அமேசானில் மனிதர்களுக்கு பதிலாக இயங்கும் இயந்திர மனிதக் கருவிகள்
13 கார்த்திகை 2022 ஞாயிறு 04:08 | பார்வைகள் : 7661
மாசசூசெட்ஸ் போஸ்டன் (Massachusetts, Boston) புறநகரில் உள்ள அமேசானின் (Amazon) இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்ப ஆய்வகத்தில், நிறுவனத்தின் "Sparrow” எனும் மனிதக் கைக்குரிய திறமைக் கொண்ட இயந்திரம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டுகிறது.
இது அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலையை விரைந்து செய்யக்கூடிய மேம்படுத்தப்பட்ட கருவியாக இருக்கிறது.
அதாவது ஆண்டுதோறும் ஊழியர்கள் செய்யும் 5 பில்லியன் பொட்டலங்களை வரிசைப்படுத்தி அனுப்பும் திறன் அதற்கு உண்டு.
"Sparrow”வுடன் சேர்த்து "Robin”, "Cardinal” போன்ற பிற இயந்திரக் கருவிகளின் வளர்ச்சியானது அமேசான் கிடங்குகள் இயந்திரங்களால் இயக்கப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அது ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கலாம் என்ற அச்சம் ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
என்றாலும் தொழிலாளர் சங்கங்கள் வெளிப்படுத்திய அந்தக் கவலையை அமேசான் மனித இயந்திரக் கருவித் தொழில்நுட்பத் தலைவர் டை பிராடி (Tye Brady) மறுத்துள்ளார்.
ஊழியர்களின் இடங்களை இயந்திரங்கள் நிரப்பாது; மாறாக இயந்திரங்களும் மனிதர்களும் ஒத்துழைத்து ஒரு வேலையைச் செய்வதாக அது அமையும் என அவர் கூறினார்.
கேமராக்களும் உருளைக் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ள “Sparrow” பல்வேறு வடிவங்கள், அளவுகள் கொண்ட மில்லியன் கணக்கான தயாரிப்புகளில் ஒரு தனிப்பட்ட பொருளை வெற்றிகரமாகக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கும்.
தனது இயந்திரக் கையைப் பயன்படுத்தி பொருள்களை எடுத்து முன்னால் இருக்கும் பொருத்தமான கூடைக்குள்ளும் அது போடும்.
இந்தக் கண்டுப்பிடிப்பின்வழி மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளிலிருந்து ஊழியர்களை விடுவிக்கும். அவர்களது பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்றும் பிராடி குறிப்பிட்டுள்ளார்.