Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்

4 மார்கழி 2016 ஞாயிறு 20:33 | பார்வைகள் : 9581


 ட்ரம்ப்  ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

 
ட்ரம்ப் வழக்கத்திற்கு மாறான அதிபர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது மட்டுமன்றி, இவரது தேர்தல் கருத்தியல்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வரலாற்றில் பின்பற்றப்படும் இருகட்சி ஒருமித்த ஆட்சிக்கும் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
 
‘பூகோளமயமாக்கல் என்கின்ற தவறான எண்ணக்கருவிற்குள் அமெரிக்கா தொடர்ந்தும் சரணடைவதற்கு நாம் அனுமதியோம். நான் அமெரிக்காவின் அதிபரான பின்னர், (பூகோள) ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் யுகத்தை முடிவிற்குக் கொண்டு வருவதுடன், புதிய வெளியுறவுக் கோட்பாடு ஒன்றை உருவாக்குவதே எனது முதன்மையான கொள்கை வகுப்பு நோக்காக இருக்கும்’ என அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் ஆற்றிய முக்கிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
 
ட்ரம்ப் தனது அதிபர் தேர்தல் பரப்புரைகளில், அமெரிக்கா பிற நாடுகளின் விவகாரத்தில் குறிப்பாக ஈராக்கிய யுத்தம், லிபியா போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வது தொடர்பாகவும் நேட்டோ மற்றும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு உதவுதல் தொடர்பாகவும் மிகக் கூர்மையாக விமர்சித்திருந்தார்.
 
ட்ரம்பின் இந்தக் கருத்தானது எவ்வளவு தூரம் கொள்கை வகுப்பாக மாற்றமுறும் என்பது எமக்குத் தெரியாது என சிங்கப்பூருக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் அமெரிக்க-ஆசிய வல்லுனருமான  பிராங்க் லவின் தெரிவித்துள்ளார்.
 
‘ தேர்தல் பரப்புரையின் போது ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள் எவ்வளவு தூரம் கொள்கை வகுப்பாக மாற்றமுறுமோ என்பது உண்மையில் எமக்குத் தெரியாது. ட்ரம்ப் தனது முக்கிய அமைச்சர்களை யார் யாரை நியமிக்கப் போகிறாரோ அதை வைத்து அவரது ஆட்சி தொடர்பாக ஊகிக்கலாம்’ என கொழும்பில் இயங்கும் ‘அட்வோக்கற்றா’ கொள்கை வகுப்பு மையத்திற்கு இணையவழி மூலம் உரையாற்றும் போது பிராங்க் லவின் குறிப்பிட்டார்.
 
‘ட்ரம்ப் யார் யாரை அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராகவும், பாதுகாப்பு மற்றும் திறைசேரிச் செயலராகவும் நியமிக்கவுள்ளார் என்பதை இந்த உலகம் உற்றுநோக்குகிறது. அமெரிக்க அரசியலின் மரபிற்கு இசைவாக இவரது தெரிவு இடம்பெறுமா என்பதையும் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவம் தொடர்பிலும் ட்ரம்ப் மாற்றம் கொண்டு வருவாரா என்பதையும் அரசியல் அனுபவங்கள் இல்லாதவர்கள் இந்தப் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்களா என்பதையும் இந்த உலகம் உற்றுநோக்குகிறது.
 
அதிபர் ட்ரம்ப் அதிபர் பதவியை ஏற்கும் வரை இது தொடர்பில் நாங்கள் ‘காத்திருந்து பார்த்தல்’ என்கின்ற அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்’ எனவும் ஆய்வாளர் லவின் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் பிரதான கொள்கை வகுப்பு நீரோட்டங்கள் பலவற்றுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ட்ரம்ப் இதுவரை சிலரைத் தெரிவு செய்துள்ளார். அதாவது ட்ரம்ப்பை முன்னர் விமர்சித்த லுயிசியானா ஆளுநர் நிக்கி ஹாலே ஐ.நாவிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவராகத் தெரிவு செய்யப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
வெளியுறவு அமைச்சருக்குச் சமனான பதவியைக் கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலராக முன்னாள் ஆளுநர் மிற் றொம்னி தெரிவு செய்யப்படுவது தொடர்பாக அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தீவிர கவனத்திற் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகின்றமை மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ட்ரம்ப் அதிபர் தேர்தலில் நின்ற போது அதனை மிகத் தீவிரமாக விமர்சித்தவர்களில் றொம்னியும் ஒருவராவார். இவர் இறுதிவரை ட்ரம்ப்பின் அதிபர் பரப்புரையை விமர்சித்திருந்தார். இவர்களின் தெரிவுகள் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
 
