Paristamil Navigation Paristamil advert login

நீலத்திமிங்கல விளையாட்டில் இருந்து வெளியேற வழி உண்டு

நீலத்திமிங்கல விளையாட்டில் இருந்து வெளியேற வழி உண்டு

25 புரட்டாசி 2017 திங்கள் 11:57 | பார்வைகள் : 8479


நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்...
 
ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நிச்சயம் அதில் இருந்து மீண்டு வர முடியும். நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் உள்ளே நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்...
 
நீலத்திமிங்கல சவால் விளையாட்டில் முதலில் கையில் பிளேடால் கீறவும், அதிகாலையில் எழுந்து தனிமையில் பேய்ப்படம் பார்க்கவும் என்பதுபோன்ற சாதாரண சவால்கள் கொடுக்கப்படுகிறது. தனிமையில் செய்துகொள்ளும் வித்தியாசமான சவால்களை அவர்கள் நமக்கு எதிராக மிரட்டல் ஆதாரமாக சேகரித்துக் கொள்கிறார்கள். அப்படி மிரட்டியே அடுத்தடுத்த கட்டளைகளுக்கு பணிய வைப்பார்கள்.
 
சிலர் சின்னச்சின்ன சவாலில் ஜெயிப்பவர்கள், விளையாட்டில் தீவிரமாகி, உளப்பூர்வமாக அடிமையாகிவிடுகிறார்கள். தானே மிகப்பெரிய திமிங்கலம் (சிறந்த சாதனையாளர்) என்ற மாய எண்ணத்தை உருவாக்கி, தன்னைப்போல யாரும் சாதனை செய்ய முடியாது என நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் உயிரை விடுவதையும் ஒரு சவாலாக நினைத்து துணிந்துவிடுகிறார்கள். அதனால்தான் இறந்துபோன பலரும், ‘என் சாதனையை பார்க்க நான் இருக்க மாட்டேன்’ என்றும், ‘என்னுடைய படம் மட்டுமே உங்களிடம் மீதமிருக்கும்’ என்ற வகையிலும் வாக்குமூலம் எழுதிவிட்டு போயிருக்கிறார்கள்.
 
நீங்கள் நீலத்திமிங்கல விளையாட்டில் சிக்கியிருப்பவர் என்றால், உங்களை கீழ்க்காணும் உளவியல் சாவல்களே அதில் இருந்து மீட்டுக் கொண்டு வரும். நீங்கள் இதை சாதித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்...
 
 
1. “நான் வலிமையானவன், என்னால் எதுவும் முடியும், நான் நினைப்பதை செய்து முடிப்பேன்” என 50 முறை எழுதுங்கள்.
 
2. காலையில் 10 மணி வரை தூங்கி எழுங்கள். எழுந்ததும் ஜன்னலைத் திறந்து ‘எத்தனை இனிமையான உறக்கம், எத்தனை இனிமையான வாழ்வு’ என்பதை நினைவு கொள்ளுங்கள்.
 
3. சூரியன் மறையும் அஸ்தமன வேளையில் கடற்கரையில் காற்று வாங்க நடைபோடுங்கள், இனிமையான இசையை கேட்டுக் கொண்டே பயணித்தாலும் தவறு இல்லை.
 
4. உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும், சிக்கன் பிரியாணியா? மசால் தோசையா? அதை ஓட்டலில் சென்றுதான் ருசிக்க வேண்டுமா? உங்களால், உங்களுக்குப் பிடித்த உணவை செய்துவிட முடியுமா? அந்த சவாலைச் செய்து முடித்தால், ஓட்டல் போலவே சுவையாக தயாரித்துவிட்டால் நீங்கள்தான் சவாலில் வென்றவர். எங்கே உங்கள் திறமையைச் சோதிக்க, உணவை ருசித்துப் பார்க்க நாங்களும் வரட்டுமா?
 
5. இரைச்சல் இல்லாத இயற்கையின் இசையை கேட்டிருக்கிறீர்களா? அதிகாலை வேளையில் எழுந்து அமைதியான பாதையில் நடந்து இயற்கையின் பாஷையை ஒரு கவிதையாக வடியுங்கள். உங்கள் வலைத்தளத்தில் அதை பதிவிட்டு, லைக்ஸ் அள்ளுங்கள்.
 
