Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்காவும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குழப்பங்களும்

சிறிலங்காவும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குழப்பங்களும்

10 சித்திரை 2013 புதன் 05:23 | பார்வைகள் : 9705


பல உப தேசியங்களைக் கொண்ட நாடே இந்தியா ஆகும். அத்துடன் தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் பிரிவினையை ஏற்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகக் காணப்பட்டது.

இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் அரசறிவியல் துறைப் பேராசிரியரான Bharat Karnad எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

1980களின் முற்பகுதியில் ஒருநாள், 'தமிழீழத்தின்' 'வெளியுறவு அமைச்சராக' கடமையாற்றிய அன்ரன் பாலசிங்கம் எனது செயலகத்திற்கு வந்திருந்தார். விரைவில் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முழு அளவில் தொடரப்படவுள்ளதால் ஏற்படும் ஆபத்துத் தொடர்பாக எச்சரிக்கை செய்து நான் எழுதியிருந்த விடயம் தொடர்பாக அன்ரன் பாலசிங்கம் தனது கண்டனத்தை தெரிவிப்பதற்காகவே எனது செயலகத்திற்கு வந்திருந்தார்.

அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய வெளியுறவுப் புலனாய்வு அமைப்பான 'றோ'வால் பயிற்சி வழங்கப்பட்டது. கெரில்லாப் போர் தந்திரோபாயங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் அடங்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத் தமிழர்கள் புலிகள் அமைப்புத் தொடர்பாக தமது கவனத்தை திசைதிருப்பிய காலகட்டமாக அது காணப்பட்டது. அதாவது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் புலிகளின் பால் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பலம் பெருக மிகக் குறுகிய காலத்தில் இந்த அமைப்பானது ஒரு ஆயுதக் குழுவாகப் பரிணாமம் பெற்றது.

கெரில்லாப் போராளிகளாக தோற்றம் பெற்ற இந்த அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிநடத்தினார். இவர் மிகத் திறமையான தந்திரவாதியாகவும், சிறந்த மூலோபாயங்களைக் கைக்கொள்கின்ற ஆற்றல் மிக்க ஒருவராகவும் காணப்பட்டார். இவரது கெரில்லாப் போர்த் தந்திரோபாயங்கள் தொடர்பாக தற்போதும் பேசப்படுகின்றன. இவர் தனது படைக்கான ஆயுத, வெடிபொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்தார். சிறிலங்கா இராணுவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த நடவடிக்கைகளை ஆரம்பத்தில் மேற்கொண்டதன் பிற்பாடு 1987ல் இந்திய அமைதி காக்கும் படையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திலும் புலிகள் வெற்றிகொண்டனர்.

பிரபாகரனின் போர் ஆற்றல் என்பதற்கு அப்பால், இவரது தலைமைத்துவம் மற்றும் இவரது ஊக்குவிக்கும் திறனால் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் வெடிகுண்டு அங்கிகளை அணிவதற்குக் கூட முன்வந்தனர். இவ்வாறு வெடிகுண்டு அங்கிகளை அணிந்த புலிகள், சிங்களவர்கள் வாழ்ந்த மிகப் பலமான பாதுகாப்பு இடப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்த அடிப்படையில் எழுச்சி பெற்ற பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்காக பழைய நரியான சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் 'அழைப்பின்' பேரில் 'அமைதி பேணும்' இந்தியப்படைகள் சிறிலங்காவுக்கு வருகைதந்தனர்.

உலங்குவானூர்திகள், ராங்கிகள் மற்றும் 80,000 வரையான மிகப் பலமான படையினருடன் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை போரில் ஈடுபட்ட போதும் அது இந்த யுத்தத்தில் தோல்வியையே சந்தித்தது. இதில் நான்கு இராணுவ டிவிசன்கள் காணப்பட்டன. வடக்கு கிழக்கில் கெரில்லாப் போர் முறைகளைப் பயன்படுத்தி போரில் ஈடுபட்ட புலிகளுடன் இந்திய அமைதி காக்கும் படையால் போரிட முடியவில்லை. ஏனெனில் இது இந்திய அமைதி காக்கும் படைக்கு அந்நியச் சூழலாகக் காணப்பட்டது. இதனால் என்ன செய்வதொன்றோ அல்லது எப்படிப் போரிடவதென்றோ இந்திய அமைதி காக்கும் படைக்கு தெரியவில்லை.

