Paristamil Navigation Paristamil advert login

அநுருத்த ரத்வத்த நிகழ்த்திய இனப்படுகொலையும் இடப்பெயர்வும்...

அநுருத்த ரத்வத்த நிகழ்த்திய இனப்படுகொலையும் இடப்பெயர்வும்...

10 மார்கழி 2011 சனி 11:55 | பார்வைகள் : 10757


1990களில் ஈழம் மிகவும் பயங்கரமான கட்டங்களை அடைந்தது. முக்கியமாக 1995இல் யாழ்ப்பாணத்தில் மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. அதனைத் தொடந்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்றும் பெரும் படையெடுப்பு நடந்தது. ஏ-9 பாதையை கைப்பற்றும் பாரிய யுத்தமாக வருடக் கணக்கில் போர் நீண்டது. அன்று ஈழத்து மக்கள் மாபெரும் துயரங்களுக்கு முகம் கொடுத்தார்கள். இந்த தொடர் போருக்குப் பொறுப்பாகவும் சிங்கள பேரினவாத அரசியலுக்கு யுத்த வடிவம் கொடுப்பவராகவும் ஜெனரல் அநுருத்த ரத்வத்த களத்தில் இறங்கினார். அண்மையில் வீட்டினுள் தடுக்கி விழுந்த அநுருத்த ரத்வத்த படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அநுருத்த ரத்வத்தையின் மரணம் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவரது பயங்கரமான யுத்த காலத்தைப் படுகொலைகளையும் குடிப்பெயர்வுகளையும் நினைவுபடுத்துகிறது. 
 
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்றாம் ஈழ யுத்த்தில்  அநுருத்த ரத்வத்த மிகவும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். சத்ஜெய, சூரியக்கதிர், ஜெயசிக்குறு என்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்தியவர். சிங்களப் பேரினவாத்திற்காய் தமிழினப்படுகொலையை நிகழ்த்தி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அநுருத்த ரத்வத்தவின் மரணம் சாதாரணமானதொரு நிகழ்வாக நடந்து விட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் அவரது மரணத்தை வெறும் சுருக்கக் குறிப்புடன் கடந்து செல்லுகிறார்கள். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் இரத்தம் படிந்த பக்கங்களையும் ஆறாத வடுக்களையும் உருவாக்கிய அநுருத்த ரத்வத்தவிற்கும் அவரது பயங்கரம் மிகுந்த அழிவுகளுக்கும் ஒரு அஞ்சலி எழுத வேண்டியாயிற்று.
 
அநுருத்த ரத்வத்த என்ற பாத்திரம் பற்றிய கொடூரத்தை நான் வன்னியில் இடம்பெற்ற வீதி நாடகங்களிலேயே பார்த்திருக்கிறேன். அப்பொழுது யாழ்ப்பாணத்தின் இடப்பெயர்வு நடந்து அந்த மக்களில் லட்சக்கணக்கான மக்கள் வன்னியில் அகதியாக தஞ்சமடைந்திருந்தார்கள். சில  நாட்களில் கிளிநொச்சியையும் கைப்பற்றிய பொழுது கிளிநொச்சி மக்களும் வன்னிக் காடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். புலிகள் பெரும் வீழச்சியைச் சந்தித் காலமாக கருதப்பட்டதது. ஈழத்து மக்களைப் பொறுத்தவரையில் அது மிகவும் கொடியதொரு காலமாக இருந்தது. அதுவரையில் ஈழத்தில் இடம்பெற்றிராத இடப்பெயர்வுகள் மட்டுமல்ல உலகத்தில் இடம்பெயராத இடப்பெயர்வுகளையும் அநுருத்த ரத்வத்த ஈழத்து மக்களுக்கு கையளித்தார். அக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு வகித்த இவர் அதனை தனது வெற்றியாகவும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
 
மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனுமான அநுருத்த லூகே ரத்வத்த 1938இல் கண்டியில் பிறந்தார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரா நாயக்காவின் சகோதரர் ஆவார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டராயநாயக்காவின் மாமனார் ஆவார். கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை மற்றும் கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார். 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தார்.
 
மலேசியாவுக்கான இலங்கைத் தூதராகவும் நியமிக்கப்பட்டார். சிறிலங்கா சுகந்தரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஜனாதிபதி மகிந்தவினால் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்கத்தின் தேசியப் பட்டியல் எம்.பிக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு இறுதி நேரத்தில் சந்தர்ப்பம் இழந்தார்.
 
