Paristamil Navigation Paristamil advert login

9 வைகாசி 2012 புதன் 04:32 | பார்வைகள் : 11171


“இரத்தின துவீபம்', “இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது.

வரலாற்றில் கறைபடிந்த அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள்.

நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோன் துல்லியமான பரிசோதனையின் பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த “கெலம் மெக்ரே' கூறுகின்றார்.

உலகத்தின் மனச்சாட்சியையே உலுக்கிய இவை யாவும் போலியானவை என மீண்டும் ஒரு பொய் கூறியுள்ளது இலங்கை அரசு. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் என்பார் இவைகள் அனைத்தும் போலியானவை எனக் கூறுகின்றார். பேராசிரியர் இவ்வாறு பொய் கூறுவது கல்வி உலகிற்கே பெரும் அவமானம்.

மேற்குறித்த அறிக்கையும் தொலைக்காட்சி ஆவணம் பொய் எனில், அறுபது ஆண்டுகளாக, இலங்கை அரசு இலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு இழைத்து வந்துள்ள அத்தனை அநியாயங்களும் அட்டூழியங்களும் பொய்.

கிளாலிப் பயணிகள் படுகொலை, மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை, குமுதினிப் படகு கோரக்கொலை, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை, செஞ்சோலை சிறுவர் படுகொலை இப்படிப் பல படுகொலைகள் இவையாவும் பொய் “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' இலங்கை அறுபது வருடங்களாக சர்வதேச சமூகத்தின் முன் கூறிவருகின்ற பொய்மொழிகள் இவை.

கடவுளின் பத்துக்கட்டளைகளில் (Ten Commandments)  ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக, இன்னொன்று “பொய் சொல்லாதிருப்பாயாக' எனக் கூறுகிறது.

இலங்கை அரசு கொலைகளையும் செய்துவிட்டு சுத்தப் பொய்யும் கூறி கடவுளின் பத்துக் கட்டளைகளையும் மீறியுள்ளது.

தொடர்ச்சியாக செய்துவரும் படுகொலைகளும் பொய்களுக்கும் சேர்த்து இன்று இலங்கைக்கு கிடைத்துள்ள மகத்தான பட்டம் “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'.

இலட்சக்கணக்கான மக்களை வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காது தாம் விரும்பியவாறு தமது காட்டுத்தர்பார் நாடகத்தை நடத்தி முடித்துள்ளது இலங்கைப் படை. தமது வெறியாட்டம் எவருக்கும் தெரியவாய்ப்பில்லை என்றுதான் அப்போது எண்ணியிருந்தது.

சனல் 4 ஆவணப்படம் வெளிவரத் தொடங்கிய போதுதான் தொலை நுகர்வுத் தொழில்நுட்பம் தமது தலைக்கு மேலே சுழன்று கொண்டிருந்த இரகசியம் தெரியவந்துள்ளது.

இப்போது கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்.

சனல் 4 ஆவணப்படத்தின் தொடர் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் இனிப்போகப் போகத்தான் வெளிவரப் போகிறது.

மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் யூதப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம்களின் படுகொலை, ஆபிரிக்காவில் றுவாண்டா குட்சி இனப்படுகொலை, மேற்கு ஆசியா ஈராக்கில் சதாமின் குர்டிஸ் இனப்படுகொலை. தென்கிழக்காசியாவில் பொல்பெட்டின் கம்பூச்சிய படுகொலை இந்த வரிசையில் இப்போது தென் ஆசியாவின் கொலைக்களத்தில் சிங்களத்தின் தமிழர் படுகொலை.

ஹிட்லர், பொல்பொட், சதாம் ஆகியோரின் இழிவுச்சாவுகளை இலங்கை ஆட்சியாளர்களும் நினைவிற் கொள்வது பொருத்தமானது.

முள்ளிவாய்க்காலில் கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழியில் போடப்பட்டது தமிழ் தேசியம் மட்டுமல்ல, புத்தரின் அஹிம்சையும், இந்தியாவின் காந்தீயம், அசோக தர்மமாகும். தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தி ஆகணும்.

இங்கே தவறு செய்தவன் திருந்தும் எண்ணம் இல்லை. தப்பு செய்தவன் வருந்தும் எண்ணம் இல்லை.

- கலாநிதி சூசை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்