Paristamil Navigation Paristamil advert login

உறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா?

உறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா?

29 தை 2012 ஞாயிறு 07:59 | பார்வைகள் : 10742


'திய கவ' என்கிற பெயர் சூட்டி போர்ப் பயிற்சியொன்றினை  ஆரம்பிக்கிறார் சிங்களத்தின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய. இது பயிற்சிப் பட்டறைபோல் தெரிகிறது. தாங்கள் தனியே நின்று போரிட்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தியது போலவும் தாம் பெற்ற அனுபவங்களை இவ்வையகமும் பெறட்டும் என்பது போலவும் இருக்கிறது சிங்களத்தின் செய்தி.

எட்டு நாடுகளிலிருந்து, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எட்டுப்பேரை அழைத்து, 64 பேரோடு பட்டறை நடாத்தப் போகிறது சிங்களம். இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த பேரினவாத அரசை இன்னமும் காக்கும், சீனாவும், இந்தியாவும் இப் பாசறையில் இணைந்து கொள்கின்றன.
 
இந்தியாவை தடவிக் கொடுத்துத்தான் தமிழ் பேசும் மக்கள் உரிமைகளைப் பெறலாமென விமர்சனக் கட்டுடைப்பு செய்யும் வித்தகர்கள், சிங்களத்தின் பட்டறையில் இந்தியாவிற்கு என்ன வேலை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அண்ட வெளியிலிருந்து செயற்கைக்கோள் விழிகளினால், இறுதிப்போரில் நிகழ்ந்த கொடூரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் வேடிக்கை பார்த்ததாக கேபிள் ஒற்றர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். இந்திய நலனிற்காக இடையில் கட்டியிருக்கும் கடைசித் துண்டையும் கழற்றிக் கொடுக்கச் சொல்கிறார்கள் புதிதாக முழைக்கும் பிழைப்புவாதிகள்.

 சம்பூரில் இந்தியா நிர்மாணிக்கும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையம் வெளித்தள்ளும் கரியமில வாயுவினால், நிலமிழந்து கூனிக்குறுகி நிற்கும் மனிதர்களின் சுவாசப்பைகளும் செயலிழந்துவிடும்.

 சுற்றுப் புறச்சூழல் மாசடைந்து மனிதர்களின் வாழ்வியல் இருப்பு கேள்விக்குறியாகுமென்று, திருமலை மக்கள் போராடிய விடயத்தை, இந்திய விசுவாசக் கண்ணாடி மறைத்துவிட்டது போல் தெரிகிறது.

இயந்திரங்கள் கக்கும் நச்சுக் காற்றுகள், ஓசோனின்  இதயத்தில் ஓட்டைகள் போட்டாலும், வந்தே மாதரமென்று வலிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்களா?

கிருஷ்ணாக்களும், சுஸ்மிதாக்களும் வரும்போது, விடுதலைப் புலிகளின் பார்வைக் கோளாறினால், இந்தியா எம்மை விட்டு விலகிச் சென்றுவிட்டதென கட்டுரைகள் வரையத் தொடங்கி விடுவார்கள் எம் தேசத்தின் அடிபணிப் புதல்வர்கள்.
 
இந்தியா எப்போதும் எம்பக்கம் இல்லை என்பதை புரிந்து கொள்ள இவர்களால் முடியாது. இலங்கையில் தனது பிராந்திய நலனிற்காக, இனமுரண்பாட்டை இந்தியா கையாண்டது என்பதுதான் நிஜம். இந்தியா எனும்போது, அது அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் ஆளும் வர்க்கத்தைக் குறிக்கும். அந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்துள்ளார் அணுவிஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்.

மகிந்த சிந்தனையின் மறைமுக இன கலாச்சார அழிப்பு வடிவமான மும்மொழித் திட்ட அங்குராப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அப்துல் கலாம் அவர்கள், அமைதியை ஏற்படுத்தப் போகிறாராம்.

 ‘இந்தியாவைக் கட்டியெழுப்ப, இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்கிற முழக்கத்தோடு வலம் வந்த கலாம் அவர்கள், நடந்த கொடுமைகளை மறந்து நாமெல்லோரும் இலங்கையர்  என்று கனவு காணுமாறு தமிழர்களை நோக்கி அறிவுரை சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.
 
உலகம் அறிந்த அணுவிஞ்ஞானியின் வரவால், இலங்கை புனிதமடையலாம்.

புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டிற்கு, மும்மொழிகளையும் கற்றால் தீர்வு வந்துவிடுமென அறிவுரைகளை அள்ளி வீசலாம்.