இதனால் புலிகள் அமைப்புடனான யுத்தத்தில் இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200 வரையானவர்கள் தமது உயிர்களை இழக்க நேரிட்டது. கெரில்லாப் போர் முறைமை தொடக்கம் போரில் பரிணாம வளர்ச்சியை அடைந்த புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தால் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்நாட்டு இராணுவம் ஏன் பல்வேறு மீறல்களைச் செய்தது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் சிறிலங்காவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு உதவுதல் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிராக என்னால் முன்னர் வழங்கப்பட்ட கருத்தை எதிர்த்து அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன்.
அரசியல் ரீதியாக நோக்கில், இவ்வாறான ஒரு நிலைப்பாடு இந்தியாவுக்கு ஆபத்தானது என நான் கூறியிருந்தேன். ஏனெனில் பல உப தேசியங்களைக் கொண்ட நாடே இந்தியா ஆகும். அத்துடன் தனது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் பிரிவினையை ஏற்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகக் காணப்பட்டது. ஏனெனில் இவ்வாறான ஒரு பிரிவினையை ஆதரித்தால் அது தனது நாட்டிலும் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சமே இதற்கான காரணமாகும். இதனால் பிரிவினை கோரிப் போர் இடம்பெறும் தனது அயல் நாடுகளுக்கு தனது இராணுவத்தை இந்தியா அனுப்புகின்றது.

இந்தியா தான் கண்ட வரலாற்று அனுபவத்தின் படி வேறு நாடுகளில் யுத்தத்தில் ஈடுபடுவதானது இந்திய இராணுவப் படைகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என நான் அன்ரன் பாலசிங்கத்திடம் கூறியிருந்தேன். வேறு நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்திய இராணுவம் தலையீடு செய்வதானது அந்த நாட்டின் உள்விவகாரத்தில் குழப்பநிலையை உண்டாக்கும் எனவும் நான் தெரிவித்திருந்தேன்.

இவ்வாறு சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் இந்தியப் படை பங்குபற்றுவதானது இதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இவையெல்லாம் தற்போது நடந்து முடிந்துவிட்டன. எதுஎவ்வாறிருப்பினும் இந்தியா, ஈழத்தை கைகழுவி விடமுடியாது அல்லது சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுடனான இரத்த உறவை தட்டிக்கழிக்க முடியாது என பாலசிங்கம் என்னிடம் கூறியதை நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

அந்த நேரத்தில் சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஆணையாளராக கடமையாற்றிய ஜே.என்.டிக்சிற் இந்தியா தொடர்பாக கொழும்பில் மிக ஆழமான எதிர்மறைக் கருத்தை தோற்றுவித்திருந்தார்.

தற்போது அதிபர் மகிந்த ராஜபக்சவால் ஆளப்படும் சிறிலங்காவானது கடந்த பத்தாண்டாக சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணிவருகிறது. அம்பாந்தோட்டைக்கு அப்பால் சீனா, சிறிலங்காவில் மிக விரைவில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலையில் சீனக் கடற்படையின் பிரசன்னம் காணப்படுகிறது. இந்திய மாக்கடலில் நெல்சன் என அழைக்கப்படும் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சில் சீனா ஈடுபடுகிறது.

நல்வாய்ப்பாக, சிறிலங்காவுக்கு எதிராக 'இனப்படுகொலை' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முழுவதிலும் மிகப் பெரிய உணர்வலை எழுந்தபோது இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது. தமிழ்நாட்டு சட்டசபையில் சிறிலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் முக்கியமான பதத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் மறுத்தபோது தமிழ்நாடு முழுவதும் இதனை எதிர்த்து நின்றது.

இதனால் இந்தியா தனது உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை ஈடுசெய்வதற்காக சிறிலங்காவை வெளிப்படையாக எதிர்த்து நிற்கத் தொடங்கியது. சிறிலங்காவில் ஈழக்கொள்கை தொடர்பாக கருத்துவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என ஐ.நாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுதல் மற்றும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை இடப்பட வேண்டும் எனக் கோரி தமிழ்நாட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஏனைய தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் என்பன சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சிறிலங்கா சுற்றுலாப் பயணிகள், விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்காக வரும் சிறிலங்கா விளையாட்டு வீரர்கள், சிறிலங்காவைச் சேர்ந்த புத்த பிக்குகள் போன்றோருக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவலாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்களவர்கள் இனரீதியாக இந்தியாவின் ஒரிசா மாநில மக்களின் இரத்த உறவுகள் எனத் தெரிவித்த சிறிலங்காவின் இந்தியாவுக்கான உயர் ஆணையாளர் பிரசாத் காரியவசத்தை கைதுசெய்ய வேண்டும் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கான ஆதரவு, உணர்வலைகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் மனங்களில் அச்சத்தை போக்குவதற்காக எடுக்கப்படும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவ்வகை எதிர்பார்ப்புடன் கூடிய பிரதமரை தேர்வுசெய்வதே எமது பொறுப்பாக அமையமுடியும்.

- நித்தியபாரதி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்