‘ஒவ்வொரு அதிபர்களும் தாம் ஆட்சிக்கு வரும் போது தமது முத்திரையைப் பதிக்க விரும்புகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட இதனைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லக்கூடிய போக்கே காணப்படுவதாக நான் கருதுகிறேன். அதிபர் ட்ரம்ப் ஒரு ‘வித்தியாசமான வேட்பாளராக’ தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். ஆகவே சில மாற்றங்கள் ஏற்படுவது நிச்சயமானதாகும். எதுஎவ்வாறெனினும், அமெரிக்கா என்பது புதிய நாடல்ல. இதற்கான சவால்களும் புதியனவாக இருக்காது. தற்போதும் எமது தேசிய நலன்கள் ஒன்றாகவே காணப்படுகின்றன. ஆகவே வெளியுறவுக் கோட்பாடுகளைப் புதுப்பிக்காது சில முன்னேற்றங்களை ஏற்படுத்துவது சிறந்ததாக இருக்கும்’ என லவின் தெரிவித்தார்.
 
இந்த விடயம் மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் உறுதியான கோட்பாடுகளைக் கொண்டிராத சிறிய நாடுகள் தொடர்பில சரியாக இருக்கலாம் எனவும் இவ்வாறான நட்புறவுகள் பாரம்பரிய இராஜதந்திரத்தை மையப்படுத்தியதாக இருக்கலாம் எனவும் லவின் தெரிவித்தார்.
 
பன்முக வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் ட்ரம்ப்பின் நகர்வுகள் அச்சமளிக்கின்றன. அதாவது யப்பான், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உட்பட 12 றிம் நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான ரன்ஸ் பசுபிக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகவுள்ளதாக ட்ரம்ப் கடந்த வாரம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
‘ரன்ஸ்-பசுபிக் கூட்டு ஒப்பந்தமானது ஆசியப் பிராந்தியத்திற்கான கட்டுமானம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்காவிற்கு அனுமதி வழங்குவதுடன் அனைத்துத் தரப்பினர்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. அமெரிக்கா இவ்வாறான கட்டுமானங்களை உருவாக்காவிட்டால், ஏனைய நாடுகள் இவற்றை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டியேற்படும். சிலர் அமெரிக்காவுடன் இணைந்தும் சிலர் அமெரிக்காவைத் தவிர்த்தும் இவற்றை மேற்கொள்ளும் நிலை உருவாகும்’ என 2005-2007 வரை அனைத்துலக வர்த்தகத்திற்கான அமெரிக்காவின் கீழ்நிலைச் செயலராகப் பதவி வகித்த பிராங்க் லவின் தெரிவித்தார்.
 
சீனாவின் அதிகாரத்துவம் மிக்க ஏற்றுமதியை எதிர்ப்பது என்கின்ற நோக்கையும் இந்தக் கூட்டு உடன்படிக்கை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வர்த்தகம் தொடர்பான சீனாவின் மனப்பாங்குகள் தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதிகள் அடிக்கடி முறையீடு செய்கின்றனர் என்கின்ற கருத்தை லவின் ஏற்றுக்கொண்டார்.
 
‘சீனாவானது வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றது. இவர்கள் தேசிய அளவில் முன்னணி வர்த்தக அமைப்புக்களையும் இந்த அமைப்புக்களுக்குச் சாதகமான தொழிற்துறைக் கோட்பாடுகளையும் கொண்டுள்ளனர்’ என லவின் தெரிவித்தார். ஆகவே சீனாவின் இத்தகைய சவாலை முறியடிப்பதற்கு ரன்ஸ்-பசுபிக் கூட்டு ஒப்பந்தம் துணையாக இருக்கும் என லவின் கூறுகிறார்.
 
சிறிலங்காவிற்கு இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? இந்தக் கூட்டு ஒப்பந்தம் முறியடிக்கப்படுமாயின், 40 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளை சிறிலங்கா இழக்க வேண்டியேற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
 
இந்த ஒப்பந்தத்திற்குப் பதிலாக, ‘நீதியான, இருதரப்பு ஒப்பந்தங்களை’ மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-சிறிலங்கா இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் தொடர்பாக இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.
 
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் இவற்றுக்குப் பொறுப்புக் கூறுவதாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்கா வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை இவற்றை  நிறைவேற்றாமையால் சிறிலங்கா மீது ஏற்கனவே அனைத்துலக சமூகம் அதிருப்தியுற்றுள்ளது. இந்நிலையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.
 
ஏனெனில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத வெளியுறவுக் கோட்பாட்டையே தனது ஆட்சியில் உருவாக்குவேன் என ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளதால் அமெரிக்கா இராஜதந்திரத்தின் முழுமையான பொறிமுறையும் தலைகீழாக மாறும் நிலை உருவாகலாம்.
 
ஆகவே ட்ரம்ப் தனது வெளியுறவுத் துறைக்கான முக்கிய இராஜாங்கச் செயலர்களாக யார் யாரை நியமிக்கிறார் என்பதிலேயே இவரது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதை ஊகிக்க முடியும் என தூதுவர் லவின் தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே இதனை நாம் காத்திருந்தே பார்க்க வேண்டும்.
 
-புதினபலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்