் கொண்டே ஜப்பான் தனது கருத்தை வெளியிட்டிருந்தது. சிறிலங்காவானது வர்த்தக மற்றும் நிதி சார் மையமாக விளங்கும் எனவும் டோகா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான மையமாக விளங்கும் எனவும் ஜப்பானிற்கான தனது அண்மைய பயணத்தின் போது பிரதமர் விக்கிரமசிங்க உறுதி வழங்கியிருந்தார்.
‘வர்த்தகத்திற்கான ஒரு மையமாக சிறிலங்காவை ஜப்பான் பயன்படுத்த வேண்டும். பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக ஏற்கனவே எமக்கிடையில் காணப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பலப்படுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இதற்காக சிறிலங்காவானது சிங்கப்பூர் மற்றும் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஏனைய ஆசியன் அமைப்பைச் சேர்ந்த நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிற்குப் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ரோக்கியோவிற்கான சிறிலங்காப் பிரதமரின் பயணத்தை சமப்படுத்தும் நோக்குடன் சீனா தனது உயர் மட்டப் பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு அனுப்பியிருந்தது. இப்பின்னணியிலேயே சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பான சிறிலங்காவின் முயற்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலின் போது, இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக சீன அதிகாரிகளால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டதுடன் சீனாவின் 21ம் நூற்றாண்டிற்கான கடல் சார் பட்டுப்பாதைத் திட்டத்தில் சிறிலங்கா முக்கிய பங்காளியாக உள்ளதாகவும் சிறிலங்காவிற்கு வருகை தந்த சீனப் பிரதிநிதிகள் புகழந்துரைத்தனர். இவ்வாறான திட்டத்தின் மூலம் சிறிலங்காவானது அதிகரித்து வரும் சீனாவின் அக்கறையின் மூலமும் அபேயின் சுதந்திரமானதும் திறந்த இந்திய-பசுபிக் மூலோபாயத்திலிருந்தும் இந்தியாவின் ‘கிழக்கைப் பார் ‘Look East’ என்கின்ற கோட்பாட்டின் மூலமும் நன்மை பெறுகிறது.
சிறிலங்காவுடன் இராணுவ சார் உறவும் தற்போது வலுப்படுத்தப்படுகின்றது என்பதை இந்தியாவுடனான அண்மைய கூட்டு இராணுவப் பயிற்சியின் மூலம் உறுதிப்படுத்த முடியும். கடல்வழிப் பாதைகளுக்கு அண்மையில் கண்காணிப்பை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டே இந்த இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கும் மேலாக, சீனாவுடன் இணைந்து பாகிஸ்தானால் நிர்மாணிக்கப்பட்ட ஜே.எப் 17 போர் விமானங்கள் 12 ஐக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா முயற்சித்த போது இந்தியா தனது புதிய தயாரிப்பான தேஜஸ் விமானத்தை சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்ததது.
கரையோரக் கண்காணிப்புப் படகுகளைக் கொள்வனவு செய்வதற்காக 2016ல் சீனாவினால் சிறிலங்காவிற்கு 11 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டது. இந்தக் கொள்வனவு இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. ஜப்பானும் இரண்டு கண்காணிப்புப் படகுகளை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது.
சீனாவானது தனது இராணுவத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக சிறிலங்காவில் நிலைகொண்டு விடும் என ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை கொள்கின்றன. இதற்கு சிறிலங்காவினது இராணுவ மற்றும் பூகோளச் செல்வாக்குகளே காரணமாகும். ‘நாங்கள் எமது அனைத்து துறைமுகங்களையும் விரிவாக்க விரும்புகிறோம். இவை அனைத்தும் வர்த்தக சார் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு நாடும் எமது துறைமுகங்களை இராணுவ நோக்கிற்குப் பயன்படுத்த முடியாது’ என சிறிலங்கா பிரதமர் அறிவித்திருந்தார்.
