Paristamil Navigation Paristamil advert login

குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

20 வைகாசி 2012 ஞாயிறு 04:32 | பார்வைகள் : 9277


விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.

தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர்.

சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.

ஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின் பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ். குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.

ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப் படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ். குடாநாடு இருந்தது.

குடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக் கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது.

ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது.

1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.

யாழ். குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார்.

ஏனெனில், பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.

இந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர்.

இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

எந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார்.

அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.

எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், ”ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன்,நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது,உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்.

சிக்கலென்றால் உங்களை உடன் காப்பாற்றி வர ஏலாது. ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும். நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன். நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்” எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.

குடாரப்பு - இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை,சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம்.

இந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும்.

அப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள்,நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல்.

சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம்,  வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.

மேலும் ”இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே’ எனவும் தலைவர் கூறியிருந்தார்.

எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.
தாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார்.

ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.

தாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும். குறிப்பாக ”ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள்.

ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்” என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும்.

தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது. போராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை.

அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.

26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் ”எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப் போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்” என்று கூறினார்.

தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.

சமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப்  பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர்.

ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

ஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன.

தாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது.

தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச் சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது.

கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.

தரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர்.

பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணி

வர்த்தக‌ விளம்பரங்கள்