1994 முதல் 2001 வரையான காலமே அநுருத்த ரத்வத்த ஈழத்து மக்களுக்கு எதிராக பல வகையான அழிவுகளை அரங்கேற்றிய காலம். இலங்கை இராணுவத்திடையில் நின்று கொண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்காவுடன் இணைந்து நின்று கொண்டு ஈழத்தை அழிப்பேன் என்றும் புலிகளை ஒழிப்போன் என்றும் வீர முழக்கங்களை பிரகடனப்படுத்தியவர்.
 
சாதாரணத் தொண்டர் படையில் இருந்த அநுருத்த ரத்வத்த இலங்கை இராணுவச் சீருடையுடன் கேணல் பதவியுடன் யுத்த தளபதியாகவும் அமைச்சராகவும் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இறங்கினார். யாழ்ப்பாண இடப்பெயர்வும் வன்னி இடப்பெயர்வும் ஈழத்து மக்களின் வாழ்க்கையில் பலவிதமான தாக்கங்களை உருவாக்கியிருந்தன. இந்தத் துயரங்களின் பின்னணியில் நமது கண்ணுக்கு முன்னே தெரிகின்றன இராணுவம் மட்டும் காரணமல்ல என்றும் அதன் பின்னணியில் சந்திரிகா பண்டாரநாயக்கா என்ற ஜனாதிபதியும் அவருடன் பாதுகாப்பு பிரதி அமைச்சராய்  அநுருத்த ரத்வத்தவும் அவர்களுக்குப் பின்னால் சிங்களப் பேரினவதாத அழிப்பு அரசியலும் உள்ளன என்பதை மக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வகையில் அன்றைய காலத்தில் இவர்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.
 
அச்சு ஊடகங்களிலும் வாnhனலிகளிலும் கேட்;ட இவரது பிரகடனங்களைவிட காட்சியுடகத்தில் பார்த்த இவரது பயங்கரக்காட்சிகள்தான் அதிகம் பயத்தை ஏற்படுத்தியது. அன்றைய காலத்தில் ரூபவாகினி தொலைக்காட்சியிலும் ஐரிஎன் தொலைக்காட்சியிலும் அநுருத்த ரத்வத்த யுத்த களங்களில் நடந்து வரும் காட்சிகளும் களத்தை பார்வையிடும் காட்சிகளும் சிங்கள இராணுவத்துனருடன் பேசும் காட்சிகளும் இராணுவத்திற்கு யுத்த களம் பற்றி விளக்கும் காட்சிகளும் ஒளிபரப்பாயின. புலிகளுக்கும் மக்களுக்கும் எதிரான யுத்த களம் எவ்வளவு கொடியதமாயிருக்கும், அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அநுருத்தவின் காட்சிகள் வெளிப்படுத்தின.
 
முழுக்க முழுக்க இனவெறியோடு ரத்வத்த களம் இறங்கினார். அவர் ஒரு பாதுகாப்பு அமைச்சர் என்ற பாத்திரத்தை தாண்டி யுத்த தளபதியாகவும் செயற்பட்டார். அவர் ஒரு அரசியல்வாதிபோவும் நாட்டின் தலைவர் போலவும் பேசுவார். ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்காவின் மிக நெருங்கிய உறவினர் என்பதால் அன்று எதையும் எப்படியும் கூறக்கூடியதொரு நிலையில் ரத்வத்த முக்கியம் பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்கவே யுத்தம் நடத்துவதாக சந்திரகாவைப்போல ரத்வத்தவும் பேசினார். சந்திரிகாமீதான அவரது பற்று மெய்மறந்த நிலைகளில் அறிக்கைவிடும் தளபதியாகவும் அமைச்சராகவும் மாற்றியது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதற்;காக ஜெனரல் பதவியை சந்திரிகாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
 
அரச தொலைக்காட்சிகளில் தோன்றிய ரத்வத்தவை மக்கள் பார்க்க சந்தர்ப்பம் இல்லாமல் இருந்தது. ரத்வத்தவின் நடவடிக்கைகள் மற்றும் அரசியலை புலிகள் வெளியிடட்ட ஆவணப்படங்களில் காண்பித்தார்கள். அதைவிட அப்போது பிரச்சாரத்திற்காக நடத்பட்ட வீதி நாடகங்களில் ரத்வத்தின் பாத்திரத்தில் பலர் நடித்தார்கள். ரத்வத்தவின் இராணுவ வெறித்தனத்தை அவர்கள் மிகவும் இயல்பாகவே பிரதிபலித்தார்கள். அதனால் களத்தில் யுத்த வெறியோடு உலாவிய ரத்தவின் அழிப்பையும் இனவெறி வார்த்தைகளையும் சாதாரண மக்களும் அறிந்தார்கள். அன்றைய காலத்தில் ரத்வத்த சிங்கள இராணுவ வெறியின் குறியீடு ஆனார். அச்சமும் பயங்கரமும் தரும் அவரது முகமும் இனவெறி வார்த்தைகளும் ஈழத் தமிழர்களை எதிர்த்து போராரிட தூண்டியிருந்தது. முன்னர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ரத்வத்த வென்றார் என்ற நிலை யாழ் மற்றும் கிளிநொச்சி இழப்புக்களில் ஏற்பட்டன.
 
ரத்வத்தவின் இனவெறித்தனமான படுகொலையில் பட்டியில் நவாலி தேவாலயத்தாக்குதல், நந்தாவில் அம்மன் கோவில் தாக்குதல், செம்மணிப்படுகொலை, நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலை உட்பட யாழிலும் வன்னியிலும் பல தமிழனப்படுகொலைகள் நடத்தப்பட்டன. இராணுவத்தினருக்கு சுதந்திரமான படுகொலைகளை செய்ய அவர் உத்தரவிட்டார். இராணுவ வலயங்களில் மக்களை படுகொலை செய்யும் அளவில் இராணுவத்தின் இனவெறி தாண்டவமாடியது. கிளிநொச்சியிலும் யாழ் நகரத்திலும் பல ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1997இல் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது 1998ஆம் ஆண்டு பெப்ருவரியில் வரும் இலங்கையின் 50ஆவது சுதந்திரதினத்தில் வன்னியை முழுமையாகக் கைப்பற்றி பிரபாகரனுடன் கைகுலுக்குவேன் என்று குறிப்பிட்ட ரத்வத்த பின்னர் பெரும் தோல்வியை தழுவினார்.
 
புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ரத்தவின் இராணுவவெறி தோற்கடிக்கப்பட்டது. புலிபாய்ச்சல் இராணுவ நடவடிக்கை, ஓயாத அலைகள் நடவடிக்கைகளின் வாயிலாக புளியங்குளம் முதல் ஆனையிறவு வரை புலிகள் கைப்பற்றினார்கள். ஜெயசிற்குறு தாக்குதலில் ரத்வத்த தலைமையில் இருபதாயிரம் இராணுவப் படைகள் இறக்கப்பட்டனர். ரத்வத்தின் இராணுவவெறி ஒரு சில நாட்களில் சரிந்து போனது. அவர் வருடக் கணக்கில் வழி நடத்திக் கைப்பற்றிய இடங்களை புலிகள் ஒரு சில நாட்களில் எதிர்பார்க்காத வகையில் பார்த்திருக்கக் கைப்பற்றினார்கள். சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த அதே காலத்தில் ரத்தவத்த யுத்த அமைச்சராக இருந்த அதே காலத்தில் அவர் களத்திலேயே வைத்து தோற்கடிக்கப்பட்டார்.
 
சந்திரிகா ஆட்சி முடிந்த பொழுது ரத்வத்த இராணுவ அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். பிற்காலத்தில் அவரது வாழ்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. வருமானத்திற்கு மீறிய சொத்தைகுவித்த வழக்குத் தொடர்பில் அவர் மரணிக்கும்வரை நீதிமன்றம் ஏறியிறங்கினார். 34 மில்லியன் ரூபா பணத்தையும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்தையும் சட்டத்திற்கு புறம்பான வகையில் சேகரித்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டார். தொடர்ச்சியாக ஊடகங்களில் அவரது பெயர் அடிபட்டது. ஒரு காலத்தில் யுத்தத்தை நடத்தி நாட்டில் சிங்கள இனவெறியை வளர்த்த ரத்வத்த நீதிமன்றில் குற்றவாளியாக குற்றக் கூண்டிலில் நின்றார். 2001இல் இவர் தலமை தாங்கி நடத்திய உடதலவின்ன பத்து முஸ்லீம்கள் படுகொலை பிரச்சினையிலும் சிக்கினார்.
 
