Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச அரசியல் மாற்றங்களும் இலங்கையின் எதிர்காலமும்

சர்வதேச அரசியல் மாற்றங்களும் இலங்கையின் எதிர்காலமும்

24 ஆடி 2016 ஞாயிறு 21:36 | பார்வைகள் : 9906


 டேவிட் கெமரூன், இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உலகத் தலைவர்களில் முக்கியமானவர்.

 
கொமன்வெல்த் மாநாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்துக்கு வந்து, அகதி முகாம்களுக்குள் நுழைந்து பார்த்து, தமிழ் மக்களின் இதயங்களையும் கவர்ந்த ஒருவர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், நம்பகமான விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியைக் கடைப் பிடித்தவர்.
 
அவர் பதவியை விட்டு விலகியிருப்பது, பிரித்தானிய மக்களுக்கு தீமையை ஏற்படுத்தியதோ இல்லையோ, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஏமாற்றம் தான்பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம், அமெரிக்காவில் நடக்க வுள்ள ஜனாதிபதி தேர்தல், அடுத்த ஐ.நா. பொதுச்செயலர் யார் என்பன தற்போதைய சூழலில், இலங்கை விவகாரத்தில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தக் கூடியன என்று பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
 
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகள் மற்றும் அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை எல்லாவற்றுடனும் இந்த விவகாரங்கள் தொடர்புபட்டதாக மாறியுள்ளன.
 
சர்வதேச அரசியல் மாற்றங்கள் இலங்கையின் உள்விவகாரங்களுடன் தொடர்புடையதாகவும் அவ்வப்போது அமைந்து விடுகின்றன.அதனால் தான், பிரித்தானியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், புதிய ஐ.நா. பொதுச்செயலர் விவகாரம் எல்லாமே இலங்கையில் எதிர்பார்ப்புக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து, பிரதமராக இருந்த டேவிட் ெகமரூன் பதவி விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக தெரெசா மே என்ற பெண், பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.
 
டேவிட் கெமரூன், இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உலகத் தலைவர்களில் முக்கியமானவர்.
 
கொமன்வெல்த் மாநாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்துக்கு வந்து, அகதி முகாம்களுக்குள் நுழைந்து பார்த்து, தமிழ் மக்களின் இதயங்களையும் கவர்ந்த ஒருவர்.ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், நம்பகமான விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியைக் கடைப்பிடித்தவர்.
 
அவர் பதவியை விட்டு விலகியிருப்பது, பிரித்தானிய மக்களுக்கு தீமையை ஏற்படுத்தியதோ இல்லையோ, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றம் தான்.அதற்காக டேவிட் கெமரூன் ஒன்றும், தமிழர்களுக்கு சுதந்திரத்தையோ உரிமைகளையோ கொடுத்துவிடத் தயாராக இருந்தவரில்லை.
 
ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட உலகத் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார் என்பதே முக்கியமானது.அவர் மட்டுமன்றி, அவரது அமைச்சரவையில் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரப் பணியக இணை அமைச்சராக இருந்த ஹியூகோ ஸ்வயரும் கூட பதவியை இழந்துள்ளார்.
 
புதிய அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வழங்கப்படாததால் அவர் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவரும் கூட இலங்கை விவகாரத்தில் ஆழமான- அழுத்தமான பார்வையைக் கொண்ட ஒருவராகவே இருந்தார்.
 
டேவிட் கெமரூன் அல்லது ஹியூகோ ஸ்வயர் ஆகியோர் ஒன்றும் தமிழர் மக்களின் நலன்களை மட்டுமே சிந்தித்தவர்கள் என்று கருதுவதற்கில்லை.ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டவர்களாகவும், நியாயமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தனர்.
 
இவர்கள் இல்லாத பிரித்தானிய அமைச்சரவை இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது- தெரெசா மே அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்று இன்னமும் தெரியவில்லை.
 
