Paristamil Navigation Paristamil advert login

சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்

சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்

4 சித்திரை 2012 புதன் 08:16 | பார்வைகள் : 10779


தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி.

ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர்.

தளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது.

1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர்.

1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார்.
பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு.

இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் 'ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்' என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார்.

வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது.

இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் 'டம்மிக் காவலரணை' இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.

முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான்.

அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார்.

சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேண

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்