அச்சத்தை ஏற்படுத்தியுள்ள FaceApp செயலி!
21 ஆடி 2019 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 9446
உலக அளவில் FaceApp செயலி பிரபலம் அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவருடைய முகத்தை வயதானவரைப் போல மாற்றுகிறது.
அது குறித்த அச்சமும் மக்களிடையே கடந்த வாரம் முதல் எழுந்துள்ளது. தகவல்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா? என்ற கவலைதான் அது.
செயலியின் விதிமுறைகளின்கீழ் வர்த்தக நோக்கத்திற்குப் படங்களைப் பயன்படுத்த FaceApp செயலிக்கு அனுமதி உள்ளது.
அது அந்தரங்கம் தொடர்பான அச்சத்தை எழச் செய்வதாக McAfee என்னும் பாதுகாபபு மென்பொருள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய வர்த்தகத் தலைவர் CNA கேட்ட கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.
பயனீட்டாளர்கள் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளும்போது, அந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் தகவல்களைச் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மைத் தலைவர் சக் ஷூமர் (Chuck Schumer) அது பற்றிக் குறைகூறினார்.
தேசியப் பாதுகாப்பு, தனிநபர் அந்தரங்கம் ஆகியன தொடர்பில் FaceApp செயலி நிறுவனத்திடம் அமெரிக்க மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகளும் FaceApp செயலி குறித்து அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் குறிப்பிட்டார்.