டிக் டாக்கை விலைக்கு வாங்கும் மைக்ரோசாப்ட்..!
1 ஆவணி 2020 சனி 12:47 | பார்வைகள் : 9322
அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வரும் நிலையில், அதை விலைக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
கால்வன் மோதலையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் நூற்றுக்கு மேற்பட்ட செல்பேசிச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதேபோல் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலியைத் தடை செய்யப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டைச் சில நூறு கோடி டாலர்களுக்கு விலைக்கு வாங்கச் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் பேச்சு நடத்தி வருவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சில் பைட் டான்ஸ், மைக்ரோசாப்ட், அமெரிக்க அதிபர் மாளிகை பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளதாகவும், திங்கட்கிழமைக்குள் உடன்பாடு எட்டப்படும் என்றும் இது குறித்துத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.