மரபுவழி தாக்குதலின் வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
20 வைகாசி 2013 திங்கள் 15:29 | பார்வைகள் : 11045
தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.
தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார்.
அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.
வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.
இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.
அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
மேஜர் பசீலன் அவர்களுடன்
நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார்.
முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார்.
1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.
தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார்.
தலைவருடன்
தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்;டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார்.
வன்னிப்பிராந்திய தளபதியாக
முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார்.
பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது.
பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”. என்று கூறியுள்ளார்.
இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்
தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார்.
அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால்; முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெ