Paristamil Navigation Paristamil advert login

புலிகளை அழிக்கும் இலக்கில் தோல்வி கண்ட இந்தியப்படை!

புலிகளை அழிக்கும் இலக்கில் தோல்வி கண்ட இந்தியப்படை!

4 ஆனி 2013 செவ்வாய் 21:34 | பார்வைகள் : 10639


முதலாம் கட்ட ஈழப்போர் இந்தியப் படையினரின் வருகையுடன் தான் முடிவுக்கு வந்தது.

இந்தியப்படையினரின் வருகை அல்லது இந்தியத் தலையீடு என்பது எதற்காக நிகழ்ந்தது என்பதில் இருவேறு கருத்து நிலைகள் உள்ளன.

அதாவது ஒப்பரேசன் லிபரேசன்மூலம் கைப்பற்றப்பட்ட வடமராட்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கரும்புலித் தாக்குதல் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்ததாக தமிழர் தரப்பில் ஒரு நம்பிக்கை உள்ளது.

ஆனால் இலங்கை அரச மற்றும் இராணுவத் தரப்போ யாழ்ப்பாணம் மீதான தமது தாக்குதல் திட்டம் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்ததாக கருதுகின்றன.

நெல்லியடி இராணுவ முகாம் மீதான இந்தக் கரும்புலித் தாக்குதலில் 300 வரையான அரச படையினர் கொல்லப்பட்டதாக அப்போது புலிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் அது உண்மையல்ல என்பது இராணுவத் தரப்பின் உறுதியான கருத்து.

அப்போது நெல்லியடி இராணுவ முகாமில் இருந்த மொத்தப் படையினரின் எண்ணிக்கை சுமார் 150 பேர் வரை தான் என்று முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெரி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதலில் 17 படையினர் தான் கொல்லப்பட்டனா் என்பது அவரது கணக்கு.

நெல்லியடித் தாக்குதல் அரசாங்கத்துக்கும் படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் அதுவே இந்தியத் தலையீட்டுக்கு காரணமல்ல என்பது அரசதரப்பின் நியாயம்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இரண்டாவது கட்ட ஒப்பரேசன் லிபரேசனை முன்னெடுத்த போதே இந்தியா அதனைத் தடுத்ததாக இலங்கை இராணுவ அதிகாரிகள் உறுதியாக கூறுகின்றனர்.

காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதியை மையப்படுத்தி இரண்டு பிரிகேட் படையினர் முன்னகர்ந்த போதே இந்தியா அழுத்தம் கொடுத்ததால் ஜே.ஆர். அந்தப் படை நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவிட்டதாக இராணுவத் தரப்பு கூறுகிறது.

அப்போது யாழ். குடாநாட்டில் போர் நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளில் ஒருவரான லெப். கேணல் கோத்தபாய ராஜபக்ச இதே கருத்தை அண்மையில் கூட குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தியப்படையின் இலங்கை வருகை என்பது இலங்கைப் படையினருக்கு சார்பானதோ விடுதலைப் புலிகளுக்கு சார்பானதோ அல்ல.

அதாவது இந்தியப்படையினர் புலிகளைக் காப்பாற்றவும் வரவில்லை. இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றவும் வரவில்லை.

விடுதலைப் புலிகளினதும் அரச படைகளினதும் போர் நிகழ்ச்சி நிரல்கள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து போனதாலும் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலும் தான் இந்தியத் தலையீடு இடம்பெற்றது.

அது முற்றிலும் இந்திய நலனைக் கருத்தில் கொண்ட நிகழ்வு.

எனவே அதற்கு விடுதலைப் புலிகள் அல்லது அரச படையினர் உாிமை கோருவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததற்குச் சமமானது.

ஏனென்றால் முதலாம் கட்ட ஈழப் போரில் யாருமே மேலாதிக்கம் செலுத்தவில்லை.

படைத்தரப்பு வடமராட்சியைக் கைப்பற்றி அடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது.

