இரண்டாவது ஆயுதப் போருக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகிறதா?
8 தை 2012 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 10226
விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக புலனாய்வுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இனிமேல் மீள் எழுவது சாத்தியமில்லை என்றே அரசாங்கம் கூறிவந்துள்ளது.
உள்நாட்டில் புலிகள் இயக்கம் இனிமேல் தலையெடுப்பதற்கு இடமளிக்கமாட்டோம். அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்றே பாதுகாப்புத் தரப்பு கூறியது. ஆனால் இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராகின்ற சூழல் இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப் போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை அவர்கள் அணுகியுள்ளதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் கூறியிருந்தன.
இந்தநிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கில் விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த இரகசியத் திட்டம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, அரசாங்க அதிகாரிகளை உசார் படுத்தியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் அமைப்புகள் இடம்பெயர்ந்தோருக்கான அமைப்புகளுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருவது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
வடக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர் சமூகத்துடனான உறவுகள் குறித்து இராணுவப் புலனாய்வுத்துறை உன்னிப்பாக அவதானிக்க ஆரம்பித்துள்ளது.
புலம்பெயர் ஊடகங்களில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளின் கருத்துகளைச் சார்ந்து இயங்குபவை. அத்தகைய ஊடகங்கள், அவற்றில் வெளியாகும் செய்திகள் குறித்து ஏற்கெனவே இராணுவப் புலனாய்வுத்துறை வன்னியில் உள்ள படை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் மூன்றாவது வாரம் கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு அந்தப் படைத்தலைமையகத்தின் கீழ் இருந்த அனைத்து டிவிசன், பிரிகேட், பற்றாலியன் கட்டளை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இராணுவப் புலனாய்வுத்துறையின் 4 ஆவது பற்றாலியன் கட்டளை அதிகாரி, விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அது செயற்படுகின்ற விதம், மற்றும் புலிகள் சார்பு ஊடகங்கள் குறித்து அங்கு விளக்கமளித்திருந்தார்.
இது புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட கருத்தரங்கல்ல.
இரண்டாவது ஆயுதப்போரில் புலிகள் இறங்கி விடக் கூடாது இறங்கவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வில் நடத்தப்பட்ட கருத்தரங்கே இது.
முன்னர் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமில்லை என்று கூறிவந்த அரசாங்கம், இப்போது இரண்டாவது ஆயுதப் போர் பற்றிய அச்சத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இப்போது எந்த நிகழ்வில் உரையாற்றினாலும், வெளிநாடுகளில் புலிகள் இன்னமும் தீவிரமாக இயங்குவதாக எச்சரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அவர் கூறுகின்ற அளவுக்கு வெளிநாடுகளில் புலிகள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருந்த புலிகள் பிரிந்து போயுள்ளனர் என்பது தெளிவு.
நாடுகடந்த அரசின் பிரதமராக இருக்கும் உருத்திரகுமாரன் தலைமையில் செயற்படும் அமைப்பு இராணுவ வழிமுறை மீது நம்பிக்கை கொண்டதோ, அல்லது ஆயுதப்போர் ஒன்றுக்கான ஆற்றலைக் கொண்டதோ அல்ல.
நெடியவன் மற்றும் விநாயகம் போன்றோர் தலைமையில் வெளிநாடுகளில் இயங்குவதாக கூறப்படும் புலிகள் கூட, வலுவான கட்டமைப்புடன் செயற்படவில்லை.
அத்துடன் ஆயுதப்போர் ஒன்றை நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இருப்பதாகவோ, அல்லது ஆயுதப்போர் ஒன்றுக்குத் தலைமை தாங்கும் ஆற்றல் இருப்பதாகவோ தெரியவில்லை. இந்த அணிகளுக்குத் தலைமையேற்றிருப்பதாக கூறப்படுவோர் வெளிநாடுகளில் இருந்தாலும், வெளிப்படையாக எதையும் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளனர்.
அண்மையில் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் றொகான் குணரட்ன, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்படை, விமானப்படை, பீரங்கிகள், மோட்டார்கள், ஆயிரக்கணக்கான 56, ஏ.கே47, ஜி.பி.எம்.ஜி. துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான போராளிகளை கொண்டிருந்த போதும் தமிழீழத்தைப் பெறமுடியவில்லை.
இவற்றில் எதையுமே கொண்டிராத நெடியவன் எவ்வாறு தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த உண்மை அரசாங்கத்துக்கோ பாதுகாப்புத் தரப்புக்கோ தெரியாத விடயமல்ல.
அவர்களாகச் சிந்தித்துத் தெரிந்து கொள்ளாது போனாலும், பாதுகாப்புத் தரப்புடன் நெருக்கமான உறவு வைத்துள்ள றொகான் குணரட்னவேனும் இதைக் கூறாமல் போயிருக்கமாட்டார். ஆனாலும் அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பும் புலிகள் இயக்கம் பற்றிய ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முனைகிறது.
இரண்டாவது ஆயுதப் போருக்கு புலிகள் தயாராவதான செய்தி, அரசாங்கத்தினது திட்டமிட்ட ஒரு உளவியல் போர் நகர்வாக இருக்கலாம் அல்லது ஒரு அச்சமாகக் கூட இருக்கலாம்.
அதாவது வடக்கில் இடம்பெயர்ந்தோர் நலன் சார்ந்த எத்தகைய அமைப்புகளும் உருவாகாமல் தடுப்பதற்கு, அங்குள்ள மக்கள் சுயமாக ஒன்று கூடுவதைத் தடுப்பதற்கான முயற்சியாகவும் இதனைக் கருதலாம்.
போருடன் தொடர்புபட்ட முன்னாள் போராளிகளை விடுதலை செய்திருந்தாலும், அவர்கள் மீதான சந்தேகம் முற்றாக விட்டுப் போகவில்லை. அதனால் தான் அவர்களை தொடர்ந்தும் தமது கண்காணிப்பிலேயே வைத்துள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மீதான கட்டுப்பாடுகளை நியாயப்படுத்தவும் இப்படியொரு காரணம் கூறப்பட்டிருக்கலாம்.
அதேவேளை, ஜே.வி.பி. போன்று புலிகள் இயக்கம் மீண்டும் ஒரு ஆயுதப் போரில் இறங்கலாம் என்ற அச்சம் அரசிடம் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக ஒரு மோதலின் முடிவில், அந்த மோதலுக்கான காரணங்களைக் களையும் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.
அத்தகைய நிரந்தரத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படாது போனால், மீண்டும் மோதல்கள் உருவாகச் சாத்தியம் அதிகம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது உலக வரலாறு.
இதனைச் சுட்டிக்காட்டியே, அமெரிக்கா அரசியல் தீர்வை வலியுறுத்தி வருகிறது.
போர் முடிந்து மூன்றாண்டுகளாகப் போகின்ற நிலையில், அரசியல் தீர்வு எதையும் வழங்கவில்லை என்பது அரசுக்குத் தெரியும்.
எனவே மற்றொரு ஆயுதப்போராட்டம் பற்றிய பயம் அதனிடம் தொற்றிக் கொண்டிருக்கலாம்.
அதன் விளைவாக வடக்கில் புலனாய்வுப் பிரிவுகள் உசார்படுத்தப்பட்டிருக்கலாம்.
இரண்டாவது ஆயுதப்போர் என்ற பூச்சாண்டியின் மூலம், வடக்கில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை தீவிரப்படுத்தும் திட்டம் அரசிடம் இருக்கலாம்.
விடுதலைப் புலிகள் இப்போதைக்கு ஆயுதப்போர் ஒன்றை முன்னெடுப்பது சாத்தியமில்லை. அதற்கான தலைமைத்துவம் புலிகளிடம் இப்போது இல்லை.
ஆனால் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுமேயானால், இன்னொரு ஆயுதப்போர் பற்றிய அச்சம் உண்மையாகக் கூட மாறி விடலாம்.
- சுபத்ரா