Paristamil Navigation Paristamil advert login

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா?

நல்லிணக்க  ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா?

19 மார்கழி 2011 திங்கள் 13:51 | பார்வைகள் : 9863


"வடக்கில்  வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி  தான் வீசும்.

அதேவேளை  நீண்ட காலமாக  சிறைச்சாலைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.

ஆனால் விசாரணை ஏதுமின்றி  சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க காத்திரமான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தம்மை விடுவிக்கக் கோரி இவர்கள் உண்ணாவிரதமிருப்பதும், அவர்களைச்  சென்று பார்வையிட்டு அதனைக்  கைவிடுமாறு கோரிக்கை  விடுப்பதும் தொடர்கதையாகவுள்ளது.

பிளாஸ்டிக் கூடைக்காக  மக்கள் போராடுகின்றார்கள் . சொந்த  நிலத்தில் குடியேற  விடும்படி  மாதகல் மக்கள் கிளர்ந்தெழுகின்றார்கள். ஆனாலும் நீதி விசாரணையின்றி பல்லாண்டு காலமாக,  வாழ்வின் பெரும்பகுதியைத் தொலைத்து நிற்கும் இம்மனிதர்களுக்காகப் போராட எவரும் முன்வருவதில்லை என்கிற கேள்வி நியாயமானது.

அரசோடு  தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.  தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர்ப் பட்டியலைத் தருமாறு  யாழ். மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சலிப்பின்றி கோரிக்கை விடுத்தாலும், அதனை செவிமடுக்க அரசு தயாரில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்காவிட்டாலும், நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெற்ற  கலந்துரையாடலில்,  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடமாவது முன் வைத்திருக்கலாம்.

பத்து  ஆண்டுகளிற்கு முன்பாக உடத்தலவின்னயில்  நடைபெற்ற படுகொலை  குறித்து தெளிவாகப் புரிந்து கொண்ட ஹக்கீம்,  சிறுபான்மை தேசிய  இனங்கள் மீது பேரினவாத  ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும்  ஒடுக்க முறைகளைப் புரிந்து கொள்வாரென நம்பலாம்.

அதேவேளை,  இறுதித் தீர்வு குறித்தான விடயம் முன்வைக்கப்படும் போது, முஸ்லிம் மக்களின்  வகிபாகம் முக்கியமானதென கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன்  கூறுவது மிகச் சரியானது.
இருப்பினும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ்  எதிர்பார்ப்பது பொருத்தமற்றதாகப்படுகிறது.

அரசைப் பொறுத்தவரை  இனப்பிரச்சினையைக்  கையாளும்  விடயத்தில் இரண்டு குதிரைகள் பூட்டிய இரதம் ஒன்றினை இறக்கிவிட்டுள்ளது போலிருக்கிறது.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையுமே அந்த இரண்டு குதிரைகளுமாகும்.
இவற்றிற்குச் சமாந்தரமாக கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தையையும் அரசு  முன்னெடுக்க  எத்தனிக்கிறது.
இப் பேச்சுவார்த்தைக் குதிரையை அந்த  இரதத்தில் மூன்றாவதாக  இணைப்பதற்கு  அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கலப்பதற்கு கடும் பிரயத்தனத்தை அரசு   மேற்கொள்வதனைக்  காணலாம்.

அதேவேளை அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவினால்  நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400  பக்க அறிக்கையானது  பஞ்ச தந்திரக் கதை போல் உள்ளதாக  மட்டக்களப்பு  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் கூறுவதை  இராஜதந்திரக் கதையென்றும் கூறலாம்.

வடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு மற்றும் சிறு இனக் குழுமங்களின் அபிலாஷைகளை   நிறைவேற்ற நாடாளுமன்றத் தெரிவுக் குழு போன்றவற்றை  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  சுட்டிக் காட்டுகிறது.

