நியூசிலாந்தில் சூறாவளி ஏற்படுத்திய தாக்கம்
6 பங்குனி 2023 திங்கள் 10:01 | பார்வைகள் : 6258
கொரோனா தொற்றுக் காரணமாக கடுமையான சுகாதார நடைமுறைகளை நியூசிலாந்து கொண்டிருந்தது. 2022ஆம் ஆண்டில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. அதனால், கோடை விடுமுறையைப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டுப்பயணம், பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை என ஊரே அமளிதுமளிப்பட்டது.
அத்தகையதொரு காலப்பகுதியிலேயே, நியூசிலாந்தில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டன.
முதலில், மழை வெள்ளம் ஏற்பட்டது. பின்னர், சூறாவளி தாக்கியது.
பொதுப்படையாகச் சொல்வதெனில், சீரான மழைவீழ்ச்சி கொண்ட நிலப்பரப்பாகவே நியூசிலாந்தைச் சொல்லலாம்.
மழை சீரான அளவுகளிலே பெய்கின்றது. மழை ஓய்கின்றபோது, சூரியவெளிச்சம் கிடைத்துவிடுகின்றது.
அதனால் மழையும் வெய்யிலும் மாறிமாறி வருகின்ற வரப்பிரசாதம் கிடைக்கின்றது.
மழைநீரை நிலம் உள்வாங்கிக் கொள்கின்றது. அந்தவகையிலே, விவசாயத்துக்கு உன்னதமான காலநிலை கிடைக்கின்றது.
அத்தகையதொரு வழமைக்கு மாறாக, ஜனவரி கடைசி வாரத்தில் கடுமையான மழை திடீரெனக் கொட்டித் தீர்த்தது.
வானம் கிழிந்துவிட்டது போன்று, இடைவெளியின்றி, மழை கொட்டியது. அதனால், மழைநீர் வழிந்தோடும் வாய்க்கால்கள் திணறின.
தாழ்வான பகுதிகளை, கண்ணிமைக்கும் பொழுதிலே, மழைவெள்ளம் சூழ்ந்துகொண்டது.
அதனால், வீட்டுக் கூரைகளில் ஏறி தப்பித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலைகூட சில பகுதிகளிலே ஏற்பட்டது. அதிவேக நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதனால் போக்குவரத்து முடங்கியது.
மலையும் மலைசார்ந்த நிலபரப்பே நியூசிலாந்தாகும். அதனால், சில உயரமான நிலப்பகுதிகளிலே இடையறாத மழைப்பொழிவு நிலச்சரிவையும் ஏற்படுத்தியது.
மழைப்பொழிவின் வீரியத்தை தோராயமாகச் சொல்வதெனில், ஒருவருடத்துக்கு கிடைக்கவேண்டிய மழையின் அளவில் அரைவாசி, 2023ஆம் ஆண்டின் தை மற்றும் மாசி மாதங்களில் கிடைத்திருக்கின்றது.
மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புக்களிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருந்த வேளையிலேயே, “பட்டகாலே படும்” என்பதுபோன்று சூறாவளி தாக்கியது.
மழைவெள்ளம் திடீரென ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படவில்லை.
ஆனால், சூறாவளி தொடர்பான சமிக்ஞை முன்கூட்டியே கிடைத்திருந்தது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன.
சூறாவளியினால் வீடுகள் சேதமடைந்தோர் தங்குவதற்கான, இடைக்கால தங்குவசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
அதிகம் பாதிப்பைப் பெறக்கூடியன எனக் கணிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஒருவாரத்துக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தயார்ப்படுத்தி வைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இவ்வாறாக, தயார்படுத்தல் நடவடிக்கைகள் சுமார் ஒருவாரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அந்தவகையிலே, சூறாவளியை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார்படுத்தப்பட்டனர்.
சூறாவளி வீச ஆரம்பித்தபோது ஏற்படுத்திய தாக்கங்களை வர்ணிப்பது எளிதானதல்ல.
தென்துருவத்திலே, பசுபிக் பெருங்கடலிலேயுள்ள இரண்டு தீவுகளைக் கொண்ட தேசமே நியூசிலாந்தாகும். அவை வடக்குத்தீவு மற்றும் தெற்குத்தீவு என அழைக்கப்படுகின்றன. மொத்தச் சனத்தொகை ஐந்து மில்லியனாகும். தலைநகராக வெலிங்டனும், பெருநகராக ஆக்லாந்தும் காணப்படுகின்றன.
