Paristamil Navigation Paristamil advert login

போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?

போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?

21 மாசி 2012 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 9854


சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகமொன்றில் Sydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளார்.

அச்செய்திக்கட்டுரையின் முழுவிபரமாவது,

மே 2009 ல் சிறிலங்காவின் வட கிழக்கு கரையோரப் பகுதியின் ஒடுங்கிய சதுப்பு நிலத்தில் அந்நாட்டு இராணுவப் படையால் மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணைகள், குண்டுகள், துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை முகங்கொடுத்தவாறு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அகப்பட்டுக் கொண்டனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த போது, விடுதலைப்புலித் தலைவர்கள் மூவர் அவர்களது குடும்பங்களுடன் யுத்த வலயத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி அரசாங்கத்திடம் சரணடைவதை நோக்காகக் கொண்டு, அவர்கள் தம்மிடமிருந்த செல்லிடத் தொலைபேசிகளின் மூலம் கொழும்பிலிருந்த அரசாங்கத்தின் வெளியுறவுச் செயலர், நோர்வே இராஜதந்திரிகள், பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் மற்றும் தொடர்புபட்ட ஏனையவர்களுடன் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதுடன், குறுந் தகவல்களையும் அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு தொடர்பை மேற்கொண்ட இப் புலித்தலைவர்களையும் அவர்களுடன் இருந்தவர்களையும் இரு கைகளையும் உயர்த்தியவாறு வெள்ளைக் கொடியைக் காண்பித்தவாறு அரசாங்கப் படைகளின் நிலையை ஊடறுத்து வருமாறு பதிலளிக்கப்பட்டது.

இவ்வாறு கட்டளை வழங்கிய மறுநாள், புலித் தலைவர்களான பாலசிங்கம் நடேசன், சீவரத்னம் புலித்தேவன் மற்றும் ரமேஸ் ஆகியோரதும், அவர்களுடன் சென்ற அவர்களது குடும்பத்தவர்கள் சிலரின் உடலங்கள் போன்றன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அரசாங்கப் படைகளால் கண்டெடுக்கப்பட்டன.

இதனை யுத்த வலயத்தில் இடம்பெற்ற கெட்ட நிகழ்வென சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.

நாட்டில் 25 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் நிறைவாக அதன் கரையோரங்கள், ஆலயங்கள், மலைநாடு போன்றவற்றில் சுற்றுலாப் பிரயாணிகளின் வரவு அதிகரித்துள்ளபோதும், மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் யுத்தத்தின் நிறைவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தற்போது மீளவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் தோற்கடிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்த நிலையில், ராஜபக்சவின் இராணுவத் தளபதியாக இருந்து 'யுத்த வெற்றியைப்' பெற்றுக் கொடுத்ததாக புகழாரம் வழங்கப்பட்ட சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இக்காலப்பகுதியில், புலித் தலைவர்கள் மூவரும் அவர்களது உறவுகளும் சரணடைய முயற்சித்தமை தொடர்பாக சரத் பொன்சேகா 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிது வேறுபட்ட தகவலை வழங்கியிருந்தார்.

இப்புலித் தலைவர்கள் சரணடைவற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஆராய்ந்த போது உண்மையில் என்ன நடந்ததென்பது தெளிவானது. அதாவது யுத்த காலப்பகுதியில் 58 ஆவது படையணிக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வாவிற்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச "சரணடைய முயலும் எந்தவொரு புலித் தலைவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்" என கட்டளை வழங்கியிருந்தார். "அவர்கள் கொல்லப்பட வேண்டும்" என கோத்தாபய ராஜபக்ச கட்டளை வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

2009ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்தார். அத்துடன் பொன்சேகாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார். "சாரணர் இயக்கத்தை நிறுவிய பேடின் பவுளின் படத்தைப் பார்த்தவாறு சரத் பொன்சேகா தற்போது காற்சட்டை அணிந்தவாறு சிறை ஒன்றுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்" என The Economist என்ற ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவருடன் தொடர்புபட்ட வெள்ளைக் கொடி விவகாரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. அது தற்போதும் தொடர்கின்றது. நிராயுதபாணிகளாக சரணடைந்த புலிகளை கொலை செய்யுமாறு கோத்தபாய ராஜபக்சவால் வழங்கப்பட்ட கட்டளை உண்மையானதெனவும் இதனை தமது புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாகவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கேற்ற தொடர்பாடல் ஆவணத்தைப் பெறுவதென்பது கடினமானதாகும். ஆனால் சிறிலங்கர்களைப் பொறுத்தளவில், உயர் மட்ட அதிகாரிகள் கூட தமது இரகசியத் தகவல்களை வெளிப்படையான செல்லிடத் தொலைபேசிகளின் மூலமே பரிமாறியுள்ளனர். இதனால் இவ்வாறான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளைக்கான சிறந்ததோர் சாட்சியமாக இது உள்ளது.
அத்துடன் தனது சகோதரனின் அரசாங்கத்தில் கோத்தாபய ராஜபக்ச அதிவலுமிக்க உயர் மட்ட அதிகாரியாக இருப்பதாலும், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறை போன்றவற்றை மட்டுமல்லாது சிறிலங்காவின் நகர அபிவிருத்தியை மேற்பார்வை செய்யும் அமைச்சின் உயர் மட்ட அதிகாரியாக இருப்பதாலும், இவரால் வழங்கப்பட்ட கட்டளையானது உண்மையில் பெறுமதிமிக்க யுத்த சாட்சியமாக உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் கோத்தாபயவால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஆவணமானது வலுமிக்க கருவியாக உள்ளது. தமிழ்ப் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மீது, இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

சிறிலங்கா அதிபரால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது 18 மாதங்களாக மேற்கொண்ட விசாரணையின்  இறுதி அறிக்கையை கடந்த நவம்பரில் கையளித்திருந்தது. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

தமிழ்ப் புலிகள் மனித உயிரினங்களை மதிக்கவில்லை எனவும் சிறிலங்காப் படைகள் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தாதவாறு அவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்ததாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'யுத்த வலயமற்ற பகுதிகள்' என அறிவிக்கப்பட்ட வலயங்களில் சிறிலங்கா இராணுவப் படைகள் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

யுத்தத்தின் போது வெற்றி பெற்ற எந்தத் தரப்பும் தாமாகவே தம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளனவா?

தமிழர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை எடுத்தல், துணை ஆயுதக் குழுக்களின் துப்பாக்கிகளைக் களைதல், பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்களை அமைத்தல், காணமாற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுதல், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றன தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட யுத்தத்தின் பின்னான செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன மேலும் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளன.

இதுவரையில் இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சிறிய சைகையைக் கூட மகிந்த ராஜபக்ச காண்பிக்கவில்லை. அனைத்துலக சமூகத்தால் இது தொடர்பில் மேலும் அழுத்தங்கள் வழங்கப்படாதிருப்பதற்கு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கடந்த மாதம் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, மகிந்த ராஜபக்சாவிடம் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்கா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறின் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனால் சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் கடந்த வார இறுதியில் இரு அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகளை கிளின்ரன் சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்திருந்தார். இவர்கள் கொழும்பில் நின்ற போது, 'பிறிதொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம்' ஒன்று இடம்பெற்றது.

அதாவது எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி இரு ஆண்டுகள் வரை சிறிலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்காக செல்வதற்காக காத்திருந்த போதே குறிப்பிட்ட இத் தமிழ் வர்த்தகர் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தார்.

ராஜபக்ச ஆட்சியில் தற்போது அச்சமும், பீதியும் நிலவுகின்றது. மீளிணக்கப்பாட்டின் ஒரு முயற்சியாக ஜெனரல் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தல் மற்றும் நீண்ட காலமாகத் தொடரப்படும் இனப் பிரச்சினை தொடர்பில் பிரதான தமிழ்க் கட்சியுடன் பேச்சுக்களை நடாத்துதல் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மீது அமெரிக்கா அழுத்தத்தைப் பிரயோகிப்பதுடன், இவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச தொடர்பிலும் அமெரிக்கா தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்.

- புதினபலகை

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்