Mobile பயன்படுத்தினால் தலையில் ‘கொம்பு’ முளைக்கும்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை
29 ஆனி 2019 சனி 02:54 | பார்வைகள் : 2104
மொபைல் போன்களை நீண்ட காலமாக பயன்படுத்துபவர்களுக்கு மண்டையோட்டில் மேல் நோக்கி எலும்பு ஒன்று வளர்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, குடிநீரை அடுத்து உயிர்வாழ அத்தியாவசியமாக ஆக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் நமது வேலையை ஒருபக்கம் எளிதாக்கினாலும், உடலளவிலும், மனதளவிலும் சில பாதிப்புகளை கண்டிப்பாக அளித்தே தீருகிறது. இதனை, பல்வேறு ஆய்வுகள் தரவுகளுடன் நிரூபித்துள்ளன.
இந்நிலையில், நீண்ட காலம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் உடலின் தலைப்பகுதியில் இருக்கு மண்டையோட்டில் எலும்பு வளர்ச்சி இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். பயோமெக்கானிக்ஸ் (உயிர் விசையியல்) அடிப்படையில் உடலின் இயக்கத்தை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துள்ளனர்.
ஆய்வின் முடிவில், மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்களின் தலையின் பின்புறம் மண்டையோட்டில் கொம்பு போன்ற கூரான எலும்பு வளர்வதை கண்டறிந்துள்ளனர்.
மொபைல் போன்களை பயன்படுத்தும் போது, அதன் தொடுதிரையை பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டியதுள்ளது. இதனால், தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாறுகிறது. இதனால், எலும்பு தசை நாண்கள், தசைநார்கள் வளர்கின்றன.
மேற்கண்ட மாற்றத்தால் மண்டை ஓட்டுக்கு பின்புறத்தின் உட்பகுதியில் கொம்பு போன்ற எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வின் முதல் அறிக்கை 2016 ஆண்டே வெளியிடப்பட்டது.
18 முதல் 30 வயது உள்ளவர்களில் 218 பேரை தங்களது ஆய்விற்குள் உட்படுத்திக்கொண்டனர். முதலில், அவர்களது தலைகள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த 218 பேரின் தலையையும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது எக்ஸ்-ரே எடுத்து முன்பு இருந்த மண்டையோட்டு அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில்,இதில் 41 சதவிகித்தினருக்கு, இந்த எழும்பு வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மண்டையோட்டில் எலும்பு வளர்வதை உறுதி செய்கிறது. நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் தங்களது தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் அதனை உணரலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.