Paristamil Navigation Paristamil advert login

மைத்திரி - ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

மைத்திரி - ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

13 ஆடி 2016 புதன் 07:41 | பார்வைகள் : 9793


 கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நாட்டின் இளவரசராகவும் அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் எனவும் வர்ணிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

 
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டு, வெலிக்கடை மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
70 மில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் பரிமாற்றம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கோட்டே நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இதன்போது நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த கைது நடவடிக்கையின் பின்னர் பல்வேறு தரப்பினரும் தத்தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நல்லாட்சியில் நீதிக்கு கிடைத்த வெற்றி இது என ஆளும் தரப்பு உறுப்பினர்களும், இதுவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கூட்டு எதிர்க்கட்சியினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
 
பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை வெளியுலகுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், இது நன்கு திட்டமிட்ட கைது என்பது பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட உடன்படிக்கையின் ஒருவடிவமாக இந்த கைது அமைந்துள்ளது.
 
நாமல் ராஜபக்ஷக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல கொலை குற்றங்கள் அடங்கும். குறிப்பாக பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலையுடன் நாமல் ராஜபக்ஷ நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டது.
 
இதற்கான ஆதாரங்கள் உள்ள போதும் விரைவில் கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இன்று கைது செய்யப்படுவார், நாளை கைது செய்யப்படுவார், விரைவில் கைது செய்யப்படுவார் என பல்வேறு ஊகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. எனினும் நிதி மோசடி குற்றச்சாட்டில் நாமல் கைது செய்யப்பட்டுள்ளார். இது நன்கு திட்டமிட்ட அரசியல் நாடகமாகும்.
 
கடந்த ஆட்சியில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷ ரெஜிமென்ட்டை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்கும் அபாய நிலை உள்ளது. இது குறித்து மஹிந்த தரப்பும் நன்கு அறியும். அவர்களின் மோசடிகளுக்கு வலுவான சாட்சியங்களும் ஆதாரங்களும் சமகால அரசாங்கத்தில் உள்ளது. எனினும் இதுவரையும் காத்திரமான நடவடிக்கையை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
சமகால அரசாங்கத்திலுள்ள கடும் அழுத்தமே இதற்கு பிரதான காரணமாகும். தாஜுடீன் கொலையுடன் தொடர்புடைய பல இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதில் விசேடமாக கொலைக்கான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இவரின் ஊடாக தாஜுடீன் கொலை தொடர்பில் பல்வேறு ரகசியங்கள் அம்பலமாகும் அபாயம் உள்ளது.
 
இதனை நன்கு அறிந்த கொண்ட மஹிந்த தரப்பு, அநுர சேனநாயக்கவுடன் சமரசம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இதற்காக சட்டத்தரணிகள் ஊடாக சில ஆலோசனைகளை மஹிந்த முன்வைத்திருந்தார்.
 
அதாவது தாஜூடீன் கொலையுடன் நாமலுக்கு இருக்கும் தொடர்புகளை வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும் சேனாநாயக்க அதனை மறுத்திருந்தார். உண்மைகளை வெளிப்படுத்துவதுடன் அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறுவதாக அவர் திடமாக இருந்தார்.
 
பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட மஹிந்த தரப்புக்கு தோல்வி கிடைத்தது.
 
கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மஹிந்த தரப்பு, நல்லாட்சி அரசாங்கத்துடன் சில இணக்கப்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 
அங்கு இடம்பெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தான் நாமலின் கைது அமைந்துள்ளது.
 
அதாவது இலகுவில் வெளி வரக்கூடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து பின்னர் விரைவாக பிணையில் விடுதலை செய்வது என்பதே அதன் உடன்படிக்கையாகும். பாரதூரமான வழக்குகளில் கைது செய்வதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான இணக்கப்பாட்டுக்கு மஹிந்த உட்பட்டிருந்தார்.
 
இதன் அடிப்படையில் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்க நாமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முதற்தடவையில் தவணை கேட்டிருந்த நாமல், அடுத்தடுத்த அழைப்புகளை நிராகரித்திருந்தார்.
 
விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகவில்லை. இதனடிப்படையில் சட்டத்தை அவமதித்தார் என்ற அடிப்படையில் நாமல் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 70 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, மஹிந்த பெரும் அதிர்ச்சி அடைந்ததுடன் கண்ணீருடன் ஊடகங்களில் முன்னிலையில் காட்சியளித்தார்.
 
ஆனால் நாமலின் கைதினை அடுத்து மஹிந்த எந்தவிதமான கவலையையும் வெளிப்படுத்தவில்லை. நாமலின் கைது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்பதால் அவ்வாறான தாக்குத்திற்கு மஹிந்த முகங்கொடுக்கவில்லை.
 
மாறாக இந்த கைது எங்களை ஒன்றும் செய்து விடாது. விரைவில் வருவோம் என்ற கருத்தினை மஹிந்த தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
 
பெரும்பாலும் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் நாமல் ஆஜர்படுத்தப்படும் போது பிணையில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகளே அதிகமாவுள்ளது. இதன்மூலம் ராஜபக்ஷ ரெஜிமென்ட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட கூட்டணியின் நாடகம் சிறந்த முறையில் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேவேளை குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யாமல் காலத்தை இழுத்தடிக்கும் அரசாங்கம் என மக்களால் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் பாரிய குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபக்ஷ குடும்பம் இலகுவாக தப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
 
இலங்கையில் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மஹிந்தவின் இளைய மகன் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
தற்போது நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரும் விடுதலை பெற்றுவிடுவார்.
 
பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மற்றுமொருவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளனர். அவரையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் நாடகத்தை காண சற்று பொறுத்திருப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்