அதேவேளை விடுதலைப் புலிகளோ வடமராட்சியைப் பறிகொடுத்தாலும் நெல்லியடித் தாக்குதல் மூலம் தமது பலத்தை வெளிக்காட்டினர்.

இருந்தாலும் நெல்லியடித் தாக்குதலுக்குப் பின்னர் புலிகள் சில நாட்கள் மட்டுமே வடமராட்சியின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.

அதன் பின்னா் விலக்கிக் கொண்டனர்.

நெல்லியடித் தாக்குதல் இழந்து போன வடமராட்சியை புலிகளுக்கு மீட்டுக் கொடுக்கவும் இல்லை, அதற்கான ஆயுத மற்றும் ஆட்பலம் அவர்களிடம் இருக்கவும் இல்லை.

அதேவேளை யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கு போதிய ஆட்பமை் படையினரிடம் இருக்கவும் இல்லை.

ஆனால் பலாலி தொடக்கம் யாழ்ப்பாண நகரம் வரை பரவலாக குண்டுகளை வீசி அதைக் கைப்பற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இருந்தது.

இது இந்தியாவுக்குத் தெரியும்.

அதேவேளை புலிகளிடம் ஆயுத வளம் இல்லை என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.

ஏனென்றால் அவர்கள் இந்தியாவிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்தியா அதைக் கொடுக்கவில்லை.

மோதல் முற்றும் வரை கனியைப் பறிக்க காத்திருந்தது.

எல்லாமே தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய வந்தபோது இந்தியா ஜே.ஆரை மடக்கியது.

இதில் ஜே.ஆரை, ராஜீவ் மடக்கினாரா, ராஜீவை ஜே.ஆர் மடக்கினாரா என்ற கேள்வி இருக்கிறது.

விடுதலைப் புலிகளை அழிக்கும் வேலையில் இந்தியப் படையினரைக் கோர்த்து விட்டு தனது படையினரைப் பாதுகாப்பாக தேற்கே நகர்த்திக் கொண்டார் ஜே.ஆர்.

இது அவரது தந்திரம்.

எது எவ்வாறாயினும் முதலாம் கட்ட ஈழுப்போரின் இறுதிக்கால ஒட்டுமொத்த நிகழ்வுகள் தான் இந்தியத் தலையீட்டுக்கு வழி வகுத்தன.

இந்தியப் படைகள் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையிலான ஈழப்போர் 1  முடிவுக்கு வந்தது.

ஏனென்றால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை போர் நிறுத்தத்தையும் கொண்டு வந்தது.

அந்தப் போர் நிறுத்தம் ஒரு எழுத்துபூர்வ ஆவண்மாக இல்லாத போதிலும் புலிகளை அதற்கு இணங்க வைத்தது இந்தியா.

அதுமட்டுமன்றி இந்தியாவின் அழுத்தங்களினால் உடன்பாட்டை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி ஆயுதங்களை ஒப்படைக்கவும் புலிகள் இணங்கினர்.

அது வெறும் கண்துடைப்பு என்பது வெளிப்படையான விடயம்.

இந்தியப்படைகளின் வருகையின் பின்னர் ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தான் அமைதி நிலவியது.

அது கூட கொந்தளிப்புகள் நிறைந்த சூழலாகவே இருந்தது.

அதற்குள் இந்திய - புலிகள் போர் வெடித்தது.


குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் மரணத்தை அடுத்து இலங்கைப் படையினர் மீது புலிகள் தாக்குதல் தொடுக்க ஆயுதக்களைவு என்ற பெயரில் அவர்கள் மீது இந்தியா போரைத் தொடுத்தது.

1987 ஒக்டோபர் 10ம் திகதி தொடங்கிய இந்தப் போரில் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ஒப்பரேசன் பவான் என்ற தாக்குதலை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை வழி மறித்து பல இடங்களில் போரிட்டனர்.

விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் தலையிறங்கிய இந்திய இராணுவ அணியொன்று முற்றாகவே அழிக்கப்பட்டது.

