கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - பொது மக்களுக்கு எச்சரிக்கை
30 ஆனி 2022 வியாழன் 19:15 | பார்வைகள் : 14380
உளவு பார்க்கும் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களுக்கு சேவை வழங்கும் செயலிகள் போல் அறிமுகமாகி, தனிநபர் தகவலை திருடும் மோசடி வேலைகளில் ஈடுபடத் தொடங்குகின்றன. இது கவனக்குறைவாக பயன்படுத்தும் மக்களுக்கு தெரிவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இதன்மூலம் ஏற்படப்போகும் பேராபத்துக்களும் தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்,. அதேநேரத்தில் இத்தகைய செயலிகளை அடையாளம் கண்டு, பயன்பாட்டை நீக்க கூகுள் மக்களுக்கு உதவுகிறது.
அந்தவகையில் மக்களை உளவு பார்க்கும் மோசடி செயலி ஒன்றை கூகுள் லேட்டஸ்டாக கண்டுபிடித்துள்ளது. ஸ்லைஸ் ஆப் (Slice App) பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை உளவு பார்க்க முயற்சித்துள்ளது. இதனை யூசர்களின் தரவைத் திருட முயற்சிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறிய உதவும் Google Play Protect, ஸ்லைஸ் செயலியின் செயல்பாட்டைக் கண்டுபிடித்துள்ளது. அடிக்கடி இந்த செயலியின் பயன்பாடு சந்தேக வளையத்திற்குள் வந்ததையொட்டி உளவு செயலி என அடையாளப்படுத்தியுள்ளது.
ஸ்லைஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் உள்ளிடவைகளை உளவு பார்த்துள்ளது. தனிப்பட்ட அழைப்பு வரலாற்றையும் அணுக முயற்சி செய்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த கூகுள் பிளே புரோடக்ட், இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அந்த செயலியை ஓபன் செய்தவுடன் கூகுள் பிளே புரோடக்டுக்கு அழைத்துச் சென்று எச்சரித்துள்ளது. அத்துடன், உடனடியாக டெலிட் செய்யுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
கூகுளின் இந்த அறிவிப்புக்கு டிவிட்டரில் ஸ்லைஸ் ஆப் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செயலியில் இருந்த தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆண்டிராய்டு பதிப்பில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்த 4 மணி நேரத்துக்குள் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஸ்லைஸ் செயலியில் இந்த பிரச்சனை இருந்தால், ஒருமுறை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஸ்லைஸ் அப், வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதிப்பு விஷயத்தில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. தனியுரிமை தகவலை எடுப்பதில் உடன்பாடில்லை எனக் கூறிய அந்த செயலி, இனி வரும் காலங்களில் இத்தகைய தவறு நடக்காது எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளது.