WhatsApp செயலியில் ஏற்பட்டுள்ள புதிய பிழை!
14 தை 2018 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 9152
ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் அம்சத்தில் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட்களில் க்ரூப் அட்மின் உத்தரவின்றி மற்ற நபர்களை சேர்க்க முடியும் என ஜெர்மன் நாட்டு ஆராயாச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையான என்க்ரிப்ஷன் சேவையை வழங்கி வரும் வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற க்ரிப்டோ பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி வாட்ஸ்அப் சர்வர்களை இயக்கும் வசதி கொண்டவர்கள், வாட்ஸ்அப் க்ரூப்களில் அட்மின் உத்தரவின்றி நேரடியாக மற்றவர்களை சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் க்ரூப்களில் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் அட்மின் உத்தரவின்றி சேர்க்கப்படும் புதிய நபரால் முழுமையாக படிக்க முடியும்.
இவ்வாறு அட்மின் உத்தரவின்றி, க்ரூப் சாட்டில் நுழையும் புதிய நபர், குறிப்பிட்ட க்ரூப் சாட்களை முழுமையாக படிக்க வழி செய்யும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரின் தனியுரிமையை வெகுவாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. க்ரூப்களில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய நபர் மற்றவர்களுக்கு க்ரூப் அட்மின் மூலம் சேர்க்கப்பட்டதாகவே தெரியும்.
வாட்ஸ்அப் சர்வர்களை அந்நிறுவன ஊழியர்கள், சட்ட பூர்வமாக அனுமதி கோரும் அரசு அதிகாரிகள் மற்றும் உயர்-ரக ஹேக்கர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இயக்க முடியும். இதுகுறித்து வாட்ஸ்அப் தலைமை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் ஸ்டமோஸ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'வாட்ஸ்அப் குறித்து வையர்டு எழுதியிருக்கும் பயப்பட வைக்கும் செய்தியை படியுங்கள். வாட்ஸ்அப் க்ரூப் சாட்களை ரகசியமாக யாராலும் இயக்க முடியாது.' என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் க்ரூப் சாட்களில் புதிய நபர் சேர்க்கப்படும் போது க்ரூப் சாட் செய்யும் அனைவருக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.