Paristamil Navigation Paristamil advert login

புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா யார்?

புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா யார்?

16 வைகாசி 2013 வியாழன் 20:46 | பார்வைகள் : 9420


ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை பற்றிய கொள்கை வகுப்பாளராக இருந்த ஒரு முக்கிய இராஜ தந்திரியான ஜே.என் தீக்ஷித் அவர்கள், புலிகள் விடயத்தில் கடைப்பிடித்திருந்த பிழையான அணுகுமுறைகளே, இலங்கையில் இந்தியா மிகப் பெரியதும், அவமானகரமானதுமான தோல்வியை அடைந்து திரும்ப காரணம் என்று பல இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அரசியல் விடயங்களில் போதிய அனுபவமற்ற ஒருவராகவே இருந்தார். வெளிநாடுகள் தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் அவர் பெரும்பாலும் இராஜதந்திரிகளையும், ஆலோசகர்களையுமே நம்பியிருந்தார். அந்தவகையில் இலங்கை பிரச்சனையில் ஜே.என்.தீக்ஷித் அவர்களை பெரிதும் நம்பிச் செயற்பட்ட ராஜீவ் காந்தியை, புலிகள் விடயத்தில் தீக்ஷித் பிழையாக வழிநடத்திவிட்டதாகவே இந்தியப் படைகளின் தளபதிகள் பலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.

திலீபனை சந்திக்கத் தயங்கிய தீட்ஷித்:

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் என்ற உயரதிகாரி.

திலீபனின் உண்ணாவிரதத்தை இந்தியா அணுகியது தொடர்பாக இணையத் தளம் ஒன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில், “ஈழத் தமிழர் பிரச்சினை இத்தனை மோசமாகுவதற்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தே காரணம்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

ஹரிகிரத் சிங் தனது செவ்வியில், மேலும் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை சுமுகமாகத் தீர்த்துவைப்பதற்கு எங்களாலான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். திலீபனைச் சந்திப்பதற்கு நான் விரும்பினேன். அதற்கான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆனால் சில புலிப் போராளிகள் என்னிடம் கூறினார்கள், “ஜெனரல், மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நீங்கள் மக்களின் முன்னால் செல்வது உங்களுக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்” என்று என்னிடம் கூறி, உண்ணாவிரத மேடைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. நான் திலீபனிடம் சென்று, உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் கோர இருந்தேன்.

ஆனால் திலீபனால் எப்படி உண்ணாவிரதத்தை கைவிட முடியும்? இந்தியப் பிரதமரால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று திலீபன் ஏற்கனவே உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் தரப்பில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கியிருந்தது.

திலீபனை வந்து சந்திக்கும்படி நான் இந்திய தூதுவரை பல தடவைகள் கேட்டிருந்தேன். “வந்து சந்தியுங்கள்..”, “வந்து சந்தியுங்கள்...”, “வந்து சந்தியுங்கள்...” என்று தொடர்ந்து அவரிடம் கோரியபடியே இருந்தேன். ஆனால், அவர் அங்கு வர மிகுந்த தயக்கம் காண்பித்தார். அங்கு வருவதற்கு அவர் விரும்பவும் இல்லை. கடைசியாக இந்தியத் தூதுவர் அங்கு வந்தபோது, எல்லாமே முடிந்துபோயிருந்தது. அந்த இளைஞன் அநியாயமாக இறந்துவிட்டிருந்தான். இந்தியத் தூதுவர் திலீபனின் உயிரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். இலங்கையில் பின்நாட்களில் இந்தியாவிற்கு பல சங்கடங்கள் நிகழ்வதற்கு இந்தச் சம்பவமே முதற் காரணமாக அமைந்திருந்தது.

தீக்ஷித்தின் ஆணவத்திற்கு “வைகோ” கொடுத்த அடி:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஸ்தாபகரான திரு.வை.கோபால்சாமி (வைகோ) அவர்கள், தி.மு.கா.வின் ஒரு “போர் வாளாக” இருந்த காலத்தில், மகாத்மா காந்தியை திலீபனுடன் ஒப்பிட்டு, தெரிவித்திருந்த கருத்தை, இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

திலீபன் பற்றி தீக்ஷித் வெளியிட்டிருந்த ஒரு கருத்திற்கு பதிலாகவே, திரு.வைகோ இதனைத் தெரிவித்திருந்தார்.

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, இந்தியத் தூதுவர் தீக்ஷித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த தீக்சித், “திலீபன் என்ன மகாத்மா காந்தியா?” என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

தீட்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த திரு.வை.கோபால்சாமி அவர்கள், “திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன்” என்று அடித்துக் கூறியிருந்தார். திரு வைகோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான “சத்தியசோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார்.

