இனி பணம் இன்றி முகம் மூலம் பணம் செலுத்தலாம்!
4 புரட்டாசி 2019 புதன் 16:36 | பார்வைகள் : 8915
சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் கருவியில் கடவு எண்ணை பதிவிடும்போது, அதை அருகில் உள்ளவரோ, கேமரா மூலமோ கண்காணித்து பணத்தை திருடுதலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள முகத்தைக் காட்டி பணம் செலுத்தும் முறையை பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்துகின்றன.
ஐஃபியூரி எனும் முப்பரிமாண கேமரா, ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் வாடிக்கையாளரின் முகத்துடைய உயரம், அகலம் உள்ளிட்ட அம்சங்களை கணித்து, பணம் செலுத்தும் இடத்தில் அவரது முகத்தை மட்டும் காட்டும் போது அவரது வங்கிக் கணக்கு தகவலைத் திரட்டி பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அலிபாபா குழுமத்தின் அலி பே என்ற ஐபேட் அளவிலான பாய்ன்ட் ஆஃப் சேல் இயந்திரத்தில் ஸ்மைல் டு பே எனும் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே பல கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மைல் டு பே எனும் முறை, விரைவில் பல கடைகளில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பணத்துக்காக கேமரா முன் முகத்தைக் காட்டுவது அசிங்கம் என 60 சதவீத பயனாளர்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, கேமராவில் பியூட்டிஃவை எனும் அழகுப்படுத்திக் காட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக அலி பே விளக்கமளித்துள்ளது.
மேலும் இது ஒரு வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களை அறிந்து அவரவர் விருப்பத்துக்கேற்ப சந்தைப்படுத்த உதவும் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அரசியல் எதிரிகள், சமூக செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அரசு பயன்படுத்திக் கொள்ளும் என ஒரு சிலர் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.