Paristamil Navigation Paristamil advert login

இந்தியப் படைகளுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழ் மக்கள்

இந்தியப் படைகளுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழ் மக்கள்

3 வைகாசி 2013 வெள்ளி 13:53 | பார்வைகள் : 10324


விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது - புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது - திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் மாத்தையாவின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் மாத்தையா மேற்கொண்ட அந்த உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.

மிகவும் சுவாரசியமானதும், பரபரப்பானதுமான இந்தச் சம்பவம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது திலீபனின் உண்ணாவிரத மேடைக்குச் செல்லுவோம்.

என்னை அவமானப் படுத்தவேண்டாம் - திலீபன்


திலீபன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மூன்றாவது நாள், அவரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்து வந்ததால், அவரது நாக்கு வரண்டு போயிருந்ததுடன், மாறாட்டமும் மயக்க நிலை கூட அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. வயிற்றினுள் பலவித உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தன. உடற் சூடு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இரத்த அழுத்தம் குறையவும் ஆரம்பித்தது.

சிறிது நீர் அருந்தினால், அவரது உடல்நிலை ஓரளவு தேறிவிடும்; என்று அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா எப்படியாவது மனமிரங்கிவிடும், திலீபன் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு விடலாம் என்றே அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புலிகளுக்கு சாதகமான தனது முடிவை அறிவித்து விடும், எனவே அதற்குள் திலீபனின் உடல் நிலை மோசமாக அனுமதிக்கக்கூடாது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

இந்தியா, சத்தியத்தின் மீதும், சாத்வீகத்தின் மீதும் மதிப்பு வைத்திருப்பதாக அங்கிருந்த சிலர் அப்பொழுதும் நம்பியதுதான் வேடிக்கை.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் உள்ள மேடையில், திலீபனின் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும்படியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதங்கள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. அந்த மேடையில் பல பிரமுகர்கள், உண்ணாவிரதத்திற்கு சார்பாக உரையாற்றியபடி இருந்தார்கள்.

கருணானந்த சிவம் என்ற ஆசிரியர், திலீபனை மிகவும் நேசித்த ஒருவர். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மேடையில் அவர் உரை நிகழ்த்தும் போது, திலீபனின் உடல்நிலை மோசமடைந்து செல்வது பற்றி மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின் போது, திலீபனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

திலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் முழுத் தமிழினத்திற்கும் சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தனது உடலைக் காப்பாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமல்ல, இங்கு திரண்டு வந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோளும் இதுதான் என்று பேசினார்.

அதைக் கேட்ட திலீபனின் முகம் வாடிவிட்டது. ஒலிவாங்கியை தன்னிடம் தருமாறு கேட்ட திலீபன் ஆசிரியர் கருணானந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு பதில் வழங்கிப் பேசினார்.

இந்த மேடையில் பேசிய அன்பர் என்னிடம் நீராகாரம் அருந்தும்படி கேட்டுக்கொண்டது, என்னை அவமானப்படுத்துவது போன்று இருக்கின்றது. நான் இந்த மேடையில் நீராகாரம் அருந்தாமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையானால், எவரும் என்னை நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது இலட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

திலீபன் மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பாசம் தமது கண்களை மறைத்து விட்டிருந்ததை, திலீபனை நீர் அருந்தும்படி கோரியவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதன் பின்னர் எவருமே திலீபனை நீர் அருந்தும்படி வற்புறுத்த முன்வரவில்லை.

கலவரங்களாக வெளிப்பட்ட மக்களின் எழுச்சி:

திலீபன் என்ற 23 வயது இளைஞனின் இந்த வித்தியாசமான உண்ணாவிரதம் யாழ்ப்பான தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்வலைகள் ஒரு பாரிய எழுச்சியாகவே மாற ஆரம்பித்திருந்தது.

திலீபனின் கோரிக்கைகளுக்கு இந்தியா செவிசாய்க்க தயாரில்லை என்பதான செய்திகள் யாழ் மக்களிடம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும், அதன் அமைதிப்படையினருக்கும் எதிராக மக்கள் பாரிய உணர்வலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

புலிகள் எதனைக் கேட்டுவிட்டார்கள்? பெரிதாக ஒன்றும் அவர்கள் கேட்டுவிடவில்லையே. தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களைத்தானே அவர்கள் கேட்டுள்ளார்கள். இதற்காக ஒரு இளைஞனை பலிகொடுக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு இப்படி ஒரு கல்நெஞ்சு இருப்பது அவசியம்தானா?

இந்த சிறு விடயத்தைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற விரும்பாத இந்தியாவினால், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்| என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

விளைவு:

இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பினார்கள். ஊர்வலங்களை நடாத்தினார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியப்படையினரை நோக்கி கற்களை வீசவும் செய்தார்கள்.

மன்னார், தலைமன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும், இந்தியப்படைகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

இந்தியப்படையின் முகாமை அடைந்த ஊர்வலத்தின் மக்கள் கூட்டம் முகாமின் வாயிலை அடைத்தபடி நின்று, கோஷம் எழுப்பியது. திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்தியா காண்பிக்கும் மௌனத்திற்கு எதிராக தமது கண்டணங்களை வெளிப்படுத்திய பொது மக்கள், இந்தியா தமிழர் பிரதேசங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

முகாமின் வாயிலில் காவல் கடமையில் இருந்த இந்தியப்படை வீரர் ஒருவர் மிகவும் கோபம் அடைந்தவராக தனது துப்பாக்கியை எடுத்து, ஊர்வலத்தை நோக்கி ஒரு சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார். ஊர்வலத்தின் முன்வரிசையில் நின்ற ஒருவர் சுடப்பட்டுவிழ, ஏனையவர்கள் கலைந்து ஓடினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே தாம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பால் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முகாமுக்குள் பொதுமக்கள் நுழைய முற்பட்டது ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை எதனையும் மேற்கொள்ளாது, எச்சரிக்கை வேட்டுக்கள் கூட தீர்க்காது, நேரடியாகவே பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இந்தியப் படைகளின் செயல், பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இதுபோன்ற இந்தியப்படைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியப் படைகளின் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாத அளவிற்கு நிலமை மோசமாக ஆரம்பித்தது. இந்தியப்படைகளுடன் பேசுவதற்கும் பொதுமக்கள் விரும்பவில்லை.

இந்தியப் படை அதிகாரிகளுடன் சினேகபூவமான தொடர்புகளை வைத்திருந்த யாழ்வாசிகள் தமது உறவுகளை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூட தயக்கம் காண்பித்தார்கள்.

திலீபனின் உண்ணா விரதம் பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இந்தியப்படை அதிகாரிகள், நிலமையின் விபரீதத்தை படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை விடுதலைப் புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக திருப்பிவிட்டுள்ளதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். நிலமை இந்த அளவிற்கு மோசமாகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை திலீபன் இறந்துவிட்டால் நிலமை இதைவிட மோசமடையலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு மாற்றீடாக இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப்படை உயரதிகாரிகள் தமது மேலிடத்திடம் கேட்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசின் தலைமையோ, புலிகள் பூச்சாண்டி காண்பிக்கின்றார்கள் என்றே நினைத்தது.

புலிகளை எப்படியும் சமாளித்துவிட முடியும், இதற்கெல்லாம் பயப்பட்டால் தொடர்ந்தும் புலிகள் இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வாழாவிருந்துவிட்டார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான விடயத்தில், திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இந்தியாவின் அரசியல் தலைமை அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்