ரத்வத்தவின் இனவெறியும் இனவாத அரசியலும் முடங்கியது. எல்லா  தோல்விகளையும் சூழ்நிலைகளையும் தாண்டி ரத்வத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்ந்து ஆதரித்து வந்தார். தேசிய பட்டியலில் இவர் எம்.பி பதவிக்கு பரிந்துரைக்கபடவும் இருந்து இறுதி நேரத்தில் சந்தர்ப்பத்தை இழந்தார். எப்படியிருப்பினும் ஜனாதிபதி மகிந்தவுக்கு மிக நெருக்கமானவராகவும் இருந்தார். வத்துகாமத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மகிந்த சிந்தனையை உன்னதமானது என்றார். சந்திரிகா ஆட்சி முடிந்து போனதால் தன்னை பாதுகாக்க அவர் மகிந்தவிடம் சரணடைந்து இப்படி செயற்படவேண்டியிருந்தது.
 
ரத்வத்தவின் தமிழினப்படுகொலைக்காலத்திலேயே அவர் முக்கியமான படுகொலை இராணுவத்தினரை தளபதிகளை உருவாக்கினார். சரத்பொன்சேகா, சந்திரசிறி, ஜயக்ஜெயசூரியா, சவேந்திரசில்வா போன்ற படுகொலைக்கும் இனவழிப்புக்கும் பெயர்போன யுத்த இராணுவத் தளபதிகளை உருவாக்கினார். அவருக்குப் பின்வந்த இந்தத் தளபதிகள் பலவித்தில் ரத்வத்தவை பின்பற்றியுள்ளார்கள். மூன்றாம் ஈழப்போர் காலத்தில் சந்திரிகாவுக்கு ரத்வத்த எவ்வாறு துணையிருந்து தமிழனிப் படுகொலையை செய்தாரோ அதைப்போலவே நான்காம் ஈழப்போரில் மகிந்தராஜபக்சவுக்கு துணையாய் சரத்பொன்சேகாவவையும் கோத்தபாயராஜபக்சவையும் இருந்து படுகொலையை மேற்கொள்ள ரத்வத்தவின் இராணுவெறி வழிகாட்டியது.
 
மூன்றாம் ஈழப்போரில் ரத்வத்த வடிவமைத்த தமிழினப்படுகொலை மிகவும் கொடியது. அதைவிடவும் அவரைப் பின்பற்றி இனவெறி பிடித்த பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் இராணுவத்தளபதியாக உருவெடுத்த சரத்பொன்சேகா போன்றவர்கள் மூன்றாம் ஈழப்போரில் மேற்கொண்ட தமிழினப்படுகொலையை விடவும் கொடியதொரு இனப்படுகொலையான வன்னி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் பேரழிவை நடத்தியுள்ளனர். ரத்வத்த இறந்தும் அவரது இராணுவ இனவெறி இறக்கவில்லை. அவர் வளர்த்த இராணுவவெறி இன்னும் அதிக உச்சத்துடன் தமிழனப்படுகொலையை மேற்கொள்ளுகிறது. ரத்வத்தவின் இனவெறி இன்னும் இறக்கவில்லை என்ற அடிப்படையில் ரத்வத்தவின் மரணம் சிங்களப் பேரினவாத அரசுக்கு பெரியதொரு இழப்பாக இல்லாமல் இருக்கக்கூடும். 
 
தோற்றுப்போனவர்களை விடவும் அழிக்கப்பட்டவர்களை விடவும் அந்த அழிவையும் தோல்வியையும் உருவாக்குபவர்களையே அதிகமாக பதிவு செய்கிறது. அது வரலாற்றின் அனுபவமாகவும் படமாகவும் அமைகிறது. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அருத்தரத்வத்த போன்ற இனவாதக் கடும்போக்கான அழிப்பாளர்களை ஈழத் தமிழர்கள் மறந்து விட முடியாது. ரத்வத்த இரத்தம் நனைந்த ஒரு கொலை முகம். அவ்வகையில் பாதுகாப்பு அமைச்சராகவும் யுத்த தளபதியாகவும் ஒரு காலத்தின் பயங்கரங்களை நிழ்த்திய ரத்வத்தவின் இரத்தக்கறை படிந்த தமிழினப்படுகொலையாளர் என்ற பெரும் வரலாற்றுப் பக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

GTN

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்