சுவாத்தியத்தைப் பொறுத்தவரையில் தென்துருவப் பக்கமாகவுள்ள தெற்குத்தீவு அதிகம் குளிரானதாகவும், வெப்பமண்டலப் பக்கமாகவுள்ள வடக்குத்தீவு குளிர் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. அதேவேளையில், வடக்குத்தீவு வெப்பமண்டலத்தில் உருவாகின்ற சூறாவளியை எதிர்கொள்கின்ற நிலப்பரப்பாகவும் காணப்படுகின்றது.
உலகிலேயே பாரிய சூறாவளியை ஏற்படுத்தக்கூடிய வெப்பமண்டலக் கடல் பிரதேசங்களாக வடஅட்லாண்டிக் பெருங்கடல், பசுபிக் பெருங்கடலின் கிழக்கு, மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள், இந்திய பெருங்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள் காணப்படுகின்றன.
அந்தவகையிலே, பசுபிக் பெருங்கடலின் வெப்பமண்டலத்தில் ஏற்படக்கூடிய சூறாவளியின் பார்வைத் தடத்திலேயே நியூசிலாந்து அமைந்திருக்கின்றது. வருடத்தில் கார்த்திகை முதல் சித்திரை வரையான காலப்பகுதியே சூறாவளிக் காலமாக அடையாளமாகின்றது. அதிலேயும்கூட, மாசி-பங்குனி மாதங்களே உக்கிரமான சூறாவளிக் காலமாகும்.
ஒவ்வொரு ஆண்டு சூறாவளிக் காலத்திலும், பத்து வரையான சூறாவளிகள் பசுபிக் பெருங்கடலிலே உருவாகின்றன. அவற்றிலே பெரும்பாலானவை, நியூசிலாந்து நிலபரப்புக்கு வெகுதொலைவிலேயே உக்கிரத்தை இழந்து விடுகின்றன.
அதனால், நியூசிலாந்து நிலப்பரப்புக்கு வருகின்றபோது காற்றுடன் கூடிய கனமழை என்ற வகையிலேயே கடந்து விடுகின்றன. அவ்வப்போது விதிவிலக்குகளும் ஏற்பட்டுவிடுகின்றன.
1968இலும் 1988இலும் மிகக் கடுமையான சூறாவளி நியூசிலாந்தைப் பாதித்தன. அதன்பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் மெலிதான சூறாவளிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், 2023 சூறாவளியே அண்மைக்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகின்றது.
சூறாவளியின் உக்கிரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, இயல்பாக ஏற்படக்கூடிய லாநினோ பருவநிலையாகும். மற்றயது, புவிவெப்பமடைதலுடன் கூடிய காலநிலையாகும். இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் வாதப்பிரதிவாதங்களை நிறையவே காணமுடிகின்றது.
லாநினோ பருவநிலை இயல்பானதாகும். அதேசமயத்தில் புவிவெப்பமடைதல் காலநிலையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் யதார்த்தமானதாகும். காலநிலை மாற்றம் குறித்து, உலகெங்கிலும், துறைசார்வல்லுனர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை சாதரணமானவர்களை உள்ளார்ந்தவகையில் சென்றடைகின்றதா என்பது விடைதெரியாத கேள்வியாகும்.
ஆனால், காலநிலை மாற்றத்தை சாமானியர்களும் புரிந்துகொள்வதற்கு கொரோனாப் பொதுமுடக்கம் வாய்ப்பாகியது. சூழல் மாசடைகின்றது. அதனால் இயற்கையின் சமநிலை உடைக்கப்படுகின்றது .உயிரினங்கள் அழிகின்றன. கூடவே அழிக்கப்படுகின்றன. விளைவு: அனர்த்தங்கள் அதிகரிக்கின்றன.
அந்தவகையிலேயும், நியூசிலாந்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் வீரியம் கவனிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் தொடர்பான சிந்தனை, சாமானியர்களிடையே, தூண்டப்பட்டிருக்கின்றது. அதுவே நியூசிலாந்தில் சூறாவளி ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் எனலாம்.
நன்றி வீரகேசரி