Paristamil Navigation Paristamil advert login

அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம மரணங்களின் பின்னணி என்ன?

அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம மரணங்களின் பின்னணி என்ன?

5 தை 2012 வியாழன் 12:48 | பார்வைகள் : 10791


சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன.

அண்மைக்காலமாக அரங்கேறி வரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் தினந்தோறும் பீதியுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள், சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளை வேன் ஆயுததாரிகளால் ஆட்கத்தல்கள், மர்மக் கொலைகள் தொடருகின்றன.

கடந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், ஆயுதமேந்தித் திருட்டு என பல குற்றச் செயல்கள் நடந்தேறின. இவற்றில் மர்மக் கொலைகள் கவனத்தை ஈர்க்கும் விடயங்களாகி நிற்கின்றன.

சம்பவம் I கொழும்பு காக்கைதீவுப் பகுதியில் எம்.ஆர். அசோசியேட்டட்; நிறுவனத் தலைவரும் ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டவருமான அன்டனி ராஜா வேலுப்பிள்ளை (வயது 53) என்பவர் சப்பாத்துப் பட்டியினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் II கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே இரவுநேர ரயிலின் உறங்கும் பெட்டியிலிருந்த இரயில் பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

சம்பவம் III அநுராதபுரம், எப்பாவெல கட்டியாவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் IV மேற்படி இடத்திலேயே இரு பெண்கள் உட்பட மூவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் V

இதேவேளை நேற்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்துறைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதியன்று யாழில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலீத் மற்றும் குகன் ஆகியோர் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளனர்.

இவ்வாறு பல மர்ம நிகழ்வுகள் நாட்டில் தொடருகின்றன. இது போன்ற சம்பவங்கள் சன நடமாட்டம் மிகுந்த இடங்களில் பகல் வேளைகளிலேயே இடம்பெறுகின்றன. மேலும் நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே இனந்தெரியாத சிலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்பது புரியா புதிராகவே உள்ளது.

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக 214 பில்லியன் ரூபா தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2012ஆம் ஆண்டுக்காக 14.7 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிலும் அதிகமாகும்.

மேலும் நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் குறித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கைதாவர் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

அரசாங்கம் பாதுகாப்பிற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. பாதுகாப்பு வேண்டி சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், நாட்டில் நடந்தேறும் பல சமூக விரோதச் செயல்களினால் இதற்கான பலன் பூச்சியமாகவே உள்ளது. மேலும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென அரசாங்கம் கூறினாலும் நாட்டில் சட்டவிரோத ஆயுதப் பாவனை இருப்பதோடு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளை, கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவோரும் உளர்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டமை அண்மைய தகவல்கள் மூலம் நாம் அறிந்ததே.

எடுத்துக்காட்டாக, வீடுகள் பலவற்றில் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்த இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபரை கடந்த வாரம் கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கெக்கிராவைப் பகுதியில் தலைமறைவாக இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறான சம்பவங்களை நோக்குகையில், மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு வழங்குவது? நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அதிகரித்துச் செல்லும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தவறி விட்டதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில காலமாக நாட்டில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்து ஆராயும்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் கொள்கை வகுப்புப் பிரிவின் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டா கூறியுள்ளார்.

தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமை பொலிஸாருக்குக் கிடையாது என்ற மனோபாவம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமைக்கு நாட்டின் சட்டத்துறையில் இருக்கும் அதிகாரிகள் நேரடியாகவே பொறுப்புக் கூற வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் நாட்டில் மர்ம கொலைகள், கொள்ளைகள் தொடர்ந்தே வண்ணமே உள்ளன. ஆனால், எப்போதுதான் முற்றுப்பெறுமோ என்பது கேள்விகுறியாக இருக்கின்றது. அன்றன்று மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின் ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோர் பின்னர் அவை பற்றிச் சிந்திப்பதில்லை.

மனிதாபிமானம், மனித உரிமைகள் தொடர்பாக எத்தனை அமைப்புகள் என்னதான் கருத்துக்களைக் கூறினாலும் அது தொடர்பில் அழுத்தங்களைக் கொடுத்தாலும் இப்பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக ஆரம்பத்தில் காட்டுகின்ற ஆர்வம், அக்கறை மற்றும் அச் செயற்பாடுகளுக்கு எதிராகக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். எனினும், நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்தில் கொள்ளும் அரசு நாட்டில் தொடரும் ஆட்கடத்தல்கள், மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனையுமா என்பதே அனைவரதும் கேள்வியாகவுள்ளது.

-எம்.டி.லூசியஸ்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்