ஏற்கனவே இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தான் மீண்டும் அரசாங்கத்தை அமைத்திருக்கிறது என்பதால், பெரியளவில் கொள்கை ரீதியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்க முடியாவிடினும், புதிய அரசாங்கம் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு கணிசமான காலத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.
 
எனவே, முன்னர் இருந்தளவுக்கு இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா அழுத்தமான கருத்துக்களை முன்வைக்குமா என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. அதுமாத்திரமன்றி, தெரெசா மே அரசாங்கத்தில் புதிய சர்வதேச வர்த்தக அமைச்சராக, லியம் பொக்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.
 
இவர் 1990களின் பிற்பகுதியில் இருந்து இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு காட்டியவர். ஆரம்பத்தில் அவர், இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். அவரது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
 
எனினும், பின்னர் மஹிந்த ராஜபக் ஷ அர சுக்கும், அவருக்கும் இடையில் ஆழமான தொடர்புகள் இருந்து வந்தன.போர் முடிந்த பின்னர், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வாங்கிக் கொடுக்கும் ஒருவராக செயற்பட்டதாகவும், லியம் பொக்ஸ் மீது குற்றச்சாட்டுகளை சனல்-– 4 முன்வைத்திருந்தது.
 
எவ்வாறாயினும், கொழும்பு அரசியல் உயர் மட்டங்களுடன் நன்கு தொடர்புள்ளவரான லியம் பொக்ஸ், தெரெசா மே அரசாங்கத்தில் இலங்கை தொடர்பான கொள்கைகளை தீர்மானிக்கும் ஒருவராக மாறுவாரேயானால், அது தமிழர்களின் நலன்களுக்குப் பாதகமாகவே இருக்கலாம்.
 
அதுபோலவே, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், யார் வெற்றி பெறுவார் என்பதும், இலங்கையில் எதிர்பார்ப்புக்குரிய விவகாரமாகவே உள்ளது.
 
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் மோதுகின்ற இந்த தேர்தலில், ஹிலாரி கிளின்டனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே நம்பப்படுகிறது.
 
முற்கூட்டிய கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி முன்னணியில் இருக்கிறார். முதல் பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பு என்பது ஹிலாரிக்குப் பலம் என்றால், தனது கடும்போக்கான கருத்துக்களால் பிரசாரம் செய்து வரும் ட்ரம்புக்கு, அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் பலத்தை அளித்திருக்கின்றன.
 
இறுதியில் வெல்லப் போகிறவர் ஹிலாரியாக இருந்தால், இலங்கை விவகாரம் அவருக்குப் புதியதல்ல. இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுடிவருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஹிலாரியும் ஒருவர்.
 
அவர் இராஜாங்கச் செயலராக இருந்த காலத்தில் தான் ஜெனிவாவில் மகிந்தவுக்குப் பொறி வைக்கும் வேலை தொடங்கப்பட்டது.மீண்டும் அவர் பதவிக்கு வந்தால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் பெரியளவில் மாற்றமடையாது என்றே நம்பலாம்.
 
அதற்காக, இப்போது அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான கொள்கை எதையும் கடைப்பிடிப்பதாக அர்த்தமில்லை.அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை, இலங்கை மீதான முன்னைய பிடியைத் தளர்த்துகின்ற விதமாகவே அமைந்திருக்கிறது.
 
அதனால் ஹிலாரி கிளின்டன் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழர் தரப்புக்குப் பெரியளவில் சாதகமான மாற்றங்கள் உடனடியாக நிகழும் என்று கூறிவிட முடியாது. அதற்காக முற்றிலும் பாதகமான நிலை காணப்படும் எனவும் கருத முடியாது.
 
ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழர் தரரப்பு நிம்மதி கொள்ளலாம் அது என்னவெனின், இலங்கை விவகாரம் அவருக்குப் பரிச்சயமான ஒன்று. புதிதாகப் புரிய வைக்க வேண்டிய விடயம் அல்ல என்பதே அது.
 