சிறிலங்கா பிரதமரின் இந்த அறிவிப்பானது சீனாவிற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே நோக்க முடியும். ஏனெனில் சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்குத் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் எந்தவொரு நாடும் சிறிலங்கா துறைமுகங்களை தமது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியாது என பிரதமர் அறிவித்தமையானது சீனா மீதான பிற நாடுகளின் எதிர்மறைக் கருத்தை நீக்கியுள்ளதாகவே சீனா கருதுகிறது.
ஆகவே சிறிலங்காவின் இந்த அறிவிப்பானது சீனாவிற்கு வெற்றியாக உள்ளது. ஆனால் நடைமுறை உண்மை இதற்கு மாறானதாகவே உள்ளது. முதலாவதாக, சிறிலங்காவானது இவ்வாறானதொரு கோட்பாட்டை அமுல்படுத்துமாயின் இந்த விடயத்தில் அமெரிக்காவின் விருப்புக்களைப் புறந்தள்ள முடியாது. குறிப்பாக எந்தவொரு நாடும் சிறிலங்காவைத் தமது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியாது எனக் கூறினாலும் தற்போதும் சீனா சிறிலங்காவில் நன்மை பெற்று வருகிறது. சிறிலங்காவை இராணுவச் செல்வாக்கை நிலைப்படுத்த ஒரு நாடாக மாற்றுவதன் மூலம் இந்திய மாக்கடலின் வல்லரசு நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் தமது நடவடிக்கைகளை எவ்வித அச்சுறுத்தலுமின்றி முன்னெடுக்க முடியும் எனக் கருதுகின்றன.
இந்தப் போட்டியானது சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்திக்காக உலக நாடுகள் பலவும் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு காலாக அமைந்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மீது சீனாவும், திருகோணமலைத் துறைமுகம் மீது ஜப்பான் மற்றும் இந்தியாவும், யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவும் என உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் தமது இருப்பைப் பலப்படுத்துவதற்கு சிறிலங்காவின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளன. 2016ல் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது 4.4 சதவீதமாக இருந்ததால் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று சிறிலங்காவின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. இது சிறிலங்காவின் உள்நாட்டிலும் சில பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
கட்டுமாணத் திட்டங்கள் தொடர்பில் சிறிலங்காவானது ஏனைய நாடுகளுடன் செய்து கொள்கின்ற சில ஒப்பந்தங்கள் அநீதியானவை எனச் சுட்டிக்காட்டி இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் திருகோணமலையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்திற்கும் உள்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதேபோன்று எட்டு தொடக்கம் பத்து மைல்கள் வரை கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதற்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதேபோன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15,000 ஏக்கர் நிலத்தை பொருளாதார வலயமாக மாற்றுவதற்கான சீனாவின் திட்டத்தை எதிர்த்தும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
இத்திட்டத்திற்காக சீனாவினால் 1.4 பில்லியன் டொலர்களும் அம்பாந்தோட்டையில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்காக 13 பில்லியன் டொலர்களையும் சீனா வழங்க முன்வந்தது. நிதி நகரம், துறைமுகம் போன்ற பல்வேறு அபிவிருத்திகள் மூலம் 83,000 தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் உள்ளுர் மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இத்திட்டமானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இப்புதிய அபிவிருத்தித் திட்டமானது அந்த இடங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தீமை அளிப்பதாகச் சுட்டிக்காட்டியே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அம்பாந்தோட்டை திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்பானது சீன சிறிலங்கா உறவில் பெரியளவில் தாக்கத்தைச் செலுத்தவில்லை. மாறாக சிறிலங்கா மீதான சீனாவின் நிலைப்பாடானது இன்னமும் பலமாகவே உள்ளது. சிறிலங்கா அரசாங்கமானது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு செயற்படும் போது அதிகாரத்துவம் மிக்க நாடுகள் மத்தியில் காணப்படும் போட்டியின் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதுடன் தனக்கும் தனது மக்களுக்கும் நன்மையளிக்கத்தக்க செயற்பாடுகளை நோக்கிச் செல்லமுடியும்.
நன்றி - புதினப்பலகை