Paristamil Navigation Paristamil advert login

டெலிகிராம், சிக்னல், ஹைக், வைபரில் எது சிறந்தது?

டெலிகிராம், சிக்னல், ஹைக், வைபரில் எது சிறந்தது?

11 தை 2021 திங்கள் 12:43 | பார்வைகள் : 9418


வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகள் தொடர்பான சர்ச்சை, மாற்று மெசேஜிங் சேவைகள் தொடர்பான விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. பிரைவசி கவலையால் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேற விரும்பினால், எந்த மெசேஜிங் சேவையை தேர்வு செய்யலாம் எனும் கேள்விக்கு விடை காண, மாற்று மெசேஜிங் செயலிகளான 'டெலிகிராம்', 'சிக்னல்', 'ஹைக்', 'வைபர்' முதலானவற்றின் பாதுகாப்பு - பிரைவசி அம்சங்களைப் பார்ப்போம்.
 
டெலிகிராம்: 'வாட்ஸ்அப்'புக்கு மாற்றாக முன்வைக்கப்படும் செயலிகளில் முதலில் வருவது 'டெலிகிராம்'. இந்த செயலி ஏற்கெனவே இந்திய பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. பாதுகாப்பு நோக்கில் பார்த்தாலும் சரி, சேவை அம்சங்கள் நோக்கில் அணுகினாலும் சரி, 'டெலிகிராம்' ஏற்றதாக அமைகிறது.
 
'வாட்ஸ்அப்' போலவே, இதிலும் நண்பர்களுடன் உரையாடலாம், குழு உரையாடலை மேற்கொள்ளலாம். தனி சேனல்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால், 'வாட்ஸ்'அப் குழுவில் 256 உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்க முடியாது. டெலிகிராமில் 2 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம்.
 
வாக்கெடுப்பு, புதிர்கள் போன்ற துணை வசதிகளோடு, பாட் எனப்படும் பல்வேறு இணைய மென்பொருள்களை வழங்குவதுதான் டெலிகிராமின் தனித்தன்மை.
 
டெலிகிராமில் ஆடியோ, வீடியோ, பிடிஎப் கோப்புகளை தாராளமாக பகிரலாம். 1.5 ஜிபி அளவு கோப்புகளை பகிர வழி செய்கிறது. இந்த வசதியை பயன்படுத்திதான் நம்மூரில் பலரும் இலவச பிடிஎப்களை உலாவ விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 
டெலிகிராம் 'என்கிப்ரிஷன்' வசதி அளிப்பதால் பாதுகாப்பானது. ஆனால், இந்த வசதியை தேர்வுசெய்ய வேண்டும். உறுப்பினர்களிடையே ரகசிய உரையாடல் மேற்கொள்ளும் வசதியும் அளிக்கிறது. செய்திகள் தானாக மறையும் வசதியும் உண்டு. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம்.
 
இதன் சர்வர்கள் உலகம் முழுவதும் அமைந்திருப்பதால், ஓவர்லோடு பிரச்னை இருக்காது. பயனாளிகள் பெயர், போன் எண், தொடர்புகள் மற்றும் பயனாளி அடையாளம் ஆகிய தகவல்களை மட்டும் பெறுகிறது.
 
ரஷ்யாவைச் சேர்ந்த டுரோவ் (Nikolai, Pavel Durov) சகோதரர்களால் இந்த சேவை துவக்கப்பட்டது. தகவல்களை மூன்றாம் தரப்பு அணுகும் விஷயத்தில் டெலிகிராம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. அரசு அமைப்புகள் கூட, இதனிடம் இருந்து தகவல் பெறுவது அத்தனை சுலபம் இல்லை. இதன் காரணமாக ரஷ்யாவில் இந்த செயலி கடும் சிக்கலை சந்தித்துண்டு. செயற்பாட்டாளர்கள், போராளிகள் விரும்பி பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் உண்டு. ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டது என்பதால், நிறுவன மேலாதிக்கம் குறைவு. 
 