முள்ளிவாய்காலில் தமிழ் மக்களை கொன்றொழித்து, நந்திக்கடலைச் சிவப்பாக்கிய, கொடுங்கோல் ஆட்சியாளரின் மேடையில், அறிவியலாளனிற்கு என்ன வேலை?

இனஅழிப்பு பாதகர்களுக்கு, பாதுகாப்புக் கவசம் கொடுக்க வருகிறார்களா இந்த புத்தி மான்கள்?

சைக்கிள்களோடு கிருஷ்ணர் வருகைதந்து நட்புறவு பாராட்ட, மும்மொழிகளை கற்றறிந்து கனவு காணுங்கள் அமைதி திரும்பிவிடுமெனக் கூறியவாறு இன்னொருவர் வருகிறார்.

எம் கனவுகளில் இரத்தப் படிவுகளும், பிஞ்சுக் கரங்கள் வயிற்றைக் கிழித்து வெளித் தெரிந்த காட்சிகளும், பிளந்த முதுகின் அடிப் பாகத்தில் சுவாச இயந்திரங்களின் இறுதித் துடிப்பும் தான் தெரிகிறது.

ஆற்றுப்படுத்த முடியாத வலி சுமக்கும் நினைவுகளின் காட்சிப்படிமங்கள், கவிதை வரிகளிலும் இறங்க முடியாமல், கனவுகளையும் நினைவுகளையும் துரத்துகின்றன.

எந்தக் கனவைக் காணச் சொல்கிறார் அறிவியலாளர் அப்துல் கலாம்?

நினைவுகளிலும், கனவுகளிலும் ஒடுக்குமுறையாளன். பிரயோகித்த கொடூரச் செயற்பாடுகளின் வன்மங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.
 
தூக்கத்தைத் தொலைத்த மனிதர்கள் எப்படி ஐயா கனவுகாண முடியும்?

படுகொலையாளனோடு பக்கத்தில் அமர்ந்து எதுவுமே நடவாவது போல் எப்படி உங்களால் அமைதி பற்றிப் பேசமுடிகிறது?

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த, இந்தியாவால் அனுப்பப்பட்ட இராஜதந்திரத் தூதுவர் என்கிற பாத்திரம் உங்களுக்கு பொருத்தமானதல்ல அப்துல்கலாம் அவர்களே.

உங்களை ஒத்த, இன்னுமொரு அறிவுசீவிக் கூட்டம் ஐ.நா சபையிலிருந்து சொல்கிறது, சுயாதீன போர்க் குற்ற விசாரணையொன்று இலங்கை அரசிற் கெதிராக நடாத்தப்பட வேண்டுமென்று.

தாயக மக்களை இலங்கை நாடாளுமன்றில் பிரதிநித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதையே வலியுறுத்துகிறது.

இன்று ஊடகவியலாளர்கள், தினமும் கடத்தப்படுகிறார்கள். மீள் குடியேற்றமென்று மகிந்தரால் நடுத்தெருவில் விடப்பட்ட தமிழ் மக்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்கிறார்கள்.

விசாரணையின்றி பல வருடங்களாக சித்திரவதைக் கூடங்களிலும், சிறைகளிலும் தமிழ் இளையோர் வாழ்வைத் தொலைத்து நிற்கதியாய் வாடுகிறார்கள்.

சொந்த மண்ணை இழந்த மக்கள் உங்கள் நாட்டு மலைவாழ் ஆதிவாசிகள் போல் நிலத்திற்காக இங்கு போராடுகிறார்.

உலக அளவில் நிலக்கரிப் பாவனையை தடை செய்யுங்களென்று உங்கள் அறிவியலாளர் கூட்டம் அவசர வேண்டுகோள் விடுத்தும்,  வான்வெளியில் ஓட்டைகள் விழுந்தாலும் பரவாயில்லை, தனது நலனே பெரிதென எண்ணும் உங்கள் தேசம், சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கிறது.

பூர்வீக நிலத்திலிருந்து மக்களை அகற்றி, அபிவிருத்தி செய்யலாமென்கிற இந்திய ஜனநாயகத்தை சரியென்று நியாயப்படுத்துவாரா பேரறிஞர் அப்துல் கலாம்?

வாழ்வாதாரமே சூனியமாகிப் போகும் விளிம்புநிலையில் வாழும் தமிழ் மக்களிடம், மும்மொழ்க் கொள்கையால் சுயநிர்ணய உரிமை கிடைக்க வாய்ப்புண்டென சொல்லக் கூடாது.

தொடரும் இனவழிப்பிற்கு நீதி கிடைக்கும்வரை மக்கள் கனவுகளில் விடுதலை வேட்கையே காட்சிகளாகும்.


- இதயச்சந்திரன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்