அதேவேளை கடும்போக்காளராக தன்னை வெளிப்படுத்தி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், வெற்றி பெறுவாரானால், உலகளாவிய ரீதியாக கொந்தளிப்பான நிலை ஒன்று தோன்றலாம். காரணம் அவர் ஐஎஸ் தீவிரவாதத்துக்கு எதிராகப் போர் தொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
 
அவரது கடும்போக்கு இலங்கையைப் பொறுத்தவரையிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதொன்று தான். குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் தான் மத்திய கிழக்கிலும், தெற்காசியாவிலும் பல போர்களை அமெரிக்கா நடத்தியது.
 
அதுபோலவே, இலங்கையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் ஜோர்ஜ் புஷ் தலைமையிலான குடியரசுக் கட்சி அரசாங்கம் தான் காரணமாக இருந்தது.
 
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக வைத்திருப்பது, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதே குடியரசுக் கட்சி சார்ந்தவர்களின் பொதுவான கருத்தாக இருந்து வந்திருக்கிறது.
 
எனவே, டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தால், இலங்கை அரசுடன் மேலும் நெருக்கமான நிலை உருவாகவும், தமிழர் தரப்பு அமெரிக்காவிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்தப்பட்டுப் போகவும் வாய்ப்புகள் உள்ளன.
 
இது இறுதியான நிலையாக இருக்கும் என்று கூறமுடியாவிடினும், தற்போதைய சூழலில் ஒபாமா அரசு பொறுப்புக்கூறல் விடயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கையை விடவும் தளர்வான கொள்கைகளே அவர் கடைப்பிடிக்கக் கூடும்.
 
அது தமிழர் தரப்புக்கு நம்பிக்கையீனத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கத்தக்க ஒன்றாக அமையலாம்.எனவே நவம்பர் 4ஆம் திகதி நடக்கப்போகும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இலங்கையைப் பொறுத்தவரையில், குறிப்பாக தமிழர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகவே இருக்கிறது.
 
இதுமட்டுமன்றி, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பதவிக்காலமும் கூட இந்த ஆண்டு நிறைவடையப் போகிறது. அடுத்து யார் இந்தப் பதவிக்கு வரப்போகிறார் என்ற கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.
 
பான் கீ மூன், இலங்கையில் தமிழர் விவகாரத்தில், பெரிதாக ஒன்றும் நீதியை நிலைநாட்டுவதற்காக செய்து விடவில்லை என்றாலும், சர்வதேச அரங்கில், இலங்கை அரசுக்கு பொறுப்புக்கூறல் நெருக்கடியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் என்பதை மறுக்க முடியாது.
 
இறுதிப் போர் மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை மற்றும் அரசியல் போக்கை நன்றாகவே அறிந்து வைத்திருந்தவர் அவர்.புதியவர் எவ்வாறானவராக வரப் போகிறார்- அவருக்கு இலங்கை விவகாரம் தொடர்பான எத்தகைய புரிதல் இருக்கும் என்பது தெரியாது.
 
பான் கீ மூன் இறுதிப் போர்க்காலத்தில் ஐ.நா பொதுச்செயலராக இருந்தவர் என்பதாலும், போர் முடிந்ததும் இலங்கைக்கு வந்து சென்றவர் என்பதாலும், இந்த விவகாரத்தின் மீது அவருக்கு தனியான கவனம் இருந்தது.
 
ஆனால், புதிதாக வரப் போகின்ற ஐ.நா பொதுச்செயலர் இலங்கை விவகாரத்தில் தனியான கவனம் செலுத்தும் ஒருவராக மாறுவதற்கான புறநிலை ஏதும் இல்லாத ஒரு சூழலில், அவருக்கு அத்தகைய தனிக்கவனம் ஏற்படுமா என்பது சந்தேகம் தான்.
 
இலங்கையின் எதிர்காலம், சர்வதேச சக்திகளினாலேயே தீர்மானிக்கப்படும் ஒன்றாக இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் ஏற்படுகின்ற இந்த முக்கிய மாற்றங்கள், இலங்கையின் மீது, குறிப்பாக தமிழர் தரப்பின் எதிர்பாரப்புகளின் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது, கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.
 
-ஹரிகரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்