Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தொடரப்போகும் அமெரிக்கத் தீர்மானங்கள்

10 பங்குனி 2013 ஞாயிறு 04:34 | பார்வைகள் : 9640


தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், சாட்சிகளற்ற இனப்படுகொலைகள் என்கிற எரிந்து கொண்டிருக்கும் விவகாரங்கள் குறித்து, கடந்த வருடம் நவம்பரில் சார்ல்ஸ் பெற்றி அவர்களால் உள்ளக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

போர் தவிர்ப்பு வலயத்தில் என்ன நடந்தது என்பதனை ஐ.நா.பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அறிந்திருந்தும், மௌனமாக இருந்தார் என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டுகிறது பெற்றியின் அறிக்கை.

மே17 இயக்கமும் இது குறித்தான தரவுகளை ஆதாரங்களோடு முன் வைப்பதைக் காண்கிறோம். நவநீதம் பிள்ளை அம்மையாரின் ஆரம்ப உரையும் இந்த விவகாரங்களைத் தொட்டுச் செல்கிறது. ஆனாலும் மேற்குலகம் தடுமாறுகிறது.

விடுதலைப் புலிகளை அழித்திட உதவியோர் இப்போது குழம்பிய நிலையில் உள்ளனர் போலுள்ளது. போர்க்குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல், மனித உரிமை மீறல் , என்பவை பற்றிக் கூறும் மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு, ஐ.நா.மனித உரிமைப் பேரவை போன்றவை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நடாத்திய விடுதலைபுலிகளை நிராகரிக்கும் போக்கினை கைவிடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

ஏனெனில் இவர்கள் தாயகம்,தேசியம் ,தன்னாட்சி என்கிற தமிழ் தேசத்தின் பிறப்புரிமையைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, மனித உரிமைக்குள் அந்தத் தமிழ் தேசத்தின் பிரச்சினையை அடக்கிவிடலாமென்று மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் செயற்படுவதை விரும்புகிறார்கள்.

விடுதலைப்புலிகளை அழித்திட சகல உதவிகளையும் வழங்கிய இதே சக்திகள், உங்களிடம் ஒரு பலமும் இல்லையென்று சொல்வது வேடிக்கையாகவிருக்கிறது.

13 எம்.பீக்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உங்களுக்கிருக்கும் ஒரே பலமென்று சொல்ல முற்படும் இந்த மேற்குலக அணியினர், இலங்கை அரசியலில் கூட்டமைப்பின் மிகப் பலவீன நிலையைத் தெரிந்து கொண்டும், அதனை தாயக மக்கள் ஏற்றுக் கொண்டது போல, புலம் பெயர் மக்களும் விமர்சனங்களின்றி ஏற்பதே சரியானது என்கிற வகையில் கருத்துத் திணிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அதேவேளை ஐ.நாவில் தீர்மானங்களைக் கொண்டுவருவதன் ஊடாக, எதைச் சாதிக்க முயல்கிறது இந்த மேற்குலகம் என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

கடந்த வருடம் மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் , இந்த மாதம் நிறைவேற்றப்படப்போகும் தீர்மானத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பது போல் தெரியவில்லை. நகல் தீர்மானமே இதனை புரியவைக்கிறது.

அதில் நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள முக்கிய பரிந்துரைகளான காத்திரமான விசாரணை, நில உரிமை குறித்தான சர்ச்சை, தடுப்புக் காவலில் வைத்திருத்தல் தொடர்பான கொள்கை, குடிசார் நிறுவனங்களை சுயாதீனமாக இயங்க அனுமத்தித்தல், கருத்துக் கூறும் சுதந்திரம், இனப் பிரச்சினைத் தீர்விற்கான அதிகாரப்பரவலாக்கம் என்பவற்றை கருத்தில் கொள்ளல் வேண்டும் என்கிற பல விடயங்களை புதிய உத்தேச தீர்மானம் வலியுறுத்துகிறது.

ஒரு உள்ளக பொறிமுறையை நிறுவி, அரசே அதனைச் செயல்படுத்த வேண்டுமெனக் கூறும் அதேவேளை ,மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதிகளின் ஆலோசனையை பெற வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படும்போது இதுகூட மாற்றப்படலாம். சென்ற முறை போன்று இம்முறையும் இந்தியாவின் இடைச்செருகலும், நீக்கலும் நடைபெறலாமென சொல்லப்படுகிறது.

பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும், மனித உரிமைச் சங்கங்களும், மேற்குலக ஊடகங்களும், சுயாதீன சர்வதேச விசாரணையொன்று அவசியம் என வலியுறுத்துவதை அமெரிக்காவின் தீர்மானம் உள்வாங்கவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட வரைபில், நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கையானது சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று குறிப்பிட்டதை தாம் கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்திருந்தாலும், அமெரிக்கத் தீர்மானத்தில் அவை உள்ளடக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

உள்நாட்டுப் பொறிமுறைக்குள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் பங்களிப்பினை அனுமதிக்க வேண்டும் என்கிறவகையில் மட்டுமே அதன் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
ஆகவேதான் இத்தீர்மானங்கள் இலங்கைக்கு எதிரானவை என்று கூறமுடியாமல் இருக்கிறது.

அதேவேளை, இத்தீர்மானம் குறித்த இந்தியாவின் அணுகுமுறை கடந்த தடவையைவிடச் சற்று வித்தியாசமாகக் இருப்பதையும் உணரக்கூடியதாகவிருக்கிறது.

அதாவது ஒட்டுமொத்த தமிழக மக்களின், கட்சிகளின் ஒருமித்த குரல், அடுத்தவருடம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் சில நெருக்கடிகளை உருவாக்குவதைக் காண்லாம். தீர்மானம் குறித்தான இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தின் கருத்து, அந்நிய நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பது போல் அமைகிறது.

தமக்கு இதில் சம்பந்தம் இல்லையென்பது போல், 'தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவுடன் பேசித் தீர்வு காணுங்கள்' என்று இலங்கை அரசிற்கு அறிவுரை கூறி நழுவிச் செல்லப்பார்க்கிரார் குர்சித். அத்தோடு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை எதிர்க்காமல் இணங்கிப் போவது நல்லது என்கிறவகையிலும் இந்த அறிவுரையின் இரண்டாம் பாகம் நீண்டு செல்கிறது.

இவைதவிர, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.  அனேகமாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது இந்த 'தீர்மானம்' பற்றி குர்சித் கூறிய விடயம்.

இத் தீர்மானம், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிரச்சினை போன்று சித்தரிக்க, இந்திய வெளியுறவு அமைச்சர் முயற்சிக்கின்றாரா?. அதாவது இது தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல, இருநாடுகளுக்குமிடையிலான முரண்நிலை என்று சொல்ல வருகிறாரா?.

இங்கேதான், இந்துசமுத்திரப் பிராந்தியம் தொடர்பான இந்திய- அமெரிக்க மூலோபாய நலன்களின் நிதர்சனங்களை புரிந்துகொள்ளக் கூடியதாக அமைகிறது.

உண்மையிலேயே இந்தியாதான் இத்தகைய தீர்மானங்களை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் முன்மொழிந்திருக்க வேண்டும். அதற்கான நியாயப்பாடுகள் , இந்துசமுத்திரப் பிராந்திய அரசியல் களத்தில் அதிகம் இருக்கின்றது.

இருப்பினும்,சீனாவின் பொருண்மிய ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்தாலும் ,சர்வதேச அரங்கில் அதனை எதிரணியில் நிறுத்த வேண்டிய தேவை, சமகால அரசியல் சூழலில் பாதகமான நிலையினை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய நகர்வுகளில் ஈடுபடுவதனை இந்தியா தவிர்க்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் , சாதகமான சூழல் அல்லது கையறுநிலை ஏற்படும்வரை ,முதலீட்டு ஆதிக்க செயற்பாட்டினையும் இராஜதந்திர அனுசரணையையும் இந்தியா தொடர்ந்து வழங்குமென எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் வரவு-செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் , அமைப்புக்களுக்குமான உதவித் தொகையாக 5550 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கைக்கான இந்த வருடத்திற்கான உதவித் தொகையாக 500 கோடி ரூபாவை இந்தியா நிர்ணயித்துள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை அதன் பொருளாதார வகிபாகம்,இந்திய முதலீடு ,மற்றும் உதவித் தொகை என்பவற்றைவிட மிக அதிகமாகவிருக்கிறது.

சீனாவுடன் இலங்கை இறுதியாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை நோக்கினால்,அதன் கடனுதவி மதிப்பு 278.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதை அவதானிக்கலாம். 20 வருட தவணையில், 2 சதவீத வட்டியில் 200 மில்லியன் டொலர்களை சீனாவின் எக்ஸ்சிம் [EXIM] வங்கியும் 78.2 மில்லியன் டொலர்களை சீன அரசும் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையான புகையிரதப் பாதையை நிர்மாணிப்பதற்கு வழங்குகிறது.

இவைதவிர ஏற்கனவே 1.5 பில்லியன் டொலர்களை அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியிலும், மாத்தள விமான நிலையம், நுரைச்சோலை அனல் மின்நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக விரிவாக்கம் என்பவற்றில் கடனடிப்படையிலான அதீத முதலீடுகளையும் சீனா குவித்துள்ளது.

ஆனாலும் சென்மதி நிலுவையை [Balance of Payment] சரி செய்ய அல்லது வரவு-செலவுத் திட்டத்தில் வரும் குறையை நிரப்ப, இலங்கை கேட்ட 500 மில்லியன் டொலரை கொடுக்க சீனா மறுத்துவிட்டது. அதாவது அபிவிருத்தித் திட்டங்களுக்கு மட்டுமே தன்னால் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு.

பாரிய அபிவிருத்தி திட்டங்களில் பெருமளவு நிதியைக் கொட்டுவது, பின்னர் அதனை நிர்வகிக்க முடியாமல் அரசு தடுமாறும் போது, அவற்றை தமது கம்பனிகள் ஊடாக கையகப்படுத்துவது என்கிற பொருண்மிய ஆதிக்க தந்திரோபாயங்களை சீனா கையாள முயல்கிறதா என்பது குறித்து பிறிதொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும்.

ஐந்து தடவைகளுக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டு, இற்றைவரை இயங்கமுடியாமல் இருக்கும் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை சீன நிறுவனமொன்று கையேற்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தான் குவடோர் துறைமுகத்திற்கும் இந்நிலையே ஏற்பட்டது.

அடுத்ததாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தற்போதைய நிலையை நோக்கினால், நுழைவாசலில் நந்தி போல் குந்தியிருக்கும் பாரிய பாறை [Rock] ஒன்றினை அகற்றமுடியாமல் இலங்கை அரசு தவிப்பதைப் பார்க்கலாம். அதனை அகற்றத் தேவையான நிதிஉதவியினைச் செய்யுமாறு சீனாவிடம் கேட்டும் , மறுப்புத்தான் பதிலாக வந்தது.

இன்னொரு பக்கத்தில், மேற்குலகில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால், இந்து மா கடலின் ஊடாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து விட்டது.

இச்சரிவு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வருவாயை நிற்சயம் பாதிக்கும். இந்நிலையில் இந்தத் துறைமுகமும் 'குவடோர்' போன்று சீன நிறுவனமொன்றின் பிடிக்குள் விழக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதை நிராகரிக்க முடியாது.

ஆகவே சீனாவின் புதிய வகைப்பட்ட இத்தகைய தந்திரோபாயங்கள், இந்தியாவின் பொருண்மிய மேலாண்மை முயற்சியினை முறியடிக்கும் என்று நம்பலாம்.  ஆதலால், இலங்கை தனது கையை விட்டு நழுவிச் செல்லும் காலம் வரை, விடா முயற்சியை இந்தியா தொடரலாம்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை, சந்திரிக்கா-ரணில் இணைப்பு முயற்சிகள் , மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் போன்றவற்றின் ஊடாக ஆட்சி மாற்றமொன்றிக்கான அடித்தளங்களை உருவாக்க அமெரிக்கா முயலும்.

அதிகார இயந்திரத்தின் முக்கியமானதொரு பகுதியான இராணுவத்தை தண்டித்து எவரும் இலங்கையில் ஆட்சி செய்ய முடியாது. ஆகவே புதிய ஆட்சியாளர்களும் போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படமாட்டார்கள் என்பதையும் அமெரிக்க புரிந்து கொள்ளும்.

அதுவரை, வட-கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி விடும்.

- இதயச்சந்திரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்