மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா
7 ஐப்பசி 2016 வெள்ளி 13:43 | பார்வைகள் : 10735
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன், வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அனைத்துலக நாணய நிதியத்திடம் மேலும் கடன் கோருவதற்கும் வழிவகுக்கிறது.
சிறிலங்காவில் தற்போது 64.9 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 8 பில்லியன் டொலர்கள் சீனாவிற்குச் சொந்தமானது எனவும் அரச மதிப்பீடுகள் சுட்டிநிற்கின்றன. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 75 சதவீதமானவை கடனாகவும், அரசாங்கத்தின் வருவாயில் 95.4 சதவீதமானவை கடனை மீளச்செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கும் மேலாக, பெருந்தொகையான கடனானது அரசாங்கத்தின் வழமையான வழிமுறைகள் ஊடாகப் பெறப்படுவதாகவும் முன்னைய அரசாங்கமானது தன் சார்பாக கடனைப் பெற்றுக் கொள்வதற்காக அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலதிகமாக எவ்வளவு தொகையான நிதி பெறப்பட்டது என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் கூட, 9.5 பில்லியன் டொலர் கடனானது நிதி அமைச்சுத் தவிர்ந்த பிற அரச திணைக்களங்களின் ஊடாகப் பெறப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
‘இந்த நாடு பெற்றுக் கொண்ட மொத்தக் கடன் பெறுமதி எமக்கு இன்னமும் சரியாகத் தெரியவில்லை’ என இம்மாத ஆரம்பத்தில் நாட்டின் பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற அதிகூடிய செலவுமிக்க கட்டுமானத் திட்டங்களுக்காகவே அதிக கடன் பெறப்பட்டது. 2009 மற்றும் 2014 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகையானது மும்மடங்காக அதிகரித்தது. அத்துடன் வெளிக்கடன் இரண்டு மடங்காகவும் அதிகரித்தது. காட்டின் நடுவே அனைத்துலக விமானநிலையம் ஒன்றையும் பல பில்லியன் டொலர் பெறுமதியான நகரம் ஒன்றையும் கட்டும் திட்டம் போன்ற பல்வேறு பயனற்ற திட்டங்களுக்காகவே பெருந்தொகையான கடன்பெறப்பட்டது.
இதேபோன்று என்றுமில்லாதவாறு அதிகூடிய செலவுமிக்க அதிவேகப் பாதை மற்றும் கொழும்புத் துறைமுகத்திலிருந்து பாறை ஒன்றை அகற்றுவதற்காக 42 மில்லியன் டொலர் செலவிடப்பட்டமை போன்ற தேவையற்ற செலவுகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது கடந்த அரசாங்கத்தை விடச் சிறப்பாகச் செயற்படுகிறது எனக் கருதமுடியாது. நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டுக் கடனானது 12 வீதத்தாலும் வெளியகக் கடனானது 25 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. அதாவது எந்தவொரு புதிய கட்டுமாணத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படாத நிலையிலும் கூட இவ்வாறானதொரு கடன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச தனது கவனத்திற் கொள்ளத் தவறவில்லை என்பது இங்கு முக்கிய விடயமாகும். தற்போதைய அரசாங்கம் இதுவரை கடனாகப் பெற்ற நிதியில் தன்னால் ‘ இரண்டு மத்தல விமானநிலையம், ஒரு அம்பாந்தோட்டைத் துறைமுகம், ஒரு நுரைச்சோலை மின்னாலை, ஒரு கொழும்பு – மாத்தறை அதிவேகப் பாதை, ஒரு கொழும்பு- கட்டுநாயக்க அதிவேகப் பாதை, இரண்டு கொழும்புத் துறைமுக நகரங்கள் மற்றும் 500 மெகாவாட் சம்பூர் மின்னாலை போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டிருக்க முடியும் என மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவானது வெளிவர முடியாத அளவிற்கு கடன்பொறிக்குள் சிக்குப்பட்டுத் தவிக்கின்றது. இந்த ஆண்டு மாத்திரம் 4.5 பில்லியன் டொலர் நிதியை வெளிநாட்டுக் கடன்வழங்குனர்களுக்கு மீளச் செலுத்த வேண்டிய நிலையிருப்பதுடன் 4 பில்லியன் டொலர் நிதியை அடுத்த ஆண்டு மீளச் செலுத்த வேண்டிய நிலையிலும் சிறிலங்கா உள்ளநிலையிலும் கூட இந்தக் கடனை எவ்வாறு மீளச்செலுத்துவது என்பதற்கான எந்தவொரு வழியையும் இன்னமும் கண்டறியவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடன்தொல்லைக்கு பல்வேறு உள்ளகத் தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதாவது சீனா போன்ற பெருந்தொகையான கடனைப் பெற்ற நாடுகளுக்கு சமபங்குப் பரிமாற்றம் மூலம் கடனை மீளச்செலுத்த முடியும் எனவும் நட்டத்தில் இயங்கும் அரச திணைக்களங்களை தனியார்மயப்படுத்த முடியும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவானது தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வரையறை ஒன்றை வரைந்து கொள்வதற்கான தனது உடன்பாட்டை வழங்கிய பின்னர் கடந்த ஏப்ரலில் 1.5 பில்லியன் டொலர் நிதியைக் கடனாகத் தருவதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்தது.
எனினும், இந்த நிதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மேலதிகமாக 5 பில்லியன் டொலரை சேமித்து வைத்துக் கொள்வதே தனது நோக்காக உள்ளதாகவும் இதன்மூலம் நாடானது மேலும் கடன்பொறிக்குள் தள்ளப்படுகின்றது என்பதை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து உறுதிப்படுத்துவதற்கான ஒரு உத்தரவாதமாகவும் பெறுவதே தனது நோக்கம் எனவும் சிறிலங்காவின் மத்திய வங்கி அறிவித்துள்ளதாக கிழக்காசிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.