29 சீக்கிப் படையினரும், 6 பரா கொமாண்டோக்களும் அதில் மரணமாகினர்.

ஐந்து நாட்கள் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் தாம் 33 படையினரை இழந்ததாகவும், ஆனால் எல்லா வளங்களையும் கொண்ட, சிறப்பு பயிற்சிகளையும் பெற்ற  இந்தியப் படையினர் ஒரே நாளில் 35 படையினரை இழந்ததாகவும் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

ஒபரேசன் பவான் நடவடிக்கையில் மட்டும் இந்தியப் படையினர் 247 பேர் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் தரப்பில் இதில் குறைந்தளவிலானோரே கொல்லப்பட்டனர்.

இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வன்னி, மணலாறு காடுகளில் புலிகள் அடைக்கலம் தேடிக் கொண்டனர்.

அடுத்து புலிவேட்டை அங்கு நீடித்தது.

இந்தியப் படையினருக்கு எத்ரான கெரில்லாப் போரை பரந்தளவில் நடத்திய புலிகள் மணலாறு காட்டுக்குள் அவர்களை நுழைய விடாமல் கடுமையாக சண்டையிட்டனர்.

1990 மார்ச் 24ம் திகதி திருகோணமலையில் இருந்து இந்தியப் படையினர் புறப்படும் வரையில் இந்திய - புலிகள் போர் நீடித்தது.

ஆனால் இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்“த வி.பி. சிங் அரசாங்கம் இந்தியப் படையினரை விலக்கும் முடிவை எடுத்து பின்னர் 1989ன் கடைசிக்கால கட்டத்திலேயே கிட்டத்தட்ட இந்தப் போர் ஓயத் தொடங்கி விட்டது.

இந்தப் போரில் 1255 வரையிலான இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 2500 பேர் வரை படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5000 வரையிலாகும்.

முதலாம் கட்ட ஈழப் போரில் இலங்கைப் படையினர் எதிர்கொண்ட இழப்புக்களை விடவும் அதிகமான இழப்புகளை இந்தியப் படையினர் குறுகிய காலத்துக்குள் சந்தித்தனர்.

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளும், தாக்கிவிட்டு மறைந்து போகும் கெரில்லா உத்தியும் இந்தியப் படையினருக்குப் பெரிதும் சேதங்களை ஏற்படுத்தியது.

அவர்களுக்ப் பிரதான அச்சுறுத்தலாக இருந்ததே கண்ணிவெடிகள் தான்.

இந்த இரண்டரை ஆண்டு காலப் போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் 900 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

புலிகளை விட அதிகமான இந்தியப் படையினர் போரில் பங்கெடுத்ததும் சேதங்கள் அதிகமாக ஏற்பட்டதற்கு ஒரு காரணம்.

இந்தப் போர் தான் விடுதலைப் புலிகளுக்கு பெரிய உந்துசக்தியாகவுத் உளவியல் பலமாகவும் அமைந்து போனதாக கணிப்பிடுகின்றனர் இலங்கைப் படை அதிகாரிகள்.

உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே தோற்கடித்தது புலிகளை அதிகம் பலமானவர்களாக கணிக்க வைத்தது.

இந்தப் போரில் இந்தியப் படையினர் தமது இலக்கை எட்டுவதில் தோல்வியை சந்தித்தனர்.

அதேவேளை விடுதலைப் புலிகளும் கொழும்புடன் அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டதால் தான் தப்பிக் கொண்டனர்.

ஒரு பக்கத்தில் இந்தப் போர் புலிகளின் உளவியல் பலத்தை உயா்த்தினாலும் நீண்ட காட்டு வாழ்க்கையும் விநியோக நெருக்கடிகளும் புலிகளுக்கு கடும் சவாலாகவே இருந்தது.

எவ்வாறாயினும் இலக்கை அடையாமலே இந்தியப் படையினர் வெளியேறியது புலிகளின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த அளவுகோல் எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வியும் உள்ளது.

- சுபத்ரா

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்