6. இந்த சவால் மிகக் கடினமானது. இதை சாதித்தால் உங்களை வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது. நீங்கள் நிஜமாகவே நீல திமிங்கலம்தான். இதுதான் சவால்... ‘நீங்கள் வழக்கமாகச் செல்லும் வழியிலேயே செல்லுங்கள். அடிக்கடி சந்தித்தும், அறிமுகம் இல்லாத 5 பேரிடம் பேச்சு கொடுங்கள். உங்களால் அறிமுகத்தைத் தாண்டி பேச முடிகிறதா? நீங்கள் யார், அவர் யார்? என்பதை உணர்கிறீர்களா? அவரது திறன் நீங்கள் மதிப்பிட்டதுபோல இருக்கிறதா? இல்லை அவர் பிரமிப்பான மனிதராக தோன்றுகிறாரா? உங்களால் இரண்டொரு வார்த்தைகளுக்குமேல், ஒரு நிமிடத்திற்கு மேல் உரையாட முடியவில்லையா? என்பதைச் சோதியுங்கள். அந்த அறிமுக உரையாடல் நட்பாகத் தொடரும்வகையில் நீங்கள் நல்ல பண்பாளர் என்றால் நீங்கள்தான் நிஜமான நீலத்திமிங்கலம். உங்களைப்போல் பிரமாண்டமானவர் எவரும் இல்லை என கர்வம் கொள்ளுங்கள். அந்த சவாலில் தோற்றுப் போனால், நாளை மீண்டும் புதிய மனிதர்களை சந்தியுங்கள். பழக்க வழக்கத்தை மேம்படுத்தி சாதித்துக் காட்டுங்கள்.
 
7. மற்றவரிடம் பேசுவதே இவ்வளவு பெரிய சவாலாக இருக்கும்போது, இது அதைவிடவும் பெரிய சாதனை. சவாலுக்கு தயாராகிறீர்களா? இதோ சவால், “வாழ்க்கையில் நீங்கள் சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்களா? அல்லது வாழ்க்கை உங்களை புறக்கணித்துவிட்டதாக நினைக்கிறீர்களா? வாழ்க்கை உங்களை ஒதுக்கியிருக்கிறது என நினைத்தால், வாழ்க்கை என்னை புறக்கணிக்க என்ன காரணம், என்ன இருந்தால் வாழ்க்கையை நான் வெல்ல முடியும் என்று சிந்தித்து சவால் விடுங்கள். வாழ்க்கையிடம் நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள் நானும் ஒரு நிஜ திமிங்கலமென்று! சவாலில் ஜெயித்து, வசதியாய் வாழ்ந்து காட்டுங்கள். நீலத்திமிங்கலமாய் நிமிர்ந்து நில்லுங்கள். இப்போதுதான் நீங்கள், “நானே நீலத்திமிங்கலமென்று” கர்ஜிக்க சரியான நபர்.
 
இந்த கட்டளைகள் அனைத்தும் சாதாரணமாகத் தோன்றினாலும், சாதிக்க மிகக் கடினமானவைதான். வாழ்ந்து சாதிக்க முடியாதவர்கள்தான், வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். நீலத்திமிங்கல விளையாட்டிற்குள் நுழைந்துவிட்டு மன இறுக்கத்தில் இருப்பவர்களை மீட்பதற்காக மனோதத்துவ ரீதியில் உருவாக்கப்பட்டவை இந்த சவால்கள். முடிந்தால் இதில் ஜெயித்துக் காட்டுங்கள்.
 
இன்னும் உரக்க சவால்விடுவதென்றால், நீலத்திமிங் கல விளையாட்டை உருவாக்கிய பிலிப் பியுடெய்க்கின் வாக்குமூலத்தை கவனியுங்கள்... “வாழத் தகுதியற்றவர்களை இந்த சமூகத்தில் இருந்து களையெடுக்கவே என் விளையாட்டு” என்பதே அவரின் திமிர் வாக்குமூலம். உங்களை வாழத் தகுதியற்றவன் என்று இழிவுபடுத்தும் அவனது வார்த்தைகளை நிறைவேற்றுவதுதான் உங்கள் வாழ்நாள் சாதனையா? என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க மீண்டும் ஒருமுறை அர்த்தமுள்ள சவால் பட்டியலை படித்து நிறைவேற்றுங்கள்! வெற்றியுடன் சந்திப்போம்! 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்