ஜனாதிபதி அளித்த விருந்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
10 புரட்டாசி 2023 ஞாயிறு 04:31 | பார்வைகள் : 4581
டெல்லியில் ஜி-20 மாநாட்டு அரங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இரவு விருந்து ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.30 மணி அளவில் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாடு இல்லத்தில் போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், மாலை வரை அறையில் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 5.45 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.
வேட்டி- சட்டை அணிந்து சட்டைக்கு மேல், அரை கோட்டு அணிந்திருந்தார். அதிகாரிகள் அவரை நாடாளுமன்ற வளாகம் வரை கொண்டு விட்டனர். இதைப்போல பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்றனர்.
இன்று திரும்புகிறார்
பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனம் மூலம் பிரகதி மைதானத்துக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு முதலில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு விருந்து தொடங்கியது. இதில் பங்கேற்றபின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகம் வந்து பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லம் திரும்பினார்.
இரவில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.50 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.