சிக்னல்: ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் 'சிக்னல்' செயலி பாதுகாப்பு மற்றும் பிரைவசி நோக்கில் சிறந்தது என கருதப்படுகிறது. லாப நோக்கில்லாத 'சிக்னல்' பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. ஓபன் சோர்ஸ் சார்ந்தது. பரிமாறப்படும் செய்திகள் மற்றும் அவை சார்ந்த துணை தகவல்களுக்கு என்கிரிப்ஷன் வசதி அளிக்கிறது. இதன் என்கிரிப்ஷன் அமைப்பைதான் 'வாட்ஸ் அப்' பயன்படுத்துகிறது.
 
செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரால் விரும்பி பயன்படுத்தப்படும் செயலி. கட்டுப்பாடான சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம். பயனாளிகள் பிரைவசியை மதிப்பதாக கூறுகிறது. போன் எண் தவிர எந்த தகவல்களையும் சேகரிப்பதில்லை. முக்கியமாக வர்த்தக நோக்கில் பயனாளிகள் தகவல்களை பயன்படுத்துவதில்லை.
 
பயனாளிகள் குறிப்பெழுதி தங்களுக்கு தாங்களே அனுப்பிக்கொள்ளும் வசதியும் அளிக்கிறது. அழைப்புகளின்போது கண்டறியப்படாமல் இருக்க ரிலே வசதியை பயன்படுத்தலாம்.
 
இணைய வழி கண்காணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும், அமெரிக்க கிளர்ச்சியாளர் எட்வர்டு ஸ்னோடனே இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது என சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
 
ஹைக்: ஹைக் மெசஞ்சர் நம்மூர் செயலி. கவின் பார்தி மிட்டலால் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் இது. மற்ற மெசேஜிங் சேவைகள்போல அல்லாமல், எஸ்.எம்.எஸ் மூலம் ஆப்லைனிலும் செயல்படக்கூடியது.
 
அண்மையில், செயலியில் வீடியோ சந்திப்புகளுக்கான ஹைக்லாந்து வசதியை அறிமுகம் செய்தது.
 
500 உறுப்பினர்கள் வரை குழுவில் சேர்த்துக்கொள்ளலாம். உரையாடல்களை ரகசியமாக மேற்கொள்ள ஹிடன் மோடு வசதியும் உள்ளது. கோப்புகளை எந்த வடிவிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணைப்பு: 
 
வைபர்: பிரைவசிக்கு மதிப்பு அளிக்கும் மெசேஜிக் செயலி. எல்லா வகை போன்களிலும் பயன்படுத்தலாம். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு. இலவச சேவை என்றாலும் விளம்பரங்கள் இடம்பெறலாம்.
 
ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வசதி மற்றும் செய்திகள் மறையும் வசதியும் அளிக்கப்படுகிறது. ஸ்கிரீன் லாக் உள்ளிட்ட அம்சங்களும் உண்டு. 
 
பயனாளிகளிடம் இருந்து பலவிதமான தகவல்கலை திரட்டுகிறது, 'ரகுடேன்' (Rakuten) எனும் ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானது. போன் எண், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், பரிவர்த்தனை தகவல்களும் இதில் அடங்கும்.
 
'லைன்' (https://line.me) என்ற கிழக்காசிய நாடுகளில் பிரபமான செயலி ஒன்று உள்ளது. போன்கள், கம்ப்யூட்டர், டேப்லெட் என
எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். வரி வடிவ செய்திகள், ஆடியோ - வீடியோ செய்திகளை பகிரலாம். ஸ்டிக்கர் அம்சம் போன்றவற்றை பிரபலமாக்கிய செயலி. இது, தென்கொரியாவின் கூகுள் என அழைக்கப்படும் நேவர் தேடியந்திரத்தின் ஜப்பானிய துணை நிறுவனமான லைன் கார்ப்பரேஷனால் நடத்தப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்