டிக் டாக் உள்ளிட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கும் அமெரிக்கா?
17 ஆடி 2020 வெள்ளி 08:19 | பார்வைகள் : 8818
இந்தியாவைப் பின்பற்றி டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் செல்பேசிச் செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் டொனால்டு டிரம்புக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க மக்களின் தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் செயலிகள், சமூக வலைத்தளங்கள் பாதுகாக்கும் என்பதை நம்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் செல்பேசிச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பயனாளர்களின் தரவுகளைச் சேகரித்துச் சீன அரசின் தேவைகளுக்குப் பயன்படுத்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அமெரிக்கர்களின் தனியுரிமையையும், நாட்டின் பாதுகாப்பையும் காக்கச் சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதிப்பது பற்றி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.