இவை தவிர  அரசு -கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில்  தற்போது  அதிகமாகப் பேசப்படுவது காணி அதிகாரம் குறித்த விவகாரமே. வருகிற 19 ஆம் திகதி நடைபெறும் உரையாடலிலும் இவை பற்றியே  பேசப்படப் போகின்றன.

வடக்கு கிழக்கு இணைப்பினை முற்றாக நிராகரித்த அரசு, காணி விவகாரத்தினை மட்டும் பேசுவதோடு,  மத்திக்கும் மாகாண சபைக்குமிடையிலான காணி அதிகார  பகிர்வு குறித்து தேசிய ஆணைக்குழுவொன்றினை  அமைக்கலாமென்கிற முன்மொழிவினை  வைக்க முற்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில்  இவ்விகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்தோடு நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று   அமைக்கப்பட வேண்டுமென்பதையும்  அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு  வேதனைகளையும் வலிகளையும் மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போமென  தமிழ் பேசும் மக்களிடம்  நேசக் கரம் நீட்டுகிறது இவ்வறிக்கை.

அத்தோடு  தாயகம், சுய நிர்ணயம் பற்றியதான  முக்கிய விவகாரங்களை நல்லிணக்க ஆணைக்குழு தொட மறுத்துள்ளது.  அண்மையில் இலங்கையிலிருந்து இலண்டனிற்கு வருகை தந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உடன், புலம்பெயர் அமைப்புகள் மேற்கொண்ட  பேச்சுவார்த்தைகளில் நல்லாட்சி (Good Governance) ஏற்பட்டால்  சகல பிரச்சினைகளும்  தீர்ந்து விடும் என்கிற வகையில் கருத்து முன்வைக்கப்பட்டது.

அதாவது  ஆட்சி மாற்றம் அல்லது இருக்கிற ஆட்சியில் நல்லாட்சிக்குரிய  பண்புகளை  உட்புகுத்துதல்  என்பவற்றினூடாக,  தேசிய இனங்களுக்கிடையே  நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்கிற கற்பிதம் பேசு பொருளாகிறது.

தமிழ்த் தேசிய இனமானது  ஒரு தேசம் (NATION) என்பதனை ஏற்றுக் கொள்ளாத, பெரும் தேசிய வாதத்தின் முழு ஆளுமையைத் தன்னகத்தே கொண்ட அரசியலமைப்பு  சாசனத்தினால்,  தேசிய இன நல்லிணக்கத்திற்கான நடைமுறைச் சாத்தியமான எந்தவொரு  தீர்வினையும் முன்வைக்க முடியாது என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.    அரச  காணி உரிமை தொடர்பாக கூட்டமைப்போடு  அரசு பேசும் போது விசேட பொறி  முறை,  கூட்டு ஆணைக்குழு என்கிற  புதிய விடயங்களை  ஏன் புகுத்த முயல்கிறது  என்பதை  நோக்க வேண்டும்.

வட கிழக்கு நிலம் மீதான தமது போலியான இறைமையை  பேரினவாத  அரசு விட்டுக் கொடுக்கத்  தயாரில்லை என்பதையே  கூட்டு ஆணைக்குழு  புலப்படுத்துகிறது.

அதாவது  காணி உரிமையில்  ஐம்பதிற்கு ஐம்பது இருக்க வேண்டுமென அரசு விரும்புகிறது.

இது ஐம்பதா அல்லது எண்பதா என்பதை  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறும் விசேட  பொறிமுறையே தீர்மானிக்கும்.

அதேவேளை, தமிழ் சிவில் சமூகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம்  முன்வைத்த  அவசர கோரிக்கை  குறித்து பேச வேண்டும்.

அதில் கூறப்பட்டுள்ள ஆரோக்கியமான  கருத்துக்களை  கூட்டமைப்பு  கருத்திற்கொள்வது  பயனுள்ளதாக  அமையும்.
.
- இதயச்சந்திரன்
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்