மகாத்மா காந்தியின் இளமைப்பருவத்தின்போது அவரது தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக “சத்தியசோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித்தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். அந்த வகையில் “திலீபன் மகாத்மா காந்தியை விட சிறந்தவன்” என்று திரு.வை.கோபால்சாமி, தீக்ஷித்தின் கருத்துக்கு பதில் அளித்திருந்தார்.

பிரபா-தீட்ஷித் சந்திப்பு:

1987ம் ஆண்டு, செப்டெம்பர் 22ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார். தீட்ஷித்தை சந்திப்பதற்காக, புலிகளின் தலைவர் பிரபாரகரன் அவர்களும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் அங்கு சென்றிருந்தார்கள்.

(இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த திரு.அன்டன் பாலசிங்கம் அவர்கள், திலீபனின் உண்ணாவிரதத்தைத் தொர்ந்து ஈழத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அரசியல் குழப்பங்களின் நிமிர்த்தமே புலிகளின் தலைவரால் யாழ்ப்பாணத்திற்கு அவசரஅவசரமாக அழைக்கப்பட்டிருந்தார்.)

புலிகளின் தலைவர்களைச் சந்தித்த தீக்ஷித் பெருஞ் செருக்கோடும், கடும் சினத்தோடும் காணப்பட்டதாக, புலிகளின் அரசியல் ஆலோசகர் பின்னாளில் நினைவு கூர்ந்திருந்தார்.

“திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் செயல்” என்றும் தன்னைப் பொறுத்தவரையில் “இது ஆத்திரமூட்டும் ஒரு செயல்” என்றும் தீக்ஷித் கண்டனம் தெரிவித்தார். புலிகளை மிகவும் மோசமாக விமர்சித்த தீக்ஷித், புலிகள் அமைப்புக்கு எதிராக பலவித மிரட்டல்களையும் விடுத்தார்.

பிரபாகரன் அவர்கள் அங்கே நிறையப் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கின்றார். தீக்ஷித்தின் ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பொறுமையாக செவிமடுத்த திரு. பிரபாகரன், தீக்ஷித்திடம் ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

“தீக்ஷித் நல்லூர் சென்று, மரணப் படுக்கையில் இருக்கும் திலீபனுடன் பேசி, இந்தியா ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு திலீபனிடம் கோரிக்கைவிடவேண்டும்” என்று திரு.பிரபாகரன் தீக்ஷித்திடம் பரிந்து கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீக்ஷித் தனக்கே உரித்தான செருக்குடனும், மமதையுடனும், புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்.

தனது பயணத்திட்டத்தில் திலீபனைச் சந்திக்கும் விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று கூறி, புலிகளின் தலைவரின் வேண்டுகோளை உதறித்தள்ளினார். அன்றைய தினம், தீக்ஷித் மட்டும் சிறிது கருணை காண்பித்திருந்தால், தமிழ் மக்கள் மிகவும் நேசித்த ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றி இருக்கமுடியும்.

தமிழை நேசித்த பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தமிழர் தாயகத்திற்கு அழையா விருந்தாளிகளாக வந்திருந்த பல இந்தியப் படை வீரர்களின் உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் தீக்ஷித்தின் ஆணவம், ஈழ மண்ணில் ஒரு மிகப் பெரிய அலவத்தை நிகழ்த்தும் ஒரு முடிவை நோக்கி அனைத்தையும் இட்டுச் சென்றது.

ஈழ தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்த உண்ணா விரதங்கள்:

இதற்கிடையில், திலீபனுக்கு ஆதரவாகவும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஈழ தேசம் முழுவதும் பல இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அதேபோன்று முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார். தமிழ் தேசம் முழுவதுமே உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தது.

மறுநாள், அதாவது 26ம் திகதி முதல் யாழ்குடா முழுவதிலுமுள்ள ஆரச மற்றும் தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவைகளும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும், மறியலும் செய்து வேலைப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

திலீபன் மரணம்:


26.09.1987 காலை 10.48 மணிக்கு, திலீபன் என்ற மாவீரன் தனது உயிரை தமிழுக்காக, தான் நேசித்த தமிழ் மக்களுக்காக தியாகம் செய்திருந்தான்.

இந்தியாவின் வரலாற்றில் இரத்தத்தால் பொறிக்கப்பட்ட ஒரு “ஆச்சரியக் குறியாக” - திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும், அவனது மரணமும் அமைந்திருந்தது.

– நிராஜ் டேவிட்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்